திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரிக்கு ஹபாயா அணிந்து கொண்டு சென்ற 4 முஸ்லிம் ஆசிரியைகளுக்கு பாடசாலை நிர்வாகம் ஆட்சேபணை தெரிவித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட முஸ்லிம் ஆசிரியைகள் கடந்த 9 மாதகாலமாக தற்காலிக இடமாற்றத்தில் இருந்து வந்துள்ள வேளை அதற்கான முறைப்பாட்டையும் மனித உரிமை ஆணைக்குழுவிடம் செய்திருந்தனர்.
மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைகள் முடிவுற்று அதற்கான மனித உரிமை ஆணையகத்தின் பரிந்துரைகள் இன்னும் சில நாட்களில் வரவிருக்கும் நிலையில் தற்காலிக் இடமாற்றத்தல் இருந்த ஆசிரியர்களின் இடமாற்றக் காலக்கெடு சென்ற டிசம்பர் 31ம் திகதியோடு முடிவுற்ற நிலையில் மீண்டும் ஷண்முகா இந்துக் கல்லூரியில் இன்று கடமை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிரியைகளான பாத்திமா பஹ்மிதா ரமீஸ்,சஜானா பாபு முஹம்மத் பசால்,சிபானா முஹம்மத் சபீஸ்,ரஜீனா ரோஷான் ஆகிய ஆசிரியைகள் இன்று ஹபாயாவோடு ஷண்முகா இந்துக் கல்லூரியில் மீண்டும் கடமையேற்றனர்.
ஷண்முகா ஹபாயா சர்ச்சையின் ஆரம்பத்தில் இருந்து குரல்கள் இயக்கம் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்குத் தேவையான அனைத்து தொழில் நுட்ப மற்றும் சட்ட ஆலோசனைகளையும் வழங்கி வந்தது.குரல்கள் இயக்க உறுப்பினர்களான சட்டத்தரணிகள் அஸ் ஹர் லதீப்,ரதீப் அஹ்மத் ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைகளில் ஆசிரியைகள் சார்பாக பல ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைத்தனர்.
அனைவருக்கும் தத்தமது கலாச்சார ஆடைகளை அரசாங்க அலுவலகங்களுக்கு அணிந்து செல்வதற்கான அடிப்படை உரிமை இலங்கை அரசியல் யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற அடிப்படையில் அது மீறப்பட்ட போது ஒரு சிவில் அமைப்பு என்ற ரீதியில் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளுக்காக குரல்கள் இயக்கம் குரல் கொடுத்தது.
இந்தப் போராட்டத்தில் விட்டுக் கொடுக்காமல் இறுதி வரைக்கும் தங்கள் உரிமையை மீளப்பெறுவதற்காக போராடிய ஆசிரியைகளின் உறுதியும்,திடமும் பாராட்டத்தக்கது.