- எம்.எம்.ஏ.ஸமட்
எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமை இலங்கை அதன் 71ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடத் தயாராகி வருகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெறவுள்ள 71ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் மாலைதீவு ஜனாதிபதி இப்றாகிம் முகம்மட் சாலி பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்துலகிலுமுள்ள இலங்கையின் தூதரகங்களிலும் 71ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இலங்கை மண்ணின் பல்லின சமூகத் தலைவர்களின் பெரும் தியாகங்களினாலும், அர்ப்பணிப்புக்களினாலும் பெறப்பட்ட இச்சுதந்திரத்தின் உரிமைகளை அனைத்து இன மக்களும் அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திருக்க முடியாது.
இருப்பினும், பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் வாழும் பேரினவாத கடும்போக்காளர்கள் இச்சுதந்திரத்தின் வரலாற்றுப் பின்னணி தெரியாமல் இந்நாடு பௌத்த சிங்கள மக்களுக்கு மாத்திரம் உரித்தானது, ஏனைய இனத்தினர்கள் இந்நாட்டின் வந்தேறு குடிகள் என சந்தர்ப்பத்திற்கு சந்தர்ப்பம் கூறிவருவதையும் அவதானிக்க முடிகிறது.
கடும்போக்காளர்கள் கூறுவது போன்று இந்நாடு பெரும்பான்மை இன மக்களுக்கு மாத்திரம் உரித்தானதல்ல. இந்நாட்டில் யாரெல்லாம் குடியுரிமை பெற்று வாழ்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இந்நாடு சொந்தம் என்பதை குறிப்பிட்ட வர்க்கத்தினருக்கு தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்நாட்டில் வாழும் ஒவ்வொரு சிறுபான்மை இனத்தினரதும் பொறுப்பாகவுள்ளது. அதற்கான நாள் இந்நாடு சுதந்திரம் பெற்ற தினமாகும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. அந்தவகையில், இந்நாட்டில் சிறுபான்மை இனமாக வாழும் முஸ்லிம்களின் வரலாற்றுப் பின்னணி பற்றியும் அவர்கள் இந்நாடு சுதந்திரம் பெறுவதற்கும், சுதந்திரத்திற்கு முன்னரும் புரிந்த தியாகங்கள் பற்றி நாட்டுப்பற்றுடன் வெளிப்படுத்தப்படுவதும் அவசியமாகும்.
இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம்கள்
இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களின் தாய்நாடு இலங்கை. இந்நாட்டை விட்டு ஓடவோ அல்லது இந்நாட்டின் இறைமைக்கும் அதன் சுதந்திரத்துக்கும் பங்கம் ஏற்படுகின்றபோது, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவோ அல்லது இந்நாட்டுக்குத் துரோகம் இழைக்கவோ முடியாது. ஏனெனில, இந்நாட்டில் வாழ்ந்து மறைந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் வரலாறானது, வரலாறு தெரியாத கடும்போக்காளர்கள் கூறுவதுபோன்றதல்ல. இந்நாட்டில் மிக்க தொன்மைவாய்ந்த வரலாற்றை கொண்ட ஒரு தனித்துவ இனமாக முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருசில மாற்றுமதக் கல்வியியலாளர்கள் எழுதுகின்ற போட்டிப் பரீட்சைக்கான நூல்களில் பொதுஅறிவு விடயங்களில் ஒன்றாக இந்நாட்டின் தேசிய இனமாக முஸ்லிம்களைச் சுட்டிக்காட்டுவதில் தவறிழைத்து வருகின்றனர். இந்நாட்டின் மூவினங்களில் தேசிய இனமாக முஸ்லிம்களைக் கருதாதிருப்பதை அவதானிக்க முடிகிறது.
