இனங்களின் பன்மைத்துவம் இன்றியமையாததாகும். மதங்களின் பன்மைத்துவம் யதார்த்தமானதாகும். இந்த உண்மைகளை முற்று முழுதாக மதங்கள் அங்கீகரிக்கின்றன. பிற மதங்களை நிந்தனை செய்வதையோ அல்லது புண்படுத்துவதையோ ஒரு போதும் மதங்கள் அங்கீகரிப்பதில்லை.
இஸ்லாம் பிற மதங்களை நிந்தனை செய்வதையும் பிற மத சகோதரர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதையும் வன்மையாகக் கண்டிக்கின்றது. “அவர்கள் அழைக்கின்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் ஏச வேண்டாம் (06:108)” என புனித அல் குர்ஆன் வழிகாட்டுகின்றது. பிற மத கடவுள்களை ஏசுவதற்கே அனுமதிக்காத இஸ்லாம் பிற மத நிந்தனையில் ஈடுபடுவதை, பிற மதத்தவர்களின் உணர்வுகளை புண்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்காது என்பது தெளிவான விடயமாகும்.
வரலாறு நெடுகிலும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களுடன் சமாதானமாக வாழ்ந்து, நாட்டின் அபிவிருத்திக்கு பல வகையில் பங்காற்றும் சமூகமாக இருந்துவந்துள்ளது. அந்தவகையில் மதத்தின் பெயராலோ அல்லது இனத்தின் பெயராலோ இடம்பெறும் எந்தவொரு மதநிந்தனை நடவடிக்கையையும் சட்டத்தை மீறிய செயற்பாட்டையும் முஸ்லிம் சமூகம் ஒருபோதும் அங்கீகரிக்காது. மேலும் இஸ்லாத்தின் பெயரால் இடம்பெறும் எவ்வித தீவிரவாத மற்றும் மதநிந்தனையுடன் தொடர்பான செயற்பாடாக இருந்தாலும் அதனை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் கண்டிக்கின்றது.
அண்மையில் பௌத்த மத சகோதரர்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அசம்பாவிதமொன்று நடந்தேறியிருக்கிறது. சந்தேகத்தின் பெயரில் சிலர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். விசாரணைகளின் பின்னர் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படுவதோடு, நாட்டிலும் இனங்களிடையேயும் அமைதியும் சுபிட்சமும் மலரத் தேவையான அனைத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக வாலிபர்களுக்கு சிறந்த முறையில் வழிகாட்டும் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் மதஸ்தலங்கள் மற்றும் ஏனைய சமூக நிறுவனங்கள் மூலம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
இந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் சார்பில் உத்தியோகபூர்வ அறிக்கைகள் ஏதும் வெளியிடப்படாத நிலையில் ஊடகங்களில் ஊகங்களும், வதந்திகளும், ஊர்ஜிதம் செய்யப்படாத செய்திகளும் வெளியிடப்பட்டு வருவதனால் சமூகங்களுக்கிடையே ஐக்கியமும், சகவாழ்வும் பாதிக்கப்படுமென முஸ்லிம் சமூகம் அச்சப்படுகின்றது. எனவே ஊடக நிறுவனங்கள் ஊடக தர்மத்தைப் பேணி நாட்டின் ஒற்றுமை, ஐக்கியத்தை பாதுகாக்கும் வகையில் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அத்துடன் தீவிர மத நிந்தனைப் போக்குடையவர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள் என்பது அண்மைக்காலமாக இலங்கையில் நடந்துவரும் நிகழ்வுகள் மூலம் தெளிவாகிறது. நமது நாட்டில் பிற மத நிந்தனைகளிலும் பிற மத சகோதரர்களின் உயிர்களை, உடைமைகளை துவம்சம் செய்வதிலும் சிலர் அவ்வப்போது ஈடுபட்டுவருவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற கசப்பான நிகழ்வுகள் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். இத்தகைய வன்முறைக் கலாச்சாரம் தொடருமானால் பல்லாண்டு காலமாக நாம் அனைவரும் இணைந்து கட்டியெழுப்பி வந்த நமது தாய்நாட்டின் சுபீட்சமான எதிர்காலம் சவாலுக்குட்படும் அவல நிலை உருவாகும்.
எனவே எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டாலும் எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கைகளை எடுத்து, சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்கி, நாட்டின் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் வன்முறைக்கும், மத நிந்தனைக்கும் இட்டுச் செல்லும் தீவிரவாத சிந்தனைகளைத் தடுத்து நிறுத்துவதில் அரசாங்கத்தின் பங்கு அளப்பரியது என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
எந்தவொரு மதத்தைச் சேர்ந்தவராயினும் அவரது நடத்தைகளில் அவ்வாறான அறிகுறிகள் தென்படுமானால் உண்மைகளை கண்டறியும் புலனாய்வுத்துறை, சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்கின்ற பொலீஸ், பாதுகாப்பை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்தும் இராணுவம், நீதியை நிலைநாட்டும் நீதித்துறை என நாட்டின் அமைதிக்கு உத்தரவாதமளிக்கக் கூடிய சகல ஏற்பாடுகளையும் செய்துள்ள அரசாங்கம் அது குறித்து மிகுந்த அவதானத்தைச் செலுத்த வெண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
All Ceylon Jamiyyathul Ulama
Advocacy & Reconciliation Council
Al-Kafaala Foundation
All Ceylon Thawheed Jamath
All Ceylon Young Mens Muslim Association Conference
All University Muslim Students’ Association
Al-Muslimath
Association of Muslim Youth of Sailan
Centre for Islamic Studies
Colombo District Masjid Federation
Families Relief Sri Lanka Trust
Federation Of All Mosques In Ampare District
Federation of Sri Lanka Arabic Colleges
International Islamic Relief Organization
Sri Lanka Islamic Center
Jama’athus Salama
Jamaath Ansari Sunnathil Muhammadiyya of Sri Lanka
Sri Lanka Islamic Students’ Movement
Kandy City Masjid Federaion
Markaz Islamic Center
Muslim Aid
Muslim Council of Sri Lanka
Muslim Women Research Action Front
Nidha Foundation
Shazuliyya Thareeka
Sri Lanka Jama’athe Islami
Sri Lanka Muslim Media Forum
United Thawheed Jamath
World Assembly of Muslim Youth
World Cultural Center for Development and Training
Zam Zam Foundation