அமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு, நாட்டுக்கு ஆபத்தானது என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இலங்கையைத் தமது விநியோக தேவைக்காக, அமெரிக்க கடற்படை பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள், வெளிவந்திருக்கின்றன.
இந்தியப் பெருங்கடலின் மேற்குப் பக்கத்தில், அரபிக் கடலில் நிலைகொண்டு, ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அமெரிக்க கடற்படையின், ‘யு.எஸ்.எஸ் ஜோன் சி ஸ்டெனிஸ்’ என்ற விமானந்தாங்கிக் கப்பலுக்கு, கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து, விநியோகப் பொருட்களைக் கொண்டு செல்லும் நடவடிக்கைககள், கடந்த 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
எதிர்வரும் 29ஆம் திகதி வரை, இந்த விநியோக நடவடிக்கைகள் தொடரப் போவதாகவும் அதற்குப் பின்னர், இந்த விநியோக நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அமெரிக்கப் படையினரோ, இராணுவத் தளவாடங்களோ, வேறெந்த வசதிகளோ, இலங்கையில் இருக்கமாட்டாது என்றும் அமெரிக்கா கூறியிருக்கிறது.
அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுக்கான விநியோகங்கள் இடம்பெறும் காலப்பகுதியில், அமெரிக்கப் படையினர், அவர்களின் இராணுவத் தளவாடங்கள், ஏனைய பொருட்கள், இலங்கையில் தற்காலிகமாகத் தங்கியிருப்பதற்கான வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதே, இதன் அர்த்தம். கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக, விமானங்களின் மூலம், அமெரிக்க கடற்படைக் கப்பலுக்கான விநியோகம், மேற்கொள்ளப்படுவது இது மூன்றாவது முறை.
முதலாவதாக, கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்த விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இத்தகையதோர் உடன்பாடு பற்றி, யாருக்கும் தெரியாது. அமெரிக்க கடற்படை, தகவல் குறிப்பொன்றை வெளியிட்ட போதும், அதன் உண்மையான பரிமாணத்தைப் புரிந்து கொள்ளத் தேவையான தகவல்கள், அதில் இருக்கவில்லை.
அதற்குப் பின்னர், கடந்த டிசெம்பரில் இரண்டாவது தடவையாக, இத்தகைய விநியோகங்கள் மேற்கொள்ளப்பட்ட போது தான், இரண்டு நாடுகளுக்கும் இடையில், ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டிருப்பது உறுதியானது.
இப்போது மூன்றாவது தடவையாக, விநியோக கேந்திரமாக, கட்டுநாயக்கா விமான நிலையத்தை, அமெரிக்க கடற்படை பயன்படுத்துகிறது. இராணுவத் தளவாடங்கள் அல்லாத, விநியோகங்களே இடம்பெறுவதாகவும் படையினருக்கான கடிதங்கள், காகிதாதிகள், ஏனைய பொருட்களே இந்தத் தற்காலிக விநியோக மய்யத்தின் ஊடாக, அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பலுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்றும், அமெரிக்கா கூறியுள்ளது.
அராபிக் கடலில் தரித்து நிற்கும், ‘யு.எஸ்.எஸ் ஜோன் சி ஸ்டெனிஸ்’ விமானம் தாங்கிக் கப்பல், அந்தப் பிராந்தியத்தில் பல அமெரிக்கப் போர்க்கப்பல்களை வழிநடத்துகிறது. அதன் கீழ் உள்ள அனைத்துப் போர்க் கப்பல்களுக்குமான விநியோகங்கள், இதன் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
எனவே, இந்தத் தற்காலிக விநியோக கேந்திரமும், அதன் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற விநியோக நடவடிக்கைகளும் அமெரிக்காவைப் பொறுத்தவரை முக்கியமானது. இப்போது தான், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுக்கு இத்தகையதொரு தற்காலிக விநியோக கேந்திர வசதி கிடைத்திருக்கிறது.
