சிறுமி ஒருவரைக் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில், காத்தான்குடியைச் சொந்த இடமாகக் கொண்ட இளைஞனை மடக்கிப் பிடித்து முறையான கவனிப்பின் பின்னர் பொலிஸாரிடம் மக்கள் ஒப்படைத்தனர்.
அவர் மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பிலிருந்த போது தப்பிச் சென்றுள்ளார். இந்நிலையில் பொலிஸார் வேண்டுமென்றே அவரைத் தப்பிக்கவிட்டனர் என்று நாவாந்துறை மக்கள் குற்றம் சுமத்தினர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது :- ‘கடந்த 23ஆம் திகதி எமது பகுதியில் 12 வயதுச் சிறுமியை உந்துருளியில் வந்த இளைஞன் கடத்திச் செல்ல முற்பட்டான். இருப்பினும் சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். கடத்த முற்பட்ட இளைஞன் தப்பிச் சென்றுவிட்டான். உந்துருளி இலகத்தைக் குறித்து வைத்துக் கொண்டோம்.
நேற்று அதே உந்துருளியில் இளைஞன் ஒருவன் உலாவுவதை அவதானித்தோம். சந்தைப் பகுதியில் அவரை மடக்கிப் பிடித்தோம்’ என்று நாவாந்துறைப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இளைஞனை மடக்கிய மக்கள் அவரை கம்பத்தில் கட்டி வைத்து முறையாகக் கவனித்தனர். பொலிஸாருக்கு அறிவித்தபோதும் 2 மணிநேரம் தாமதமாகவே அவர்கள் அங்கு வந்தனர்.பொலிஸாரிடம் இளைஞன் ஒப்படைக்கப்பட்டான்.
இதன்போது, தான் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்றும் சமையல் வேலைக்காகவே யாழ்ப்பாணம் வந்தேன் என்றும் இளைஞன் தெரிவித்துள்ளான்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் 24ஆம் விடுதியில் இளைஞனை பொலிஸார் சிகிச்சைக்காகச் சேர்ப்பித்தனர். அங்கிருந்து மற்றொரு விடுதிக்கு நேற்று மாலை 3.30 மணியளவில் இடமாற்றும்போது இளைஞன் தப்பித்துச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இளைஞனுக்கு மருத்துவமனையில் கைவிலங்கு இன்றியே சிகிச்சை வழங்கப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.