Top News

மைத்திரியின் இருப்புக்காக கொய்யப்படும் மைனோரிட்டி அரசியல் மூலதனங்கள்!


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லும் மைத்திரியின் நகர்வுகள், சிறுபான்மைச் சமூகங்களின் எதிர்கால நகர்வுகளுக்கு அச்சுறுத்தலாக அமையப் போகிறது. இதற்கான மைத்திரியின் அண்மைக்கால காய் நகர்த்தல்கள் இந்த அச்சங்களை வெளிப்படுத்துகின்றன.

பௌத்தத்தின் மடியில் தொப்பென விழுந்து வளர்ந்த வரலாறும், ஆரம்பமாகி ஐந்து வருடங்களுக்குள் தனிச் சிங்களச் சட்டத்தை, மூலதனமாக்கி அதிகாரம், ஆட்சிக்கு வந்த பெருமையும் சுதந்திரக் கட்சிக்குத்தானுண்டு. இதனால் இக்கட்சியை இனவாத உணர்வுகளுக்கான பெரும்பான்மை வடிகாலாகவும் ஒரு காலத்தில் சிலர் கருதினர். பின்னர் நாட்பட்டுப்போன சித்தாத்தங்களை சீர்திருத்தி மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான இக்கட்சியின் வியூகங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் வழிசமைத்ததால் சந்திரிக்காவுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால் ராஜபக்ஷவின் வியூகங்கள் மாத்திரமே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பௌத்த தேசியவாதக் கட்சியாக வளர்த் தெடுத்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய தலைமையும், வடக்கு, கிழக்கு தொடர்பில் ராஜபக்‌ஷக்கள் கொண்டிருந்த நிலைப்பாடுகளும் சுதந்திரக் கட்சியை தென்னிலங்கை அரசியலுக்குள்ளும் நிலைப்படுத்தியது. இவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் ஒரு சமூகத்தின் உரிமைக்கும், மற்றொரு சிறுபான்மைச் சமூகத்தின் மத உணர்வுகளுக்கும் குறிவைத்துக் குழிபறித்ததால் 2015 இல் அதிரடி மாற்றத்துக்கான அவசியங்களை தமிழ் மொழிச் சமூகங்கள் உணர்ந்தன. இந்த வியூகத்தால் ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின், தற்போதைய புதிய போக்குகள் சிறுபான்மையினரை மட்டுமன்றி, ஐந்து வருடங்களுக்கு ஆணை வழங்கிய 61 இலட்சம் பேரையும் பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நிறைவேற்று அதிகாரத்தின் அதல பாதாளத்துக்குள் முத்துக்குளிக்கும் மைத்திரிபால சிறிசேன, இந்த இராட்சத அதிகாரத்திலுள்ள ஆபத்துக்களை உணராமலிருக்க முடியாது. 19 ஆவது திருத்தத்திற்கு முன்னரும் இந்த அதிகாரத்தை சமருக்கு இழுக்கும் வழிமுறை பாராளுமன்றத்திலிருந்து வருகிறது.


மதிப்பிழப்புப் பிரேரணை (Impeachment) ஜனாதிபதியை வீட்டுக்கு அனுப்பும் முறை இதற்கு முன்னர் வெற்றியளிக்கவில்லை தான். ஆனால் இம்முறை சாத்தியப்படாது என்று சொல்லுமளவிற்கு மைத்திரிக்கு பாராளுமன்றப் பலமில்லை. எனவே ஒரு ஜனாதிபதியை, பாராளுமன்றத்திலுள்ள எம்பிக்களின் பலங்களே பாதுகாப்பதைப் புரிந்து கொள்ளலாம். தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அவர் விதித்துள்ள கட்டுப்பாடுகளும்,ஸ்ரீ லங்கா பொது ஜனப் பெரமுனவுடன் மைத்திரி ஏற்படுத்த முனையும் உறவுகளும் ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு இவர் மீதுள்ள அதிருப்தியும் முத்துக்குளித்தலில் மைத்திரிக்கு அவதானத்தை ஏற்படுத்தியிருக்கும்.

ஜனநாயகத்தின் போர்வையில் குடும்ப அதிகாரம் தாண்டவமாடிய அரசைத் தோற்கடிக்க 2015 இல் ஏற்படுத்தப்பட்ட அமைதிப்புரட்சிக்கான ஆணையின் ஆயுட்காலம் இன்னும் ஒன்றரை வருடங்களிலே முடிவடையவுள்ளது. இதற்கிடையில் எவ்வாறான பின்புலத்திலிருந்து இந்த ஆணைகளை மீற மைத்திரி முயற்சிக்கிறார்? ஏன் இதற்கு அவசரப்படுகிறார்.? எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பிரபல்யம் தேடும் வழிகளைத் தேடி வாய்க்காலில் விழுந்த கதைக்கே இவரின் அவசரம் அழைத்துச் செல்லவுள்ளது. மஹிந்தவின் கடும்போக்கு முகாமுக்குள் குடியிருந்து அரசியல் ஆயுளை நீடிக்கும் இவரது முயற்சிகள், இப்போதைய கள நிலவரங்களுக்கு ஒரு போதும் கைகூடப்போவதில்லை.