இம்மாதம் 21ஆம் திகதியில் இருந்து, 24ஆம் திகதி வரை, அமெரிக்கக் கடற்படைக்கான விநியோகங்களை மேற்கொள்வதற்கான கேந்திரமாக இலங்கையைப் பயன்படுத்துவதற்காக, சுமார் 25 மில்லியன் ரூபாவை அமெரிக்கா வழங்கவுள்ளது என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. பொதுவாகவே, ஒரு விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதற்கு, தரித்து நிற்பதற்கு, பொருட்களைக் கையாளுவதற்கு, அந்த நாட்டின் வான் பரப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கு என, கட்டணங்கள் அறவிடப்படுவது வழக்கம். இது சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டது.
21ஆம் திகதிக்கும், 29ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில், கட்டுநாயக்கா விமான நிலையத்தின் ஊடாக, எத்தனை தடவைகள் அமெரிக்க கடற்படை விமானங்கள் விநியோகப் பறப்பை மேற்கொள்ளவுள்ளன, இதன் ஊடாக, எத்தனை தொன் பொருட்கள் பரிமாறப்படவுள்ளன என்ற எந்த விவரங்களும் இல்லை. இதற்கு முன்னர், இத்தகைய விநியோகம் ஒரே நாளில் இடம்பெற்றதாகத் தான் தெரியவந்தது. இப்போது அது ஒரு வாரத்துக்கு மேலாக நீடிப்பதால், பெருமளவான பொருட்கள் பரிமாற்றம் செய்யப்படும் என்று நம்பப்படுகிறது ஆனால், அதற்காக இலங்கையின் பொருளாதாரத்துக்குக் கிடைக்கக் கூடிய தொகை என்று அமெரிக்கா கூறியுள்ளது, வெறும் 25 மில்லியன் ரூபா மட்டும் தான். நாட்டின் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக, அமெரிக்கா பெருமளவு வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக குறைந்தளவு, தொகையையே செலுத்துவதாகத் தெரிகிறது.
அவ்வாறாயின், இதற்கு மாற்றாக, அமெரிக்காவிடம் இருந்து இலங்கைக் கடற்படைக்கும் மறைமுகமான உதவிகள், வசதிகள் கிடைத்திருக்க வேண்டும். அது என்ன என்பது, தற்காலிக விநியோக வசதி தொடர்பாகச் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு வெளிச்சத்துக்கு வந்தால் தான், தெரிய வரும்.
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்படைகளுக்கு இடையில் மிகநெருக்கமான உறவும் ஒத்துழைப்பும் ஏற்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்துவதிலும், அதற்குப் பயிற்சி அளிப்பதிலும், அதனுடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்துவதிலும் அமெரிக்க கடற்படை அதிகளவு பங்களிப்புகளை வழங்கியிருக்கிறது.
எனவே, பயிற்சி மற்றும் ஏனைய விடயங்களில், அமெரிக்கா அளிக்கும் உதவிகளுக்கான மாற்றீடாகவும் கூட, கட்டுநாயக்கா விமான நிலையத்தில், தற்காலிக விநியோக வசதியைப் பயன்படுத்துவதற்கு குறைந்த கட்டணத்துடன், அனுமதி அளிக்கப்பட்டிருக்கலாம்.
திருகோணமலையில், அமெரிக்க கடற்படையின் சேவைத் தளம் ஒன்றை அமைப்பதற்கும், அங்கு பணியாற்றும் அமெரிக்கப் படையினர், அதிகாரிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகள், வசதிகள், பாதுகாப்பு, முன்னுரிமைகள், விலக்குரிமைகள் தொடர்பாகவும் இலங்கையின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், வான் மற்றும் கடற்பரப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அனுமதி தொடர்பாகவும் தயாசிறி ஜயசேகர சில தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இலங்கையுடன் கைச்சாத்திடுவதற்காக அமெரிக்கத் தூதரகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகாப்பு உடன்பாட்டு வரைவில் கூறப்பட்டிருந்த விடயங்கள் என்ற அடிப்படையிலேயே அவர் அந்தத் தகவல்களை வெளியிட்டார்.
