வணாத்தவில்லு பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களின் பின்னணியை கண்டுபிடிக்கத் தவறினால் முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைதூக்கும் அபாயம் இருக்கின்றது என தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர் பத்ம உதயசாந்த தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
30 வருட யுத்தத்துக்கு முகம்கொடுத்த எமது நாடு, அதன் மூலம் அனைத்து இன மக்களும் பல்வேறு விதமாக பாதிக்கப்பட்டனர். அதுபோன்றதொரு நிலை மீண்டும் தலைதூக்குவதை இந்த நாட்டிலிருக்கும் எந்த இனமும் அனுமதிக்கப்போவதில்லை. ஆனால் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு உலகம் பூராகவும் பரவி வருகின்றது. அதன் தாக்கம் இலங்கையிலும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த பிரேரணையை முன்வைத்தேன்.
அத்துடன் மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலையை சேதமாக்கியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் 100 கிலோ கிராம் கொண்ட வெடிபொருட்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்களை கைதுசெய்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் எமது நாட்டிலும் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் தலைதூக்கும் அபாயம் இருக்கின்றது.
அதனால் அன்று அல்பர்ட் துரையப்பாவை கொலை செய்ததை மறைக்க நடவடிக்கை எடுத்ததால் பிரபாகரன் தோன்றி ஆயுதபோராட்டமே இடம்பெற்றது. அதேபோன்று இன்று புத்தளம் வணாத்தவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் இப்ராஹிம் சகோதரர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தால் அதன் பெயரில் முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் தலைதூக்கும் அச்சம் இருக்கின்றது.
அதனால் தலைமறைவாக இருக்கும் குறித்த நபர்களை மேல்மாகாண அரசியல்வாதி ஒருவர் பாதுகாப்பதாக தெரிவிக்கப் படுகின்றது. அவ்வாறு செயற்பட்டால் எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கே இது பாதிப்பாக அமையும். அதனால் நாட்டில் மீண்டும் அடிப்படைவாத அமைப்புக்கள் தலைதூக்காமல் இருக்க நாங்கள் அனைவரும் இணைந்து செயற்படவேண்டும் என்றார்.