- வை. எல். எஸ். ஹமீட்
தற்போதை இவர்களின் இடமாற்றத்திற்கு யார் பொறுப்பு?
குறித்த பாடசாலை ஒரு தேசிய பாடசாலை. ஒரு மாகாண கல்விப் பணிப்பாளரைப் பொறுத்தவரை அவருக்கு இரண்டு தொழிற்பாடுகள் இருக்கின்றன. ஒன்று: மாகாண பாடசாலைகளை பொறுத்தவரை அதிகாரம் பொருந்திய பணிப்பாளர், தேசிய பாடசாலைகளைப் பொறுத்தவரை மத்திய கல்வியமைச்சின் பிரதிநிதி.
இங்கு அவருக்கு சொந்த அதிகாரமில்லை. இசுறுபாயவின் உத்தரவுகளைத்தான் செயற்படுத்த வேண்டும். சில நேரங்களில் தற்காலிக இடமாற்றங்களைச் செய்யலாம். பின்னர் இசுறுபாயவின் அனுமதியைப்பெற வேண்டும்.
மனித உரிமை ஆணைகுழுவினால் ஏற்கனவே செய்யப்பட்ட தற்காலிக இடமாற்றத்தை ரத்துச்செய்து பழைய பாடசாலைக்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டதாக கூறப்படுகிறது. அதை அமுல்படுத்தாமல் இசுறுபாயவின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ள பணிப்பாளர் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.
அவ்வாறு கடிதம் எழுதுவதில் தவறேதும் இல்லை. ஏனெனில், இசுறுபாயவின் பிரதிநிதி என்றமுறையில் இசுறுபாயவின் தீர்மானத்தையே அவர் அமுல்படுத்த வேண்டும். அவர் வெறுமனே மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவைக் குறிப்பிட்டு அதன் பிரதியுடன் இசுறுபாயவின் மேலதிக அறிவுறுத்தலைக் கோரியிருந்தால் பிரச்சினையில்லை. அதற்கு அப்பாலும் அதன் உள்ளடக்கம் இருந்ததால் அவ்வுள்ளடக்கத்தின் பொருத்தத் தன்மை கேள்விக்குறியாகவும் பிரச்சினையாகவும் மாறியிருக்கிறது.
அது வெறுமனே பொருத்தமற்ற உள்ளடக்கம் என்பதற்காக அல்ல. மாறாக, அதன் உள்ளடக்கமே பிரச்சினையின் திருப்புமுனையாக மாறியிருக்கின்றது என்ற கருத்தே இன்றைய பாரிய விமர்சனங்களின் பிரதான அம்சமாக இருக்கின்றது. அதாவது, இசுறுபாயவின் உத்தரவின் பேரிலேயே இடமாற்றம் இடம்பெற்றபோதும் அவ்வகையான உத்தரவுக்கு அக்கடிதத்தின் உள்ளடக்கமே பிரதான காரணம் என்பதே இவ்விமர்சனங்களின் மையப்புள்ளியாகும். அதன் உள்ளடக்கம் மனித உரிமை ஆணைக்குழுவின் உத்தரவையே நலிவுற்றதாக்கிவிட்டது என்பதும் விமர்கள் வெளியிடும் கவலையாகும். இவற்றிற்கு பின்னர் வருகின்றேன்.
இப்பிரச்சினையின் ஆழ அகலம் என்ன?
இங்கு பல கேள்விகள் எழுகின்றன.
(1) குறித்த ஆடைகளை அணிவது அந்த ஆசிரியர்களின் உரிமையா?
(2) அந்த ஆடைகள் அணிவதில் கல்வியமைச்சின் விதிமுறைகளின்கீழ் ஏதும் தடைகள் உள்ளனவா?
(3) இல்லையெனில், பாடசாலை மரபு, பாரம்பரியம் என்ற அடிப்படையில் அவ்வாடைக்கு பாடசாலை தடைவிதிக்க முடியுமா?
(4) ஆசிரியைகளுக்கு சீருடை உண்டா? ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவர்களின் சீருடையை தீர்மானிக்கும் அதிகாரம் பாடசாலைக்கு உண்டா?
(5) இல்லையெனில், அவர்களை கல்வியமைச்சு ஏன் வேறுபாடசாலைகளுக்கு ஆரம்பத்திலேயே தற்காலிக இணைப்பிற்கு உத்தரவிட்டது?