முன்னதாக இந்த உடன்பாடு பற்றி, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவிடம் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். இது தனது அமைச்சுக்கு உட்பட்ட விடயம் அல்ல என்றும், பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுமாறும் அவர் பதிலளித்திருந்தார்.
பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருக்கிறார். எனவே ஜனாதிபதிக்குத் தெரியாமல் எந்தவொரு பாதுகாப்பு உடன்பாட்டையும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தால் செய்து விட முடியாது.
அதேவேளை, தயாசிறி ஜயசேகரவும் கூட, பாதுகாப்பு உடன்பாட்டு வரைவு பற்றி வெளிவிவகார அமைச்சுடனேயே அமெரிக்கத் தூதரகம் பேச்சு நடத்தியதாகக் கூறியிருந்தார்.
எவ்வாறாயினும், அமெரிக்கத் தூதரகம் சமர்ப்பித்ததாக சொல்லப்படும், பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டு வரைவு, பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தலைமையிலான குழுவால் ஆராயப்பட்டது என்றும், அதன் பெரும் பகுதிகள் அந்தக் குழுவால் நிராகரிக்கப்பட்டதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தன.
பாதுகாப்பு அமைச்சராக உள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமானவர்களில் தயாசிறி ஜயசேகரவும் ஒருவர். எனவே, அங்கிருந்து சில தகவல்கள் அவருக்குக் கிடைத்திருக்கக் கூடும்.இந்தப் பாதுகாப்பு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டால், இலங்கையின் இறைமை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்று அவர் எச்சரித்திருந்தார். அதைவிட, ஜப்பானில் ஒகினாவாவிலும், டியேகோ கார்சியா தீவிலும், உள்ள அமெரிக்க தளங்களைப் போல, திருகோணமலை மாறி விடும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருந்தார்.
ஜப்பானின் ஒகினாவா தீவை இரண்டாம் உலகப் போரில் கைப்பற்றிய பின்னர், அமெரிக்கா அங்கு, தனது தளத்தை நிறுவியது. எனவே, இந்த இரண்டு தளங்கள் விடயத்திலும், அமெரிக்கா தன்னிச்சைப்படி தளங்கள் பற்றிய முடிவுகளை எடுக்கவும் அங்கு தமது சட்டங்களை நடைமுறைப்படுத்தவும் முடிந்தது.
ஆனால் ஒகினாவாவிலும், டியேகோ கார்சியாவிலும் அமெரிக்க தளங்களுக்கு உள்ள வசதிகளைப் போன்று இலங்கையில் அமெரிக்காவால் ஒருபோதும், வசதிகளைப் பெறமுடியாது. இலங்கையில் தளம் அமைக்க அமெரிக்கா திட்டமிடுவதாக தயாசிறி ஜயசேகர வெளியிட்ட தகவலை அமெரிக்க துதரகம் மறுத்திருக்கிறது.
“அமெரிக்க - இலங்கை இராணுவ ஒத்துழைப்பானது, அனர்த்த தயார் நிலை, நிவாரணம், கடற் பாதுகாப்புப் பயிற்சி, ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளதே அன்றி, அமெரிக்காவின் தளம் ஒன்றை அமைப்பது, அதன் ஓர் அங்கமாக இருந்ததில்லை, இதை நிறுவுவது தொடர்பாக கலந்துரையாடல்களும் நடத்தப்படவில்லை” என்று அமெரிக்கத் தூதரகத்தின் பேச்சாளர் நான்சி வான் ஹோர்ன், கூறியுள்ளார்.
இருந்தாலும், கட்டுநாயக்கா விமான நிலையத்தை, அமெரிக்கா, தனது தற்காலிக விநியோக வசதிக்காக பயன்படுத்தும் சூழலில், தென்னிலங்கை அரசியல்வாதிகள் இதைச் சும்மா விட்டு விடுவார்களா, நெருப்பில்லாமல் புகை வருமா? என்று அவர்கள் புரளியைக் கிளப்பத்தான் செய்வார்கள்.