ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் இருந்ததாகவும் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியதாகவும் தனது இறந்தகால நினைவுகளை மீட்டிப்பார்த்தார் ஜனாதிபதி.
நேற்று சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய பொலிஸ் பயிற்சி நிறுவனத்தின் முதலாவது டிப்ளோமா பட்டமளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து தனக்கும் பொலிஸாருக்குமான அனுபவத்தை சுவாரஸ்யமாக தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியாக நான் இன்று பதவி வகித்தாலும் எனது பாடசாலை காலத்தில் இரண்டு முறை பொலிஸாரிடம் கன்னத்தில் அறைவாங்கியுள்ளேன். ஒரு முறை எம்.ஜி.ஆர். நாட்டை பிடிக்க வருவதாக கூறி எம்.ஜி.ஆரின். திரைப்படம் பொலன்னறுவை திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கையில் அங்கு சென்று தகராறு செய்தோம். அவரது திரைப்படங்கள் இங்கு ஓட கூடாது என்று சண்டை பிடித்தோம்.
இதன்போது அங்கு வந்த பொலிஸார் மீது சிலர் கல்லெறிந்தனர். அச்சம்பவத்தில் அங்கு நானும் இருந்தேன். கல்லெறிந்தவர்கள் ஓட நான் சிக்கிக்கொண்டேன். இதனால் பொலிஸார் என்னை அந்த வேளையில் முதன் முறை கன்னத்தில் அரைந்து மூன்று மாதங்களுக்கு சிறையிலடைத்தனர்.
பின்னர் மீண்டுமொரு முறை 1980 சிறிமாவோ பண்டாரநாயக்கவின் பிரஜாவுரிமையை ரத்து செய்த வேளையில் நான் பொலன்னறுவை வீதியில் இறங்கி போராடினேன். இதன்போது ஒரு நாள் முழுவதும் வீதியை மறித்து வீதியிலேயே படுத்து கிடந்தோம். இதன்போது பொலிஸார் என்னை அடித்து இழுத்துச் சென்றனர்.
இச்சந்தர்ப்பத்திலேயே நான் ஜே.வி.பி.யைச் சேர்ந்தவன் பொலிஸ் நிலையத்தை தாக்கத் திட்டம் தீட்டியுள்ளேன் என கூறி கைதுசெய்து கொலை செய்ய முயற்சித்து பின்னர் என்னை நீதிமன்றம் முன் நிறுத்தி ஒன்றரை வருடங்களுக்கு சிறைத் தண்டனை பெற்றுக்கொடுத்தார்கள்.
பொலிஸாரிடமிருந்து நான் இறந்து பிறந்தே இன்று ஜனாதிபதியாகியுள்ளேன். என்றாலும் எனக்கு ஒருபோதும் பொலிஸாரின் மீது வன்மம் எழவில்லை. ஏனென்றால் அவர்களில் நல்லவர்கள் தீயவர்கள் என இருத்தரப்பினரும் உள்ளனர்.
அதேபோல், அவர்களே நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த முன்னின்று உழைக்கின்றனர். இதனால் இவர்கள் உயிர்த் தியாம் கூட செய்ய நேருகின்றது. இவ்வாறான உண்மைத் தியாகிகள் மீது வன்மம் வளர்த்து என்ன பயன் என தனக்கும் பொலிஸாருக்குமான அனுபவத்தை மென்புன்னகையுடன் கூறி முடித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.