கிண்ணியா, மூதூர் பிரதேசங்களில் கடந்த மாதம் மணல் அகழ்வு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளின் போது இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து அப்பிரதேசங்களுக்கு ஆளுநர் விஜயம் செய்து நிலமைகளை கேட்டறிந்ததன் பின்னர் அப்பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க இது தொடர்பாக கலந்துரையாட விஷேட மாநாடு கிழக்கு ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம்.ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது.
நீண்ட நேரம் இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டிய பின்னர் ஆளுநர் தனது உரையில் " மிக வறுமையான நிலையிலே இம் மக்கள் வாழ்கிறார்கள். மண் அகழும் தொழிலை நம்பி சுமார் இருபதாயிரம் குடும்பங்கள் வாழ்கின்றன. கடந்த ஒரு மாத காலமாக இத் தொழிலை தடை செய்ததை அடுத்து மிக மோசமாக பொருளாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதில் உயிரிழந்த குடும்பங்களை சென்று பார்வையிட்டேன்.
அவ் இரண்டு இளைஞர்களும் வறுமையில் , குடிசைகளிலே வாழ்ந்து கொண்டிரிந்தார்கள். இந்த நிலைமைகள் சீராக்கப்பட வேண்டும். இருபதுயாயிரம் குடும்பங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும் . நமது ஒவ்வொரு நடவடிக்கைகளும் மக்களை பாதிக்காத வகையில் அமைய வேண்டும். கொழும்பில் உள்ள செல்வந்தர்கள் இங்கே வந்து மண் அகழ்வில் ஈடுபடுகின்ற பொழுது நமது மாவட்ட மக்கள் வறுமையோடு உள்ளார்கள். வறுமையை ஒழிக்கும் வகையில் செயற்பாடு அமையவேண்டும் என கடுந்தொனியில் இராணுவ,கடற்படை பொலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
மேலும் மண் பூச்சரிதல் திணைக்களத்தினுடைய தலைவர், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஷ்பகுமார தலைமையில் இராணுவ, பொலிஸ் மற்றும் கடற்படை ஆகியவற்றைக் கொண்ட ஒரு உயர் மட்டக் குழு ஆளுநரால் நியமிக்கப்பட்டு உள்ளது.
இக் குழு 3 நாட்களுக்குள் தங்களுடைய சிபாரிசுகளை எடுத்து எதிர் வரும் 28ம் திகதி இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்.
மக்கள் பாதிக்கப்படாத வகையில் மக்கள் மீண்டும் அந்த தொழிலைச் செய்வதற்குத் தேவையானவற்றை ஒழுங்கு செய்து அவர்களுக்கு சட்ட ஒழுங்குப்படி அனுமதி வழங்கி உரிய முறையிலே அவற்றைப் பெற்றுக் கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மண் அகழ்வு உத்தரவாதபத்திரம் வழங்கும் போது வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மண் ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குவதைத் தவிர்த்து திருகோணமலை மாவட்ட கிண்ணியா மற்றும் மூதூர் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் உத்தரவு பிறப்பித்தார்.
இம்மாநாட்டில் கௌரவ இராஜாங்க அமைச்சர் அப்துல்லாஹ் மஃரூப் ,பாராளுமன்ற உறுப்பினரான சுசந்த புஞ்சி நிலமே , முன்னாள் முதல் அமைச்சர் நஜீபே மஜீட் ,உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ,நகரசபை தலைவர்கள், கட்சிகளின் பிரதிநிதிகள் , இராணுவ, பொலிஸ், மாவட்ட அரசாங்க அதிபர், கடற்படை,விமானப்படையினுடைய அதிகாரிகள், திணைக்களங்களின் அதிகாரிகள் மற்றும் மண் அகழ்வு வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.