ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலம் பகுதியில் அமைந்துள்ள அல் அக்ஸா பள்ளிவாசலினுள் தொழுகையில் ஈடுபட்டிருந்தோர் மீது இஸ்ரேலியப் படையினர் கடந்த செவ்வாய்க் கிழமை மாலை தாக்குதல் நடத்தினர் இதன்போது பலர் காயமடைந்த அதேவேளை ஏனையோரை இஸ்ரேல் படையினர் கைது செய்தனர் என சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.
சர்ச்சைக்குரியதாகக் காணப்படும் பள்ளிவாசலின் அல்ரஹ்மா நுழைவாயிலுக்கு அருகே இத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் சம்பவத்தோடு தொடர்புடைய இஸ்ரேலியப் படையினரின் எண்ணிக்கையினை தெரிவிக்கவில்லை.
காயமடைந்த நபர் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவருக்கு தமது அணியினர் சிகிச்சையளித்தாக பலஸ்தீன செம்பிறைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இஸ்ரேலியப் பொலிஸார் தற்காலிகமாக அல்ரஹ்மா நுழைவாயிலை மூடியதற்கு மறுநாள் பலஸ்தீனர்கள் அதற்கெதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.