-
ஊடகப்பிரிவு-
முஸ்லிம்களில் ஒருசிலர் மேற்கொள்ளும் சிறிய நடவடிக்கைகளை , 'ஐ.எஸ் ஐ.எஸ்' பயங்கரவாதத்துடன் சம்பந்தப்படுத்தி, அவர்களின் இருப்பை இல்லாமற்செய்யும் பயங்கரமான சதியொன்று அரங்கேற்றப்பட்டு வருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பை தளமாக கொண்டு இயங்கும் மனிதாபிமான நிவாரண அமைப்பினர் (HRF)
நாடளாவிய ரீதியில் நடத்திய ஹிப்ளுள் குர் ஆன் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசு வழங்கும் வைபவத்தில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
கொழும்பு தாமரைத்தடாகத்தில் இன்று காலை (27) இடம்பெற்ற இந்த நிகழ்வு அதன் ஸ்த்தாபக தலைவர் பிரௌஸ் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது.சிறப்பு அதிதிகளாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் ,மரைக்கார், மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் மற்றும் கொலன்னாவ ஜும்மா பள்ளிவாசல் சம்மேளன தலைவர் ஹனீப் ஹாஜியார் உட்பட பலர் பங்கேற்றனர்
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் அண்மைக்காலமாக உலக நாடுகளில் பயங்கரமான அச்சுறுத்தல் நிலவி வருகின்றது. 50 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளில் ஏறத்தாழ 90% நாடுகளில் இன்று நிம்மதியான சூழல் இல்லை. எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகளும் , அவலக்குரல்களுமே தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கின. இரத்த களரிகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு சூழல் சிறுபான்மையாக வாழும் நமது நாட்டிலும் தற்போது ஊடுருவியுள்ளது. இஸ்லாமியர்களை இல்லாமலாக்குவதற்காகவே சதிகாரர்கள் இவ்வாறான கைங்கரியங்களில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.
நமது மார்க்கத்தை பற்றி தவறாகவும் ஆபத்தானதாகவும் இன்று மற்றைய சமூகங்கள் பார்க்குமளவிற்கு நாளுக்கு நாள் இடம்பெறும் சம்பவங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. இந்த நிலையில் முஸ்லிம்களில் ஒருசிலர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழு சமூகத்தையும் பாதிப்படைய செய்வதோடு, ஒட்டு மொத்தமான இழுக்கையும் ஏற்படுத்துகின்றது. இந்த நிலையில் எங்களுடைய மார்க்கத்தின் நல்ல பண்புகளை அறியும் அளவிற்கு நமது நடவடிக்கைகள் அமைய வேண்டும். வாழ்க்கையிலே ஒவ்வொரு விடயங்களிலும் நேர்மையாக இருக்க வேண்டும். தடை செய்தவற்றையும் ஹராமானவற்றையும் வெறுத்து ஒதுக்க வேண்டும். முஸ்லிம் இவ்வாறான நல்லபண்புடன் தான் இருப்பான். என்ற செய்தியை பிற மக்கள் அறியும் விதத்திலே நமது செயற்பாடுகள் அமையுமானால் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றிப்புள்ளிவைக்கலாம்.
முஸ்லிம்களில் ஒரு சிலரின் தவறான செயற்பாடுகளினால் இன்று இஸ்லாத்தை பற்றியும் இஸ்லாமிய சட்டத்தை பற்றியும் பிழையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.எமது மூதாதையர்கள் நமக்குப்பெற்றுத்தந்த முஸ்லிம் திருமண விவகாரத்துச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த வேண்டுமென அண்மைக்காலமாக சில முஸ்லிம் பெண்கள் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளில் இஸ்லாத்திற்கு மாற்றமான சில ஆலோசனைகளும் இருக்கின்றன. ஆனால் அவர்களிடம் இவற்றைச்சுட்டிக்காட்டினால் அதற்கான காரணத்தையும் கற்பிக்கின்றார்கள் . எப்படியென்றால், ஒரு சில பெண்களின் கணவன்மார் தமது குடும்ப வாழ்வில் நடந்து கொள்ளும் முறை கேடான நடவடிக்கைகளை அத்தாட்சியாக காட்டி, பெண்களுக்கு நீதி கேட்கின்றார்கள். அந்நிய அரசியல் வாதிகளிடம் இந்த பிரச்சினையை கூறி, சமூகத்தை வெட்கி தலை குனிய வைக்கின்றார்கள். இவற்றுக்கெல்லாம் நாம் வழிசமைத்து விடக்கூடாது. இஸ்லாமியச்சட்டங்களை எல்லோரும் விமர்சிக்கும் நிலை இன்று இந்த நாட்டிற்கு வந்துள்ளதுள்ளமை வேதனையானது.