விஜயனும் அவனது நண்பர்களும் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்ததிலிருந்து இந்நாட்டின் வரலாறு எழுதப்பட்டது. அதற்குப் பின்னரே இலங்கையின் ஆட்சி முறைமை நிலவி வருவதாக வரலாறு கூறுகிறது. இலங்கை வரலாற்றில் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்ட ஆட்சிகள் நிலவியுள்ளன. அநுராதபுர ஆட்சிக் காலம், பொலநறுவை ஆட்சிக்காலம், யாப்பகுவ இராஜதானி, தம்பதெனிய இராஜதானி, யாழ்ப்பாணம் இராஜதானி, சீதாவக்கை இராஜதானி, கோட்டை இராஜதானி, கண்டி இராச்சியம் என்ற அடிப்படையில் அக்கால ஆட்சி புலம் காணப்பட்டுள்ளது.
இவ்வாட்சிக் காலத்தில் தென்னிந்திய ஆக்கிரமிப்புக்களுக்கு இராஜதானிகள் முகம்கொடுக்க நேர்ந்துள்ளதுடன் இக்காலப்பகுதியிலேதான் இலங்கையில் இந்து சமயமும், பௌத்த சமயமும் பரவியது. அரேபியர்கள் வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்து சென்றமையே இஸ்லாம் மார்க்கம் இலங்கையில் பரவக் காரணமாக இருந்ததென்று பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், அரேபியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஐரோப்பிய போர்த்துக்கீசர்களும், ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் இந்நாட்டை ஆட்சி செய்வதற்கு முன்னரும் ஆட்சி செய்த காலத்திலும் இந்நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் அக்கால ஆட்சியாளர்களுக்கு அளப்பரியதாகவே இருந்துள்ளன. இராஜதந்திர துறையிலும், பாதுகாப்புத்துறையிலும், மருத்துவத்துறையிலும், வணிகத்துறையிலுமென பல்வேறு துறைகளில் அக்காலத்து ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம்கள் பங்களிப்பு செய்திருக்கிறர்கள்.
முஸ்லிம்கள் கடற்பயணத்திலும், பல மொழிகள் பேசுவதிலும், உள்நாட்டு, வெளிநாட்டு தொடர்பாடல்களிலுமெனப் பல்வேறு விடயங்களில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றிருந்ததனால் அத்தகையவர்கள் அக்காலத்து மன்னர்களின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கி.பி. 1258 இல் யாப்பகுவயை ஆண்ட முதலாம் புவனேகபாகு என்ற மன்னன் அக்காலத்திலிருந்த எகிப்தின் மம்லூக்கிய மன்னனுடனான வர்த்தக தொடர்பின் நிமித்தம் அபூ உஸ்மான் என்பவரை தூதுவராக அனுப்பி வைத்ததாகவும் கி.பி. 1762ஆம் ஆண்டளவில் கண்டி இராஜதானியாக இருந்த கீர்த்திஸ்ரீ இராஜசிங்கனை சந்திப்பதற்காக கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் தூதுவராக ஜோன் பைபஸ் திருகோணமலைக்கு வந்திருந்தவேளை, அவரை வரவேற்று கண்டிக்கு அழைத்து வருவதற்காக மவுலா முகாந்திரம் என்பவரது புதல்வாரன உதுமான் லெப்பை என்பவரை மன்னர் அனுப்பி வைத்திருந்ததாகவும் அதேபோல், போர்த்துக்கேயருக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை விரட்டியடித்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக கள்ளிக்கோட்டை சமோரினின் உதவியைப் பெற மாயாதுன்னை மன்னன் முஸ்லிம்களையே தூதுவராக அனுப்பி வைத்திருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.
தூதுவர்களாக மாத்திரமன்றி, மன்னர்களின் பாதுகாப்பு, வைத்தியம், வாணிபமெனப் பல்வேறு விடயங்களில் அக்காலத்து பௌத்த சிங்கள மன்னர்களின் விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்குரியவர்களாகவும, ஆளுமைமிக்கவர்களாகவும் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுப்பதிவுகள் பலவுள்ளன. இவ்வரலாற்றுப் பதிவுகளை இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இந்நாட்டுடன் விசுவாசமற்றவர்கள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள், இந்நாட்டின் நிலங்களை கபளீகரம் செய்து வாழ்கின்றவர்கள் என யதார்த்தத்திற்கு முரணான பதிவுகளை பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பொய்யாகப் பரப்புகின்ற கடும்போக்காளர்களுக்கு உரிய முறையில் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இந்நாட்டின் தொன்மைவாய்ந்த வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் கடப்பாடாகும்.
