நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளம் உட்பட ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம் குடும்பங்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வரவேண்டும் என பகிரங்க அழைப்பு விடுப்பதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் புத்தளத்தில் தெரிவித்தார்.
புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று நூர்தீன் மசூர் விளையாட்டரங்கில் இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ்.எம். ஹூஸைமத் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேற்கண்டவாறு ௯றினார்.
இங்கு தொடர்ந்தும் பேசிய கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் ௯றியதாவது, இன்று வடக்கில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான காணிகள் மீளவும் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கடந்த மாதமும் ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டன. எதிர்வரும் 6 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களுடைய மக்களின் சில தொகுதி காணிகளை கையளிக்கவுள்ளார்.
அது மாத்திரமின்றி, வடமாகாணத்தில் வீட்டுப் பிரச்சினைகள், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கடந்த அரசாங்கம் செய்யாத பணிகளை நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்ட நான்கு வருடங்களில் நாங்கள் முன்னெடுத்திருக்கிறோம்.
இன்று வடக்கில் எந்த பிரச்சினைகளும் கிடையாது. வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய நிருவாக மாவட்டங்களில் வாழும் மக்கள் சுதந்திரமாகவும், ஐக்கியமாகவும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அதேபோல 1990 களில் அசாதாரணமான சூழ்நிலையில் இடம்பெயர்ந்து புத்தளம் போன்ற ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வரும் வடக்கு முஸ்லிம் மக்களும் சொந்த பூர்வீகத்திற்கு வந்து எங்களோடு ஒற்றுமையோடும், சமமாகவும் வாழவேண்டும்.
இந்த பாடசாலைக்கு இடப்பற்றாக்குறையை நிவர்த்திக்க கட்டடம் ஒன்றும், விளையாட்டு மைதானம் புனரமைப்பு , கணிதம், விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பித்தல் உள்ளிட்ட பல குறைபாடுகள், தேவைகள் பற்றி அதிபர், பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர், பழைய மாணவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனவே, விரைவில் இந்த பாடசாலையில் உயர்தரத்திற்கான விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளை ஆரம்பிப்பதற்கும், அதற்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொறுப்புணர்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
அத்துடன், இந்த பாடசாலையில் காணப்படும் விளையாட்டு மைதானத்தை சகல வசதிகளுடன் மேலும் புனரமைந்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன்.
ஏனைய கோரிக்கைகளை கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.
புத்தளத்தைப் போன்று இன்று வடபகுதியில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் கட்டடப் பற்றாக்குறை, தளபாடப் பற்றாக்குறை உள்ளிட்ட குறைபாடுகளுடன் பல பாடசாலைகள் இயங்குகின்றன.
கடந்த அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை காட்டி பெற்ற நிதிகளை ஏனைய மாகாணங்களுக்கு கல்வி உட்பட உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார்கள்.
ஆனால் , தமிழ், முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள், அந்த மாணவர்கள் கற்கும் பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவில்லை.
எனவே, தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சி அமைத்திருக்கிறது. எமது கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி தொடர்பில் ௯டுதல் கவனம் செலுத்தியுள்ளார்.
இன்று மேற்௯றிய மாகாணங்களுக்கு நேரடியாக சென்று அங்கு வாழும் மக்களிடம் தேவைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்துகொடுக்கின்றார். மாத்திரமின்றி, எதிர்வரும் வரவு - செலவு திட்டத்திலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி பணிகளுக்காக ௯டுதலான நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
இந்த நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் தமிழ், முஸ்லிம் குடும்பங்களை முழுமையாக மீள்குடியேற்றம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை இந்த அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
தமது சொந்த மண்ணில் மீள்குடியேறுவதில் மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த தமிழ், முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதில் பிரதமர் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறார்.
வடக்கில் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற வருகின்ற , அங்கு வாழும் காணியிருந்தும் வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டத்தின் ஊடாக புதிய வீடுளை நிர்மாணித்துக் கொடுத்திருக்கிறோம். குறித்த வீடு ஒன்றை நிர்மாணிக்க 12 இலட்சம் ரூபா வரை நிதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அடுத்த வரவு செலவு திட்டத்தில் வீட்டுத் திட்டத்திற்கான நிதியை 15 இலட்சம் ரூபாவாக அதிகரித்துக் கொடுப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்தோடு, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் காணியில்லாத குடும்பங்களுக்கு அரச காணியையும் வழங்கி, வீட்டுத் திட்டத்தையும் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
யாழ். மாவட்டத்தில் அரச காணிகள் இல்லை. எனினும் தேவை ஏற்பட்டால் மருதங்கேணி பிரதேசத்தில் உள்ள அரச காணிகளை பகிர்ந்தளித்து வீடுகளையும் கட்டிக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்