இன்று சிலர் முஸ்லிம்களை வேண்டுமென்றே வன்முறைக்கு இழுக்கும் வியூகங்களில் இறங்கியுள்ளனர்.அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்ற நோக்கிலும் சில அரசியல் வாதிகள் முஸ்லிம்களை பற்றி இல்லாத பொல்லாத கதைகளை கட்டி வருகின்றனர். முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும் அடிப்படைவாதிகளாகவும் காட்ட வேண்டிய தேவை சில அரசியல் கட்சிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் எழுந்துள்ளது . இவ்வாறான இனவாதிகளின் தேவைகளுக்கு தீனி போடும் வகையில் பெரும்பான்மை ஊடகங்களும் செயற்படுகின்றன.
வன்முறைகளை தூண்டி முஸ்லிம்களின் பொருளாதாரங்களையும் உடமைகளையும் அழிக்கவேண்டும் என்பதையும் நமது சமூதாயத்தையும் பெரும்பான்மை சமூதாயத்தையும் முட்டி மோத வைப்பதையும் இலக்காக கொண்டு கபடத்தனமாக காரியங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நாம் மிகப்பொறுமையுடனும் உச்சக்கட்ட நிதானத்துடனும் நடந்துக்கொள்வதே எமது சமூகத்தை பாதுகாக்கும் .
கண்டி ,திகன ,அம்பாறையில் நாம் உயிரை விடவும் மேலாக மதிக்கும் புனித குர் ஆனை தீயிட்டுக்கொளுத்தினர் . அல்லாஹ் வை சுஜுது செய்யும் பள்ளிவாசல்களை இடித்து தகர்த்தனர். எமது சமூகத்தின் கோடிக்கணக்கான பொருளாதாரங்களை சூறையாடினர்.ஆனால் நமது சமூகம் பொறுமை இழக்கவில்லை .
மாவனல்லையில் ஒரு சில இளைஞர்கள் சிலைகளை உடைத்தமைக்காகவும் புத்தளம் வனாத்தவில்லுவில் ஒரு சில ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டமைக்காகவும் முஸ்லீம் சமூகத்தின் மீது இவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஐ.எஸ் ஐ.எஸ்' பயங்கரவாதிகளுடன் இணைத்து பேசுகின்றனர்.இதன் பின்புலம்தான் என்ன ?
தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இதனையே நாமும் வலியுறுத்துகின்றோம். குற்ற ச்செய்தவர்களுக்கு அதற்கான தண்டனையை கொடுங்கள் . சமூகத்தின் மீது வீண் பழியை சுமத்தாதீர்கள்.
பௌத்தர்களின் புனித தூபியில் ஏறி நின்று புகைப்படமெடுத்த பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாசாவுடன் பேசினேன்." உண்மையில் இம்மாணவர்கள் இதன் தாற்பரியத்தை உணரவில்லை .தவறு என்று அவர்களுக்கு விளங்கவும் இல்லை , தவறு என்று அறிந்திருந்தால் முக நூல்களில் பிரசுரித்திருக்க மாட்டார்கள்." என்ற விடயங்களை அவரிடம் எடுத்துச்சொல்லி கருணையின் அடிப்படையில் இம்மாணவர்களை விடுதலை செய்ய உதவுமாறு வேண்டினேன்.
எது எப்படி இருந்த போதும் நமது சமூகம் மிகவும் அவதானமாகவும் பொறுமை காத்தும் வாழ்வதன் மூலமே எதிர்கால சவால்களை முறியடிக்க முடியும்.என்று அமைச்சர் தெரிவித்தார்.