(6) மனித உரிமை ஆணைக்குழு வழங்கிய இடைக்கால உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பாக மாகாண கல்விப் பணிப்பாளர் இசுறுபாயவுக்கு அனுப்பிய கடிதத்தின் உள்ளடக்கம் பொருத்தமானதா?
(7) அதன் உள்ளடக்கம்தான் தற்போது இந்தப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்ததற்கு காரணம் என்ற கூற்றில் நியாயம் இருக்கின்றதா?
(8) குறித்த ஆடை அணிவது அந்த ஆசிரியர்களின் உரிமையானால் அதனை நிலைநிறுத்துவதில் உரிமைகளுக்காகப் போராடவென்று மக்கள் வாக்குகள்பெற்ற அரசியல் அதிகாரவர்க்கம் இத்தனை மாதங்களாக வாளாவிருந்ததேன்?
(9) கல்விப்பணிப்பாளர் அண்மையில் வியூகம் தொலைக்காட்சியில் செய்த சில நியாயப்படுத்தல்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையா?
(10) அபாயா முஸ்லிம்களின் கலாசார ஆடையா? இதற்காக போராட வேண்டுமா? என்ற வாதங்கள் இந்த இடத்திற்குப் பொருந்துமா?
(11) சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் இங்கு விட்டுக்கொடுப்புச் செய்யமுடியுமா?
(12) அவ்விட்டுக்கொடுப்புகள் எதிர்காலத்தில் வட கிழக்கில் மாத்திரமல்லாமல் அதற்கு வெளியிலும் முஸ்லிம்களுக்கெதிரான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உண்டா?
(13) நாம் பெரும்பான்மையாக இல்லாவிட்டாலும் சிறுபான்மை இல்லை என்கின்ற கிழக்கிலேயே, ஒரு கௌரவமான ஆடை அணிகின்ற சிறிய உரிமையைக்கூட பல மாதங்களாக போராடியும் இன்னும் உறுதிப்படுத்த முடியாமல் இருப்பதேன்?
(14) கல்விப் பணிப்பாளர் அல்லது உயர் பதவியிலுள்ள முஸ்லிம்கள், சமூகத்திற்கு சாதகமாக நடக்கவேண்டுமா? நடுநிலையாக நடக்க வேண்டுமா?
(15) குறித்த பணிப்பாளரினுடைய இவ்விடயம் தொடர்பான நடவடிக்கைகள், பேச்சுக்கள், முஸ்லிம்களுக்கு சாதகமானவையா? நடுநிலையானவையா? பாதகமானவையா?
(16) பாதகமானதே எனில் ஏன் அவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?
(17) ஆளுநர், அரச அதிபர் உட்பட நியாமாக முஸ்லிம்கள் நியமிக்கப்படாதபோது அவற்றிற்கெதிராக குரலெழுப்புகின்றோமே! ஏன்?
(18) இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு என்ன?
(19) அத்தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர்கள் யார்?
(20) அத்தீர்வு என்பது அவ்வாசிரியைகளுக்குரிய தீர்வா? அல்லது சமூகத்திற்கு தீர்வா? இரண்டாவதெனில் எவ்வாறு?
இப்பிரச்சினையை சரியாக அடையாளம் கண்டு தீர்வுக்காண இக்கேள்விகளுக்கு நாம் விடைகாண வேண்டும்.
(1) குறித்த ஆடைகளை அணிவது அவ்வாசிரியைகளின் உரிமையா?
தனிமனித சுதந்திரம்
1972ஆம் ஆண்டு யாப்பின் கீழ் இலங்கை ஒரு “சோசலிச ஜனநாயக குடியரசாகும். தற்போதைய யாப்பின்கீழ் அது ஒரு “ ஜனநாயக சோசலிச குடியரசாகும். அதாவது, தனிமனித சுதந்திரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் தற்போதைய யாப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.
உயிர்வாழும் உரிமை
ICCPR ஷரத்து 6 மனிதன் “ உயிர்வாழும் உரிமையை” (right to life) உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது இலங்கையைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆவணமாகும்.
UDHR சரத்து 3 உம் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தியிருக்கின்றது. இது ஆரம்பத்தில் நாடுகளை கட்டுப்படுத்துகின்ற ஒரு ஆவணமாக இருக்கவில்லை. காரணம் இது ஒரு declaration. ICCPR ஒரு treaty. ஆனால் தற்போது UDHR ஆனது Customary International Law என்ற அந்தஸ்த்தை அடைந்திருப்பதால் அதுவும் இலங்கையைக் கட்டுப்படுத்துகின்றது.
