Top News

தமிழ் – முஸ்லிம் வாக்குகளை கோத்தவால் பெறமுடியாது!

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க

Image result for இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க
முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாய ராஜபக் ஷவுக்கு அவருடைய வாழ்நாளில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுடைய வாக்குகளை ஒருபோதும் பெற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த நெடுஞ்சாலை, வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, அவரால் தேர்தலில் 40 வீத வாக்குகளைக் கூடப் பெற்றுக்கொள்ள முடியாது எனவும் குறிப்பிட்டார்.

கோத்தபாய ராஜபக் ஷ ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கத் தயார் எனத் தெரிவித்துள்ளமை குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

கோத்தபாய ராஜபக் ஷ எத்தனை தடவைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டாலும் அவரது வாழ்நாளில் அவருக்கு சிறுபான்மை மக்கள் ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள். தேர்தலில் வெற்றிபெற வேண்டுமாயின் நூற்றுக்கு 51 வீத வாக்குகள் பெற வேண்டும். ஆனால் சிறுபான்மை மக்களுடைய வாக்குகளின்றி அதனை பெறமுடியாது.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அவரால் முன்னெடுக்கப்பட்ட விடயங்களே அதற்கான காரணமாகும். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலை நோக்கும்போது நூற்றுக்கு 63 வீத வாக்குகளை சந்திரிகா குமாரதுங்க பெற்றிருந்தார். அதே போன்று யுத்தத்தின் பின்னர் மஹிந்தராஜபக் ஷ 53 வீத வாக்குகளையே பெற்றிருந்தார். எனினும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற தேர்தல்களில் அதனை விடக் குறைவான வாக்குகளே கிடைக்கப்பெற்றன. எனவே கோத்தபாய ராஜபக் ஷவுக்கு நூற்றுக்கு 40 வீத வாக்குகளைக் கூட பெற்றுக்கொள்ள முடியாது.

காரணம், அவருக்கு எதிராக ஊழல் மோசடி தொடர்பில் பல்வேறு வழக்குகள் காணப்படுகின்றன. வெள்ளை வேன் கடத்தலின் தந்தை என அவர் வர்ணிக்கப்படுகின்றார். அத்தோடு ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலையுடன் அவருக்கு தொடர்பிருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே அவ்வாறான ஒருவருக்கு வாக்களிப்பதற்கு மக்கள் முட்டாள்கள் அல்ல.

அவருடன் எமக்கு எந்த தனிப்பட்ட பிரச்சினைகளும் இல்லை. ஆனால் வெளிநாட்டு குடியுரிமையைக் கொண்ட அவர்மீது எந்த வகையில் நம்பிக்கை வைப்பது என்பதே எமது கேள்வியாகும். அதனை வைத்துக் கொண்டு அவர் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்லக்கூடும். அத்தோடு அவரை விட சிறந்தவர்கள் அந்த தரப்பில் உள்ளனர்.
Previous Post Next Post