சுதந்திர வெற்றியும், முஸ்லிம்களும்
இக்கடப்பாட்டைக் கொண்ட முஸ்லிம்கள் அக்காலத்து மன்னர்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் மாத்திரமல்லாது இந்நாட்டை ஆட்சி செய்த அந்நிய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து இந்நாட்டை மீட்பதற்கும் தங்களாலான பங்களிப்புக்களை செய்திருக்கிறார்கள். ஏறக்குறைய 443 வருடங்கள் இந்நாட்டை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க அனைத்து இன மக்களும், மக்கள் தலைவர்களும் ஒன்றிணைந்து போராடியிருக்கிறார்கள்.
கி.பி. 1505ஆம் ஆண்டு போர்த்துக்கீசர் இலங்கையில் கால்பதிக்கும் வரை இந்நாடு பிராந்திய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஒவ்வொரு ராஜ்யத்தையும் ஒவ்வொரு மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். போர்த்துக்கீசர்களின் காலூன்றலைத் தொடர்ந்து ராஜ்ஜிய மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சிகாணத் தொடங்கியதுடன் ஏகாதிபத்தியவாதிகளின் காலனித்துவ ஆட்சி மேலோங்கியது.
பலவீனமான மக்கள் தொகுதி அல்லது பிராந்தியக் குழுக்களின் மேலாதிக்கம் சார்ந்த அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டினைப் பிரயோகிக்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய கொள்கைகளும் பிரயோகங்களும் காலனித்துவம் எனப்படுகிறது. காலனித்துவ ஆட்சியானது 443 வருடங்கள் இலங்கையில் நீடித்தது. 1505ஆம் ஆண்டிலிருந்து 1658ஆம் ஆண்டு வரை போர்த்துக்கீசரின் ஆட்சியும், 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தரின் ஆட்சியும் 1796 முதல் 1948ஆம் ஆண்டு வரை பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியும் இந்த மண்ணில் நிலவியது.
அந்நியர்களின் காலனித்துவ ஆட்சிக் காலங்களின்போது, இந்நாடு பல சாதக பாதக விளைவுகளை அனுபவித்தது. சாதகமான விளைவுகளாக பொருளாதார விருத்தி, அரசியல் கட்டமைப்பு மாற்றம், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்மை, அவை தேவைக்கேற்றவாறு விருத்தி செய்யப்பட்டமை, தொழிற்சாலைகள் நிறுவப்பட்டமை, கல்வி முன்னேற்றம் கண்டமை. பாடசாலைகள் உருவாக்கப்பட்டமை, சமூக முன்னேற்றமும் வாழ்க்கை முறைமையும் மாற்றம் கண்டமை போன்றவற்றைக் குறிப்பிட முடிவதுடன், பாதக விளைவுகளாக கலாசாரத்தில் மாற்றமும் அதன் பின்னரான சீரழிவுகளும், மத மாற்றம் மேற்கொள்ளப்பட்டமை, பொருளாதார சுரண்டல், அடிமைப்படுத்தல் முதலான காலனித்துவத்தின் பாதக விளைவுகளையும் குறிப்பிடலாம்.
இந்நாட்டின் காற்றைச் சுதந்திரமாக சுவாசிக்க வேண்டும். தங்களைத் தாங்களே ஆள வேண்டும். மாற்றான் ஆட்சியில் நாம் மண்டியிட்டுக் கிடக்க முடியாது என்ற ஒன்றுபட்ட உணர்வின் வழியே சமூக ஒருமைப்பாடுகளோடு ஒன்றிணைந்து நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுக்க உயிர், உடல், பொருள், கால நேரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து அந்நியரின் அடக்குமுறை, சுரண்டல் ஆட்சியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் தேசபிதாக்கள் காப்பாற்றினார்கள்.
