Top News

வில்பத்து குடியேற்ற தீர்ப்பு : ஓகஸ்ட் 06 இல் வெளியாகும்



வில்பத்து சரணாலயம் மற்றும் அதனை அண்டிய காட்டை அழித்து, குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதியன்று வழங்கப்படுமென, மேன்முறையீட்டு நீதிமன்றம், ​இன்று (27) அறிவித்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக குமுதின் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் முன்னிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்கண்ட அறிவிப்பு விடுக்கப்பட்டது.இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்த வழக்குத் தவணையின் போது, தீர்ப்பு வழங்கப்படுமென, நீதியரசர்கள் அறிவித்தனர்.

வில்பத்து சரணாலயம் மற்றும் அதனை அண்டிய காட்டை அழித்து, குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து, சுற்றுச்சூழல் நீதி மய்யத்தினால், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வனஜீவராசிகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மன்னார் மாவட்டச் செயலாளர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சட்ட மா அதிபர் ஆகியோர், இந்த மனுவின் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post