சுதந்திரக் கட்சியிலுள்ள எத்தனை இலட்சம் வாக்குகளை இவரால் ஸ்ரீலங்கா பொது ஜனப் பெர முனவுக்குப் பெற்றுத்தர முடியுமென்ற ஐயமும், இவ்விரு கட்சிகளின் தலைமையில் உருவாகவுள்ள பொதுக் கூட்டணிக்குள் ஏற்படச்சாத்தியமான தலைமைத்துவ நெருக்கடிகளும் ஐக்கிய தேசிய முன்னணிக்கே வாய்ப்பாகி வருகின்றன.

”அரசியலில் தாங்கள் மஹிந்தவும் இல்லை, மைத்திரியும் இல்லை. அஷ்ரஃபின் வழிகாட்டலை அடியொற்றிச் செல்லும் முஸ்லிம் தலைமைகள்" எனக் கூறும் தேசிய காங்கிரஸும், மட்டக்களப்பிலுள்ள வெகுஜன அரசியல்வாதியும், திருமலையில் மௌன விரதமிருக்கும் முன்னாள் முதல்வரும், வன்னியில் வியூகம் வகுக்கும் முன்னாள் பிரதியமைச்சரும் மைத்திரியின் இப்போக்குகளால், வழி தெரியாது விழி பிதுங்குவர்.

தீர்மானிக்கும் சக்திகளும்,பின்புலங்களும் தென்னிலங்கையிலே உள்ளதால் அலைக்குள் அள்ளப்படும் அதிகாரத்துக்குள் காலத்தை ஓட்ட எடுக்கப்படும் இவர்களின் கடும் பிரயத்தனங்கள் கிழக்கில் குதர்க்கக் கோஷங்களாக்கப்படலாம். இவ்வாறு ஆக்கப்பட்டால் முஸ்லிம்களின் ஆணைக்கெதிரான கூட்டாக இத்தலைவர்கள் காட்டப்படலாம். இவ்வளவு பெரிய சமூக சவால்களை சமாளித்து களத்தில் குதிப்பது கிழக்கில் இவர்களால் சாத்தியமாகாது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முஸ்லிம் சம்மேளனத் தலைவராகச் செயற்பட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை முஸ்லிம்களின் பாதுகாப்புக் கூடாரமாகக் காட்டித்திரிந்த பௌஷியும் மைத்திரியின் கடும் போக்கில் அதிருப்தியுற்றாரோ? இல்லை - இந்த அரசிலாவது முஸ்லிம்களுக்குத் தீர்வு கிடைக்கட்டுமே என ஆசைப்பட்டாரோ? அல்லது சுதந்திரக்கட்சியின் தந்திரங்களைப் புரிந்து கொண்டாரோ? விடை பெற்று விட்டார். புதிய அரசியலமைப்பில் தமிழ் மொழிச்சமூகங்கள் எழுச்சியடையுமென அச்சப்படும் மஹிந்த, கடும்போக்கு அணிக்குள் சரணடைந்து அதிகாரத்தை கொய்யமுனையும் மைத்திரி, இவர்களை விட ஐக்கிய தேசிய முன்னணி அரசின் நகர்வுகள் ஆறுதளித் ததால் பச்சைக்குள் பாய்ந்து விட்டார் பௌசி.

இனியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரியணை ஆசைக்கு முஸ்லிம்கள் முட்டுக் கொடுக்கப் போவதில்லை. பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதில் முஸ்லிம்களுக்கு குறிப்பாக, வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கு ஆறுதல்தான். இந்த ஆறுதலை ஆயுட்கால அரசியல் மூலதனமாக முதலிடுவதற்கு ராஜபக்ஷ முயலக்கூடாது என்பதே முஸ்லிம்களின் நிலைப்பாடு. ராஜபக்ஷவின் இனவாத மூலதனமே, மீண்டும் தமிழ், முஸ்லிம் தலைமைகளை ஒன்றிக்க வைத்துள்ளது. இந்த ஒற்றுமைக்கான அடித்தளம் 2015 இல் இடப்பட்டது.

புலிகளின் போராட்டம் வழி தவறியதையே முஸ்லிம்கள் எதிர்த்தனர். தமிழ்மொழிச் சமூகங்களின் பிரச்சினைகள், சமதரப்பு மேசையில் உள்வாங்கப்படுவதை சிறுபான்மைத் தலைமைகள் விரும்புவதால் சகுனம் சரிப்படவுள்ளது. இந்தச் சந்தர்ப்பமும், நல்ல சகுனமும் மைத்திரியின் கடும்போக்கு வாதத்தை நோக்கிய பயணத்தில் பிழைத்துப் போகலாம் என்பதே முஸ்லிம்களின் இன்றைய அச்சம். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசி, விரட்டியடிக்கும் தொனியில் பேசும் ராஜபக்ஷவின் வியூகத்திற்குள், இனவாதிகளுக்கான கொழுத்த முதலீடும் , கொள்ளை இலாபமும் இருக்கும் என்பதே இன்றைய புரிதல். இந்தப்புரிதலில் முஸ்லிம் தலைமைகள் செய்ய வேண்டிய பணிகள் பற்றி இனி ஆராய்வோம்.


-Suaib M Cassim
Previous Post Next Post