அவ்வாறு போராடி 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி இந்நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்த சுதந்திர இலங்கைத் தேசத்தின் தேசபிதாக்களாக டி.எஸ். சேனநாயக்க, எப்.ஆர். சேனநாயக்க, எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க, சேர் பாரன் ஜயதிலக்க, ஈ.டப்ளியூ பெரேரா, டி.ஆர் விஜேயவர்தன, ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் வி. டயஸ், அநகாரிக தர்மபால, சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம், சேர். முத்துக்குமாரசுவாமி, சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி, டாக்டர் ஆனந்த குமாரசுவாமி, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகிய பெரும்பான்மை மற்றும் சகோதர தமிழ் தலைவர்களுடனும் இணைந்து முஸ்லிம்களின் தலைவர்களாக விளங்கிய டாக்டர் ரி.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட், அறிஞர் சித்தி சின்னலெப்பை, வாப்பிச்சி மரைக்கார், சேர் மாக்கான் மாக்கார் போன்றவர்கள் ஒன்றிணைந்து பெற்றெடுத்த தேச விடுதலையை நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
இச்சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானது. இப்பொதுவான சுதந்திரத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற உரிமைகளை இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் அனுபவிக்க வேண்டும். அதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது. இருப்பினும், இந்நாட்டில் 9.7 வீதம் வாழ்கின்ற முஸ்லிம்கள், தங்களது தேசபிதாக்களின் பங்களிப்புடன் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தின் உரிமைகளை, இந்நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பின் பிரகாரம் அனுபவிப்பதற்கு, ஏறக்குறைய 70 வீதம் வாழும் சிங்கள பௌத்த மக்களின் சிறு தொகையினரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் பெற்றுள்ள கடும்போக்கு மதவாதிகளும், அரசியல்வாதிகளும் காலத்திற்குக் காலம் தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இந்நாட்டை ஆண்ட இராஜதானிகளுக்கு அக்காலத்து முஸ்லிம்கள் எத்தகைய உதவிகளைச் செய்திருக்கிறார்கள், எந்தளவு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள், எவ்வகையான தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள் என்ற வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு அல்லது அவற்றை திரிபுபடுத்திவிட்டு. இந்நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், பயங்கரவாத செயற்பாடுகளுக்குத் துணைபோகிறார்கள் என்று சுட்டிக்காட்டி வருவதானது முஸ்லிம்களை அச்சத்துக்கும், நெருக்கடிக்குள்ளும் தள்ளிக்கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
நிகழ்வுகளும் உணர்வுகளும்
நாட்டின் இறைமைக்கும், கௌரவத்துக்கும் களங்கமேற்பட்ட போதெல்லாம் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக போராடியவர்களோடு இணைந்து செயற்பட்ட முஸ்லிம்களின் பரம்பரையினரை அவர்களில் சிலரினால் புரியப்பட்ட அல்லது தவறுதலாகப் புரியப்படுகின்ற சம்பவங்கள் தொடர்பில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளும், கடும்போக்கு மதவாதிகளும், சில ஊடகங்களும் விமர்சனப் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றமையை காணமுடிகிறது.
கடும்போக்காளர்கள் மேற்கொள்கின்ற பரப்புரை போன்று இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இந்நாட்டின் அரசியலமைப்புக்கு முரணாகவும், சட்டதிட்டங்களுக்கு எதிராகவும் செயற்படவில்லை. இந்நாட்டில் வாழ்கின்ற ஒரு தனித்துவ இன மொன்றுக்கு எத்தகைய உரிமைகள் இந்நாட்டின் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய உரிமைகளை மீறாத வகையிலேயே அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருசில சம்பவங்களும், ஒருசிலரின் நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கும், சட்டதிட்டங்களுக்கும் முரணாக இருந்தாலும் அவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தவறாகக் கருதமுடியாது.
