அரச, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியாயாதிக்கச் சபைகளின் தலைவர்களையும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களையும் நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்றைய தினம் அமைச்சர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பிரதமர் சந்தித்தார். இதன் போது அவர் இவ்வாறு பாராட்டினார்.
இதற்காக ஜனாதிபதி வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தின்படி செயற்படுமாறு பிரதமர் ஐக்கிய தேசிய முன்னணியின் அமைச்சர்களை இதன் போது கேட்டுக்கொண்டார்..
கூட்டுத்தாபனங்கள், மற்றும் சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் போது அவர்களுக்குரிய தகுதிகளைக் கண்டறிந்து பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியிருந்தார். இது தொடர்பான சுற்றுநிருபம் அண்மையில் வெளியானது.
ஜனாதிபதியின் இரண்டு பிரதிநிதிகளும், பிரதமரின் இரண்டு பிரதிநிதிகளும், நிதியமைச்சின் ஒரு பிரதிநிதியும் இந்தக் குழுவில் உள்ளடங்க வேண்டும் என்பது இந்த சுற்றுநிருபத்தின் விதிமுறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.