– அஹமட் –
அனுராதபுரம் – கிரலாகல புராதன தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்தார்கள் எனும் குற்றச்சாட்டில், அனுராதபுரம் சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் இன்று வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இதன்போது, மாணவர்களை விடுவிப்பதற்கு தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.
மேற்படி 08 மாணவர்களும் கடந்த வியாழக்கிழமை கெட்பிட்டிகொல்லாவ நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவர்களை பெப்ரவரி 05ஆம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறான சூழ்நிலையில், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை குறித்த மாணவர்களை பிணையில் விடுவிக்கும் பொருட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சட்டப் பணிப்பாளர் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தலைமையிலான சட்டத்தரணிகள், நீதிமன்றில் முன்னகர்த்தல் பிரேரணையொன்றினைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.
இந்த நிலையிலேயே, அமைச்சர் றிசாட் பதியுதீன் – இன்றைய தினம் மேற்படி மாணவர்களை சிறைச்சாலையில் சந்தித்துப் பேசியதோடு, அவர்களை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தார்.