சுருங்கக்கூறின் ஒவ்வொருவரினதும் உயிர்வாழும் உரிமையை உறுதிப்படுத்தும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றிருக்கின்றது. அது இலங்கைமீது கடமையாகும். ஆனாலும் 40 வருடங்களுக்குமுன் உருவாக்கப்பட்ட இலங்கை யாப்பு இந்த உரிமை வெளிப்படையாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் சட்டப்படியேயல்லாது ஒருவரின் உயிரைப்பறிக்கமுடியாது என்று யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய யாப்பிலும் உயிர்வாழும் உரிமை வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. ஆனாலும் சட்டப்படியேயல்லாது உயிர் பறிக்கப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு யாப்பிலும் அடிப்படையில் ஒரே விசயம் வெவ்வேறு சொற்பதங்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சொற்பதங்களை வைத்து இந்திய உச்ச நீதிமன்றம், “ உயிர்வாழும் உரிமையை” இந்திய யாப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக பல வழக்குகளில் வியாக்கியானப்படுத்தி உள்ளது.
உயிர்வாழும் உரிமையென்றால் என்ன?
இந்திய உச்சநீதிமன்றம் இந்த உயிர்வாழும் உரிமையை மிகவும் விரிவாக வியாக்கியானப்படுத்தியுள்ளது. அவ்வாறு வியாக்கியானப்படுத்தும்போது, ஒரு வழக்கில் “மனித நாகரிகத்தின் அனைத்து சிறப்பம்சங்களையும் அது உள்ளடக்குகின்றது” என்று தெரிவித்திருக்கின்றது. ( P நல்லதம்பி என்பவரது வழக்கில்).
இன்னுமொரு வழக்கில் “உயிர்வாழும் உரிமை என்பது கௌரவமாக வாழுகின்ற உரிமை“ (the right to live with human dignity) என்று தெரிவித்திருக்கின்றது. இதன் அடிப்படையில் வாழ்வின் பல அம்சங்களை பல வழக்குகளில் இந்த உரிமைக்குள் உள்வாங்கியிருக்கின்றது.
அந்த வகையில் தன் உடலை மறைப்பதற்காக மனிதன் அணியும் கண்ணியமான ஆடையும் உயிர்வாழும் உரிமையின் ஓர் அங்கமான “கௌரவமாக வாழ்வது” என்கின்ற வரையறைக்குள் வரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, சுருங்கக்கூறின் “கண்ணிமான ஆடை” என்பது மனிதன் உயிர்வாழும் உரிமையாகும்.
மதசுதந்திரம்
UDHR ஷரத்து 18, மதசுதந்திரத்தையும் அதனை வெளிப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற உரிமையை உறுதிப்படுத்துகின்றது.
இதே சுதந்திரத்தை ICCPRஷரத்து 18 உம் உறுதிப்படுத்துகின்றது. அதேநேரம் அரசியலமைப்பு சரத்து 10 உம் இந்த சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது. (ஆனால் வெளிப்படுத்துகின்ற, பின்பற்றுகின்ற என்ற வார்த்தைகள் வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை).
ஒரு முஸ்லிம் பெண்ணின் ஆடை
ஒரு முஸ்லிம் பெண்ணைப் பொறுத்தவரை முகத்தையும் மணிக்கட்டு வரையான கையையும் விடுத்து ஏனைய பாகங்களை மறைப்பதற்கு இஸ்லாம் கட்டளையிட்டிருக்கின்றது. எவ்வகையான ஆடையைக்கொண்டு மறைக்கவேண்டும் என்பது அவளது தனிமனித சுதந்திரம். மறைப்பது என்பது இஸ்லாம். அவளது மார்க்கம் இட்ட கட்டளையின் பிரகாரம் ஆடை அணிவது அவளது மதசுதந்திரத்திற்குட்பட்டது.
அதனை மறுக்கின்ற உரிமை இந்த நாட்டு அரசுக்கே இல்லை. ஒரு பாடசாலைக்கு இருக்கமுடியுமா?
இந்த ஆடையை அணிய தடைவிதிப்பதென்பது இரு வகையான உரிமையில் கைவைக்கின்றது. ஒன்று மதசுதந்திரம், அடுத்தது உயிர்வாழ்வதற்கான சுதந்திரம்.
