இந்நாட்டில் வாழும் பெரும்பான்மை சமூகத்துடன் முஸ்லிம்கள் ஒருபோதும் முட்டி மோதி வாழமுடியாது. நாட்டில் முஸ்லிம்கள் அன்று முதல் இன்றுவரை ஏனைய சமூகங்களுடன் ஒன்றுபட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்ட போதும்கூட எமது முதாதையர்கள் 1100 வருடங்களாக கட்டிக் காத்த நல்லுறவை சீர்குலைக்க ஒருபோதும் எத்தனிக்கக் கூடாதென ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் கூறினார்.
களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன விஷேட கூட்டம் நேற்று முன்தினம் மக்கொனை இந்திரிலிகொடையில் மாவட்டத் தலைவர் இக்பால் சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விஷேட பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
முன்னாள் அமைச்சரும் தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவருமான இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், களுத்துறை நகரபிதா ஆமிர் நஸீர், பேருவளை பிரதேச சபை எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் ஏ.ஆர்.எம்.பதியுத்தீன், பாணந்துறை பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் தாஹிர் பாஸி, பேருவளை நகரசபை உறுப்பினர் அரூஸ் அஸாத், பிரதேச சபை உறுப்பினர் எம்.காமில், சம்மேளன முன்னாள் தலைவர் ஏ.எஸ்.எம். பௌஸி ஹாஜியார் ஆகியோர் விஷேட அதிதிகளாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் களுத்துறை மாவட்ட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. அவர் தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது, முஸ்லிம்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏனைய சமூகங்களுடன் சண்டையிட்டு முட்டிமோதி வாழும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படக்கூடாது. சில இளைஞர்களின் ஆவேசமான செயற்பாடானது முழு சமூகத்தையும் பாதிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 1100 வருடங்களாக இந்நாட்டில் வாழும் முஸ்லிம்கள் தாய்நாட்டுப் பற்றோடு வாழ்வதுடன் ஏனைய பெரும்பான்மை சமூகங்களுடன் பரஸ்பர புரிந்துணர்வோடும், ஒற்றுமையோடும் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நாட்டில் இனக்கலவரங்கள் ஏற்பட்டபோதெல்லாம் முஸ்லிம்கள் ஒரு போதும் மதஸ்தலங்களை தாக்கவோ சேதப்படுத்தவோ இல்லை. அண்மையில் மாவனெல்லையில் பௌத்த சிலைகளைத் தாக்கி சேதப்படுத்திய சம்பவத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இது வேதனைக்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும். 1100 வருடங்களாக எமது முதாதையர்கள் கட்டிக்காத்த இந்த ஒற்றுமையை என்றும் பேணி செயற்பட வேண்டும்.
தர்கா நகரில் அல்லது பேருவளையில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வழலாம். எனினும், சிங்கள மக்களை நான்கு புறத்தாலும் சூழவுள்ள வியங்கல்லை, பலாந்தை, வெலிப்பன்னை போன்ற குக்கிராமங்களில் வாழும் முஸ்லிம்களின் நிலைபற்றி சிந்திக்கவேண்டும். ஆவேசப்பட்டு நாம் செயற்படும்போது அது முழுச் சமூகத்தையும் பாதிப்படையச் செய்கிறது. இளைஞர்களுக்கு நாம் ஒருபோதும் தவறான வழியை காட்டக்கூடாது. எமது பிள்ளைகளுக்கு சரியான வழியை காட்டாவிட்டால் அவர்களது எதிர்காலம் பயங்கரமானதாக அமையும்.
துடிதுடிப்புள்ள, சமூக உணர்வுள்ள இளைஞர்களை இவ்வாறான அமைப்புக்களில் உள்வாங்கி அவர்களை சமூகத்திற்கு சேவை செய்யக்கூடியவர்களாக மாற்றவேண்டும்.
பள்ளிவாசல்களை கேந்திரஸ்தானங்களாக மாற்றி போதனைகளை வழங்கவேண்டும். பள்ளிவாசல்கள் வெறுமனே தொழுகை மற்றும் உணவு வழங்கும் இடங்களாக மாத்திரமின்றி அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்ற மத்தியஸ்தானமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த நிலைமை இன்று இல்லை. இன்று பள்ளிவாசல்கள் 9 மணிக்கே மூடப்படுகின்றன. இந்த நிலைமாறி முஸ்லிம் சமூகத்தில் அறிவுக்குரிய மத்தியஸ்தானமாக பள்ளிவாசல்கள் மாறவேண்டும். எமது பிள்ளைகளுக்கு பள்ளிவாசல்களில் கல்விப் போதனை வழங்கினால் அவர்கள் வெளியே சென்று படிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சமூகம் இதைப்பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும்.
