வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் போது இங்கு வாழும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கும் சமனான அதிகாரம் உரிமையும் வழங்கப்பட வேண்டுமெனத்தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் இந்நாட்டிலே எதிர்காலத்தில் எந்தவொரு சமூகமும் தமது உரிமைக்காகப் போராடும் நிலை உருவாகக்கூடாதென்றும் அவர் கூறினார்.
தமிழ் மக்களது நியாயபூர்வமான போராட்டத்தைக்காட்டிக் கொடுத்து கருணா அம்மான் செய்த துரோகத்தினால் மட்டக்களப்பு மக்கள் அனைவரும் பழியைச் சுமந்து கொண்டிருக்கிறோம் இந்தப்பழியிலிருந்து நாங்கள் எப்போது மீண்டு வருவதென்று தெரியவில்லையென்றும் அவர் குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு – ஏறாவூர் எல்லை நகர் பீஎன்ஏ. விளையாட்டுக்கழகம் மற்றும் ஐக்கிய இளைஞர் கழகம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (19) நடைபெற்ற விசேட நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இக்கருத்துக்களை வெளியிட்டார்.
இங்கு ஐக்கிய பொங்கல் நிகழ்வு நடைபெற்றதுடன், வாழ்வாதாரம் குறைந்த தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. மேலும், விவசாயிகள் நால்வர் மற்றும் கலைஞர் ஒருவரும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். அதிதிகளுக்கு நினைவுச்சின்னமும் வழங்கப்பட்டன.
அக்னி இசைக்குழுவின் தலைவர் சுப்ரமணியம் ரகுபரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இந்நாடு ஒரு இனத்துக்குரிய நாடல்ல. இந்நாட்டிலுள்ள அனைத்துப் பிரஜைகளும் சுயநிர்ணய உரிமையுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். இதற்காகவே நாங்கள் அரசியல் தீர்வினைக் கோரிக்கொண்டிருக்கின்றோம்.
இந்நாட்டிலுள்ள பெரும்பான்மைச்சமூகம் ஏனைய தேசிய இனங்களை அடக்க முடியாது. தமிழ் மக்களுக்கு அதிகாரம் கிடைக்குமாகவிருத்தால், முஸ்லிம் மக்களுக்கும் அதிகாரம் சமனாக வழங்கப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் நியாயமான அரசியல் தீர்வினைக் பெறும் போது, இஸ்லாமிய மக்கள் தமது உரிமைக்காகப்போராடும் நிலை உருவாகக்கூடாது இங்கு வாழும் இஸ்லாமிய மற்றும் சிங்கள மக்கள் கேட்காமலே அந்த மக்களுக்குரிய உரிமை வழங்கப்பட வேண்டும். இந்நிலை ஏற்படுமாயின், நாங்கள் அனைவரும் இலங்கையர் என்ற உயர்வோடு வாழ முடியும்.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இஸ்தாபகத்தலைவர் தந்தை செல்வநாயம் எந்தவொரு தீர்வையும் ‘தமிழ் மக்களுக்கு” என்று கேட்கவில்லை ‘தமிழ் பேசும் மக்களுக்குத்தீர்வு” வேண்டும் என்றே கோரினார். அதனடிப்படையில் கடந்த காலங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சியில் இல்லாமிய சகோதரர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தார்கள்.
முன்னாள் பிரதியமைச்சராக இருந்த கருணா அம்மான் தமிழ் – முஸ்லிம் மக்களை மோதவிட வேண்டுமென்று பல நடவடிக்கைகளை அண்மைக்காலமாக முன்னெடுத்து வருகிறார். கிழக்கில் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்தது தொடர்பாக பல கருத்துக்கள் வெளியிடுகிறார். ஆளுநரை நியமித்தவர் ஜனாதிபதியாவார். அவர் கருணா அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகும்.
இதே நேரம் நீங்கள் மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பில் உள்ளீர்கள். நீங்கள் அவர்களிடம் கேட்டு கிழக்கு மாகாண ஆளுநராக வந்திருக்கலாமே என்று கேள்வியெழுப்பினார்.
ஆளுநர் பதவியைக்கேட்பதற்கு துணிவில்லாத கருணா அம்மான் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் எல்லாவற்றையும் தமிழர்களுக்கெதிராகச் செய்கிறது. அதற்குத் தமிழ் தேசியக்கூட்டமைப்பு துணை போயிருக்கிறது என பேசித்திரிவது வேடிக்கையாக இருக்கிறது.
தமிழ் மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் செல்லாத கருணா அம்மான் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிப்பதாகக் கூறுவது வெட்கப்பட வேண்டிதே.
உங்களுக்கு மகிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பிச்சையாகப்போட்டுள்ளார். அதன் மூலம் பெற்ற மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பதவியை வைத்து தமிழ் மக்களுக்கு என்ன சேவை செய்தீர்கள் எனக்கூற முடியுமா? முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள மக்கள் வசிக்காத பகுதிகளில் சிங்கள மக்களைக் குடியமர்த்தி வீடு கட்டிக் கொடுத்தது சிங்கள குடியேற்றத்தை ஏற்படுத்தினீர்கள். இது தான் நீங்கள் பிரதியமைச்சராக இருந்து செய்த மாபெரும் பணி என்றும் சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்திலே சஜித் பிரதேதாஸ எமது மக்களுக்காக எத்தனை வீடுகளைக் கட்டித்தருகிறார். இந்தச்சூழலை உருவாக்கியது தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நாங்கள் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியமைக்க உதவினாலும் தமிழ் மக்களின் அபிலாசைகளை தூக்கியெறிந்து அர்ப்ப சொற்ப சலுகைகளுக்காக ஒரு போதும் அமைச்சுப் பதவிகளைப் பெறமாட்டோம் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.