சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் ஒன்று நிறுவுவது தொடர்பில் அனைத்து இன மக்களுடனும் கலந்துரையாடி விரைவில் தீர்க்கமான முடிவொன்று எட்டப்படும். இது தொடர்பில் பல கருத்துக்கள், ஆலோசனைகள் முன்வைக்கப்படலாம். அனைத்து கருத்துக்களும் கவனத்தில் கொள்ளப்படும் என மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
சாய்ந்தமருதுவுக்கு தனியான உள்ளூராட்சி மன்றம் பெற்றுக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று மாலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அமைச்சர் வஜிர அபேவர்தனவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் , மாகாண சபைகள் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்றூப், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நசீர், இஸ்மாயில் உள்ளிட்டடோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலின்போது அமைச்சர் வஜிர அபேவர்தன தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், புதிதாக உள்ளூராட்சி மன்றமொன்று நிறுவும்போது உள்ளூராட்சிமன்ற சட்டத்தினையும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அனைவரும். தெளிவுபடுத்தப்படுவார்கள். இதற்கு சில மாதங்கள் தேவைப்படும். சாய்ந்தமருது, கல்முனை பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பில் கட்சித் தலைவர்களுடனும் கலந்துரையாடி இருக்கிறேன். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பர்கர் என்று அனைத்து மக்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.
இங்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் கருத்து தெரிவிக்கையில் சாய்ந்தமருது கல்முனை பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதாகத் தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் வஜிர அபேவர்தனவுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இப்பிரதேசத்தில் மக்கள் எதிர்காலத்தில் பிரச்சினைகள் இன்றி ஒற்றுமையாக வாழும் வகையில் இப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது.இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக அமைச்சர் வஜிர அபேவர்த்தன தலைமையில், இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண பிரதம செயலாளர், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கலாக விசேட உயர்மட்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டது.
சாய்ந்தமருது மக்கள் நீண்ட காலமாக தங்களுக்கென்று தனியான உள்ளூராட்சி மன்றமொன்றினைக் கோரி வருவது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் சாய்ந்தமருதுவுக்கு சென்ற ரணில்விக்கிரமசிங்க தனியான உள்ளூராட்சி சபையை உருவாக்கித் தருவதாக உறுதியளித்திருந்தார்.
-Vidivelli