Top News

ஜனாதிபதி மூன்று மாதங்களாக சபை அமர்வில் பங்கேற்கவில்லை!

ஜனாதிபதி மூன்று மாதத்துக்கு ஒருமுறையேனும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ள வேண்டுமென அரசியலமைப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று மாதங்கள் கடந்தும் சபைக்கு வரவில்லை. இதுதொடர்பாக அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்கப்போகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார்.

பாராளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. பாராளுமன்ற ஆரம்ப நிகழ்வுகள் நிறைவடைந்த பின்னர் நிலையியற் கட்டளை 27/2 விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு கேள்வியெழுப்பினார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி மூன்று மாத்துக்கு ஒருமுறை பாராளுமன்ற சபை அமர்வில் கலந்துகொள்ளவேண்டும். ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் மாதம் 12ஆம் திகதியே பாராளுமன்ற அமர்வில் இறுதியாக கலந்துகொண்டார். தற்போது மூன்று மாதங்கள் கடந்தும் ஜனாதிபதி பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

மேலும் ஜனாதிபதி மூன்று மாதங்கள் கடந்தும் பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்ளாமல் இருந்தமை அரசியலமைப்புக்கு முரணாகவே பார்க்கப்படவேண்டும். இதுதொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதை தெறிவி்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல பதிலளிக்கையில், ஜனாதிபதி மூன்று மாதங்கள் கடந்தும் பாராளுமன்ற அமர்வில் கல்ந்துகொள்ளாமை தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது. என்றாலும் இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு அறிவுறுத்த முடியும். அதனை நாங்கள் செய்வோம் என்றார்.
Previous Post Next Post