நாட்டின் சட்டத்தையும், அரசியலமைப்பு விதிகளையும் யார் மீறுகிறார்களோ அவர்களுக்கான தண்டனையை வழங்குவது நாட்டின் சட்டமாகும். அது அரசின் பொறுப்பாகும். மாறாக நாங்கள் பெரும்பான்மை இனத்தினர் என்று எண்ணிக்கொண்டு சட்டத்தை எந்த இயக்கமோ அல்லது அமைப்போ கையிலெடுத்து செயற்பட முடியாது. சட்டத்தை மீறிச் செயற்பட யாரையும் திணிக்கவும் இயலாது. அவ்வாறு சட்டத்தை மீறுமாறு திணித்து தங்களுக்கு ஏற்றவாறு சட்டம் மாற்றப்படுமாயின் 1948ஆம் ஆண்டு பெறப்பட்ட சுதந்திரம் முழுமை பெறவில்லை என்பதை மேலும் உறுதிப்படுத்துவதாகவே அமையும்.
இச்சுதந்திர தேசத்தில் வாழும் ஒரு தனித்துவ இனத்துக்கான உரிமையை இந்நாட்டின் அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற நிலையில், அவற்றை ஏற்று வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிரான பொய்ப்பிரசாரங்களும், மத நிந்தனைகளும், வெறுப்புப் பேச்சுக்களும் அவ்வப்போது முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால், இவ்வாறு புரிந்தவர்கள் அல்லது புரிகின்றவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு முறையாக சட்டம் அவர்கள் மீது பாயவில்லை என்ற மனத்தாக்கம் முஸ்லிம்கள் மத்தியில் காணப்படுகின்ற நிலையில், ஜனநாயக தேசமொன்றின் பெரும் தூண்களில் ஒன்றான நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்காக சிறைவாசம் அனுபவித்து வரும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை சுதந்திர தினத்தன்று பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென கடும்போக்கு அமைப்பாளர்களும் இன்னும் பலரும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில், சுதந்திர தேசத்தில் சுதந்திரமாக வாழும் உரிமை கொண்ட மக்களும் மதமும் அவர்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களும் கேள்விக்குட்படுத்தப்படும் நிலை, மற்றும் மீறப்படும் செயற்பாடுகள் தொடர்ந்தும் வரலாற்றில் பதியப்படுவதற்கும் அவை எதிர்கால சந்தியினருக்கும் விட்டுச் செல்லப்படுவதற்கும், இடமளிக்காத வகையில் நாட்டின் சட்டங்கள் முறையாகக் கையாளப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சிறுபான்மை மக்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பை புதிய அரசியலமைப்பு மாற்றமானது ஏற்படுத்த வேண்டும். ஆனால், புதிய அரசியலைப்பு வருமா? வராத என்ற கேள்விக்கு மத்தியில், புதிய அரசியலமைப்பின் மூலம் உருவாக்கப்படும் சட்டங்களும் சட்ட விதிமுறைகளும் சமத்துவமாக அமுல்படுத்தப்பட வேண்டும். அதன்மூலம் இத்தேசம் இற்றைக்கு 71 வருடங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும். அவ்வாறு அமையப் பெறும்போதுதான் இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு தேசிய ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட, ஒத்துழைத்த முஸ்லிம் தேச தியாகிகளினது தியாகங்கள் மாத்திரமல்லாது சிங்கள, தமிழ் தேசபிதாக்களின் அர்ப்பணிப்புக்களும் தியாகங்களும் பெறுமதிமிக்கதாக அமையும்.
இலங்கையின் சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்களினதும் ஏனைய இனத்தினர்களினதும் தியாகங்கள் களங்கப்படுத்தப்படாமல் இருக்க வேண்டுமாயின், இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சமத்துவத்துடனும் தங்களுக்கான உரிமையுடனும் வாழ்வதற்கான சூழ்நிலை இந்நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் அப்போதுதான் இந்நாட்டில் நிரந்தர சமதானத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், இன நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும்.