எமது பிள்ளைகள் பிரத்தியேக வகுப்புக்கென வெளியே செல்கிறார்கள். அவர்கள் யாருடன் தொடர்பு வைத்துள்ளார்கள், எங்கே செல்கிறார்கள், யாருடன் தொலைபேசி தொடர்பு இருக்கிறது என்பது பற்றியெல்லாம் பெற்றோர்கள் பார்க்க வேண்டும். மாவனெல்லை சிலை உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர்களும் ஹதீஸ் வகுப்புக்களுக்கு சென்றுதான் இந்தச் செயலை செய்துள்ளார்கள். அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டு தவறான வழிகாட்டல் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று இந்த இளைஞர்களின் பெற்றோர்கள் அவர்களை எவ்வாறு விடுவிப்பது என்பது பற்றி இரவு பகல் தூக்கமின்றி அழுது புலம்புகிறார்கள்.
முஸ்லிம் சமூகம் இவ்வளவு காலமும் எதிர்நோக்கிய சவால்களைவிட புதிய சவால்களுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மை சமூகத்துடன் மோதவைக்கும் சதிமுயற்சிகளும் இருக்கக்கூடும். சர்வதேச அமைப்புக்களுடன் தொடர்பிருக்கலாம் என்று தொடர்புபடுத்துவதற்கு சிலநேரம் சதித்திட்டங்களும் இருக்கலாம். முஸ்லிம் சமூகம் இதுகுறித்து மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
அரசியல் மற்றும் மார்க்க ரீதியிலான பிளவுகள் சமூகத்தின் எதிர்கால விமோசனத்திற்கு பெரும் தடையாக அமைந்துள்ளன. எனவே, முஸ்லிம்கள் எல்லா வேற்றுமைகளையும் மறந்து ஒன்றுபட வேண்டும். அதன்மூலமே சமூகத்தின் எழுச்சி தங்கியுள்ளது. முஸ்லிம்களுக்கெனத் தனியான பத்திரிகை அவசியம். ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழிகளிலும் பத்திரிகை வெளியிடுவது காலத்தின் தேவையாக உள்ளது. சமூகம் எதற்கெல்லாமோ செலவு செய்கிறது. அரசாங்கம் கட்டிடம் அமைத்துக் கொடுக்க வேண்டிய பாடசாலைகளுக்கு நாம் கட்டிடம் அமைத்துக் கொடுக்கிறோம். எமது குரலை, எமது உரிமைகளை சுட்டிக்காட்டுவதற்கு தனியான ஊடகங்கள் அவசியமாகும்.
அரசியல் கட்சி என்பது எமக்குப் பிரச்சினையல்ல. எல்லாக் கட்சி அரசியல்வாதிகளும் சமூகத்திற்கு சேவைசெய்யவே வந்துள்ளார்கள். அவர்களை சமூகம் சரியாகப் பயன்படுத்தி கிராமத்தின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளப் பயன்படுத்த வேண்டும். அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் சகல அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்களைக் கொண்டு அன்று முதல் இன்று வரை இயங்கி வருகிறது. மர்ஹூம் தேசமான்ய எம்.ஏ. பாக்கிர் மாக்கார் இற்றைக்கு 49 வருடங்களுக்கு முன்னர் ஸ்தாபித்த இந்த இயக்கம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக அவ்வப்போது பாரிய சேவைகளை செய்துள்ளதை இந்த நாடே அறியும். எனவே, இந்த அமைப்பை மேலும் சக்திபெறச் செய்து அதன்மூலம் பெற முடியுமான சேவைகளைப் பெற்றுக் கொள்வோம். இந்த அமைப்பை எவரும் வர்ணக்கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டாம்.
மேல்மாகாண கல்விப் பிரச்சினை தொடர்பாக மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஸாலியுடன் நாம் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளோம். எதிர்காலத்தில் மாகாணத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகிட்டும். களுத்துறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் பல்வேறுபட்ட குறைபாடுகளை ஒன்று திரட்டி அவற்றை மாகாண ஆளுநரிடம் சமர்ப்பிக்க முயற்சி செய்வோம் என்றார்.
இந்நிகழ்வில் மக்கொனை சாந்த மரியாள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கு இஸ்லாம் படிப்பிக்க ஆசிரியர் இல்லாமை தொடர்பில் பிரதேச சபை உறுப்பினர் எம். காமில் சுட்டிக் காட்டினார். அந்த ஆசிரியருக்கு மாதாந்த சம்பளமாக 10000 ரூபாவை களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் செயலாளர் மர்ஹூம் எம்.ஐ.எம். பாரூக்கின் ஞாபகார்த்தமாக வழங்குவதற்கு அவரது புதல்வர் இக்பால் பாரூக் முன்னவந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் மக்கொனை ஜனாஸா நலன்புரிச் சங்கத்திற்கு தேவையான பிளாஸ்ரிக் கதிரைத் தொகுதியையும் இதன்போது கையளித்தார். மாவட்ட செயலாளர் ரிஸ்மி மஹ்ரூப் உட்பட மற்றும் பலரும் இங்கு உரைநிகழ்த்தினர்.