ஐரோப்பிய நாடுகளில் போராட்டம்
இன்று மனித உரிமையின் காவலர்களாக தங்களைக் காட்டிக்கொள்ளும் சில ஐரோப்பிய நாடுகள் இந்த உரிமையில் கைவைக்க முனைந்து அந்நாட்டு நீதிமன்றங்களால் அம்முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் சில நாடுகளில் இஸ்லாமிய சகோதரிகள் எத்தனையோ இழப்புகளுக்கு மத்தியில் இந்த உரிமைக்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பாடசாலையில் போய் அந்த உரிமையை இழக்கமுடியுமா?
(2) அந்த ஆடை அணிவதில் கல்வியமைச்சின் விதிமுறைகளின்கீழ் தடைகள் ஏதும் உள்ளனவா?
அவ்வாறு தடைகள் ஏதும் இல்லை. தடைகள் இருந்தால் இது ஷண்முகா பிரச்சினையாக இருந்திருக்காது. மாறாக, கல்வியமைச்சின் விதிமுறையை மீறிய பிரச்சினையாக இருந்திருக்கும். ஆனால் நாட்டின் பல பாடசாலைகளில் முஸ்லிம் ஆசிரியைகள் இந்த ஆடையை அணிகிறார்கள். எதுவித பிரச்சினையும் இல்லை.
(3) இல்லையெனில் பாடசாலையின் மரபு, பாரம்பரியம் என்ற அடிப்படையில் தடைவிதிக்க முடியுமா?
இந்த நாட்டின் அரசியலமைப்பு சட்டமும் இந்நாட்டு அரசாங்கமும் அனுமதித்த ஓர் ஆடையை மறுக்கின்ற உரிமை எவ்வாறு ஒரு பாடசாலைக்கு இருக்கமுடியும்? பாடசாலையிலும் சமஷ்டி ஆட்சி நடைபெறுகின்றதா? ஓர் ஆசிரியையின் அடிப்படை உரிமையை அதிபர் மறுத்தது எவ்வளவு பெரிய குற்றம். அதற்கு தண்டிக்கபடவேண்டியவர் அந்த அதிபர் இல்லையா?
மாறாக, தனது அடிப்படை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது, தனது மதசுதந்திரத்தில் கைவைக்க அனுமதிக்க முடியாது. தான் உயிர்வாழும் சுதந்திரத்தைத் தட்டிப்பறிக்க இடம்கொடுக்க முடியாது என்று தனது உரிமையை நிலைநாட்ட முயன்ற ஆசிரியைகளுக்குத் தண்டனை. அவ்வுரிமையைப் பறிக்கமுயன்றவருக்கு அதிகாரிகளே ஆதரவு! இது எந்தவகையில் நியாயம்?
இந்நாட்டில் ஷண்முகா மாகாவித்தியாலயம் மாத்திரம் ஒரு இந்துப் பாடசாலையல்ல. இன்னும் எத்தனையோ இந்துப் பாடசாலைகள் இயங்குகின்றன. அவற்றில் பலவற்றில் முஸ்லிம் ஆசிரியைகள் அபாயா அணிந்து கற்பிக்கின்றார்கள். இந்தப் பாடசாலையில் மட்டும் ஏன் பிரச்சினை?
இது ஒரு இனத்துவேஷம்கொண்ட அதிபரின் பிரச்சினை. இதற்குத் சில தமிழ் அரசியல் சக்திகள் துணைபோயின. இந்த ஆசிரியைகள் அவர்களது கலாசாரத்தைப் பின்பற்ற வேண்டாம் என்றார்களா? ஒரு கிறிஸ்தவ கன்னியாஸ்த்திரி அபாயாவுக்கு நிகரான ஓர் ஆடையை அணிந்துகொண்டு இதே பாடசாலைக்கு கற்பிக்க சென்றிருந்தால் இதே துவேசத்தை வெளிப்படுத்தியிருப்பார்களா?
எனவே, இது முழுக்க முழுக்க துவேஷத்தை அடிப்படையாகக் கொண்டதே தவிர நியாயப்படுத்தக்கூடியவை அல்ல. இந்த அடிப்படை விசயம்கூட இந்த அதிகாரிகளுக்கு ஏன் புரியாமல் போனது? குற்றவாளிக்குத் தண்டனை வழங்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கியது ஏன்? ஆகக்குறைந்தது இந்த ஆசிரியர்கள் தற்காலிக இடமாற்றப்பட்டபோது அந்த அதிபரும் தற்காலிகமாக ஏன் இடமாற்றப்படவில்லை. ஏன் அவர்களின் மக்கள் பிரதிநிதிகள் பலம்வாய்நதவர்கள் என்பதனாலா?