கொகேய்ன் போதைப் பொருளை பயன்படுத்தும் அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கம் எவ்வாறு, கொகேய்ன் போதைப் பொருளை இல்லாதொழிக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
தங்காலையில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
கொகேய்ன் பயன்படுத்தும் அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்தால் அது பற்றி பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றில் இருக்கும் அனைவருக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட முடியாது.
அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைவருக்கு எதிராகவும் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அமைச்சரவையில் அங்கம் வகிப்போர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
கொக்கேய்ன் போதைப் பொருள் பயன்படுத்தும் அரசாங்கமொன்றுடன் எவ்வாறு கொகேய்ன் போதைப் பொருளை இல்லாதொழிக்க முடியும்?
தற்பொழுது இடம்பெறும் சம்பவங்கள் 89-90களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு நிகரானது. அந்தக் காலத்தில் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டனர்.
தற்பொழுதும் இவ்வாறான காணமால் போதல் சம்பவங்கள் பதிவாகத் தொடங்கியுள்ளன. அரசாங்கம் இதற்கு பொறுப்ப சொல்ல வேண்டும். இதிலிருந்து விடுபட முடியாது, அரசாங்கம் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும். ஜனாதிபதித் தேர்தலுக்கும் நாம் தயார். எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.