மாவனெல்லையில் புத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்களை பொலிஸில் ஒப்படைப்பதாக தெரிவித்த மேல் மாகாண அரசியல்வாதியை கைதுசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களின் பின்னணியை அறிந்துகொள்ளலாம். அத்துடன் அரசாங்கம் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் பிரபாகரனால் நாட்டுக்கு ஏற்பட்ட அழிவே முஸ்லிம் அடிப்படைவாதிகளாலும் ஏற்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜயந்த சமரவீர தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் கட்சிக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் இருந்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுடன் மாவனெல்லையில் அண்மையில் புத்தர் சிலை சேதமாக்கியவர்களுக்கும் சம்பந்தம் இருப்பதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. மாவனெல்லை சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் இருவரும் இன்னும் தலைமறைவாக இருக்கின்றனர். இவர்களை பொஸிலிஸ் ஒப்படைப்பதாக மேல்மாகாண அரசியல்வாதி ஒருவர் கேகாலை பொலிஸ் பிரதானிக்கு அறிவித்திருக்கின்றார்.
ஆனால் இதுவரை அந்த சந்தேக நபர்கள் இருவரையும் குறித்த அரசியல்வாதி பொலிஸில் ஒப்படைக்கவில்லை. அத்துடன் புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் கண்டுபிக்கப்பட்ட பாரியளவிலான வெடிபொருட்களுக்கும் குறித்த இரண்டு சந்தேக நபர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனால் தலைமறைவாக இருக்கும் சந்தேக நபர்களை பொலிஸில் ஒப்படைப்பதாக தெரிவித்த மேல்மாகாண அரசியல்வாதி யார் என்பதை வெளிப்படுத்தி அவரை கைதுசெய்யவேண்டும். அதன் மூலம் சந்தேக நபர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
அத்துடன் புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் யாருடைய வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டது என்பதை அரசாங்கம் உடனடியாக கண்டுபிடித்து இதனை ஆரம்பத்திலே நிறுத்தவேண்டும். இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளால் நாடு எதிர்கொண்ட அழிவை முஸ்லிம் அடிப்படைவாதிகளால் எதிர்கொள்ள நேரிடும். அத்துடன் புத்தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கும் தொடர்பிருக்கின்றதா என்பதை தேடிப் பார்க்கவேண்டும். இதுதொடர்பாக தமிழ், முஸ்லிம் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். கலேவல பிரதேசத்தைச்சேர்ந்த நபர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து அண்மையில் உயிரிழந்தார்.
நாட்டில் கடந்த காலங்களில் அளுத்கம, திகன, அம்பாறை போன்ற பிரதேசங்களில் இடம்பெற்ற இனவாத சம்பவங்கள் மற்றும் மாவனெல்லை புத்தர்சிலை சேதமாக்கிய விடயங்கள் அனைத்தும் ஒரே நோக்கத்திலே இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக அவதானமாக இருக்கவேண்டும்.
அத்துடன் இந்த அரசாங்கம் அடிப்படை, பிரிவினைவாதத்துக்கு துணைபோகும் அரசாங்கமாகும். அடிப்படைவாதத்துக்கு அரசாங்கம் அச்சப்படுகின்றது. அதற்கு எதிராக ஒருபோதும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது. அவ்வாறு இல்லை என்றால் மேல்மாகாண அரசியல்வாதியை கைது செய்து அடிப்படைவாதிகள் தலைதூக்குவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.