Top News

மீண்டும், ஓய்வின் பின் களமிறங்க தயாராகும் ஜெமீல்!

பூமுதீன்

தீவிர அரசியல் களத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் மீண்டும் களமிறங்கியுள்ளார்.அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செல்வாக்கை மேலும் மேலோங்கச் செய்யும் அரசியல் யுக்திகளையும் அவர் கையாள ஆரம்பித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரான ஜெமீல் – மக்கள் காங்கிரஸை விட்டு வெளியேறி விட்டார் என்றும், கட்சியின் தலைவரான ரிசாத் பதியுதீனுடன் முரண்பட்டுக் கொண்டார் என்றும் அண்மைக்காலமாக மாற்றுக்கட்சியினரால் பரப்பப்பட்டு வந்த பொய் வதந்திகளுக்கு அவரின் இந்தத் தீவிர அரசியல் களக் குதிப்பின் மூலம் முற்றுப் புள்ளி வைத்துள்ளார் என அறியமுடிகின்றது.

அடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்குள் அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களுக்கும் விஜயங்களை மேற்கொள்ளவுள்ள ஜெமீல், அப்பிரதேசங்களில் உள்ள ம.காவின் மத்திய குழு, கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச புத்திஜீவிகள் என பலதரப்பட்டவர்களைச் சந்தித்து மக்கள் காங்கிரஸை மேலும் வளர்க்க திடசங்கற்பம் பூண்டுள்ளதாக அறிய வருகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் அல்லது மாகாண சபைத் தேர்தல் – இவைகளில் எத்தேர்தல் முதலாவதாக நடைபெறுகின்றதோ அத்தேர்தல் தொடர்பில் கட்சியும் கட்சித் தலைமையும் எத்தீர்மானத்தை எடுக்கின்றதோ அத்தீர்மானத்தை குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் தீவிரமாகச் செயற்படுத்துவதற்கும் அவர் தயாராகி வருவதாகவும் தெரியவருகின்றது.

முஸ்லிம் சமூகத்திற்குத் தலைமை தாங்கக்கக் கூடிய ஒரு தேசியத் தலைமை இருக்குமாக இருந்தால் அது ரிசாட் பதியுதீன் என்ற மனிதன் தான் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஜெமீல், அத்தலைமையை மேலும் வலுப்படுத்தவதற்காக இளைஞர் சமூதாயத்தை இலக்காகக் கொண்ட நல்ல பல திட்டங்களையும் வகுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியக் கூடியதாக உள்ளது.

ஜெமீலின் சொந்தப் பிரதேசமான சாய்ந்தமருதினைச் சேர்ந்த – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்பகாலத் தொண்டர்கள் , மத்திய குழு மற்றும் வட்டாரக் குழுக்கள் போன்றன – ஜெமீலின் மக்கள் காங்கிரஸை மேலும் வலுப்படுத்தும் செயற்பாடுகளுக்குப் பூரண அங்கிகாரமும் ஒத்துழைப்பும் வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இது இவ்வாறிருக்க, மக்கள் காங்கிரஸ் தலைமையுடன் ஜெமீல் முரண்பட்டுக் கொண்டார் என்ற வதந்தியை உண்மை என நம்பிய மாற்றுக்கட்சியினர் ஜெமீலின் மீள் அரசியல் கள வருகையினால் மூக்குடைந்து போயுள்ளனர்.

மக்கள் காங்கிரஸின் அரசியல் பணிகளிலிருந்து ஜெமீல் ஒதுங்கியிருந்தமைக்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட கடும் சுகவீனம் என்பதும் அதன் காரணமாகவே அவர் அரச வர்த்தக் கூட்டுத் தாபனத்திலிருந்தும் விலகியிருந்தார் என்பதும் தெரியவருகின்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டம் உட்பட நாடுபூராகவும் மக்கள் காங்கிரஸைப் பலப்படுத்துதல் மற்றும் புணரமமைப்புச் செய்தல் என்பனவற்றில் கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதன் விசேட வியூகங்களை வகுத்து ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் அறிய முடிகின்றது.
Previous Post Next Post