பலஸ்தீனப் பல்கலைக்கழமொன்றில் முதுமானிபட்டத்தைப் பெற்றுள்ள முதலாவது வெளிநாட்டவராக துருக்கியைச் சேர்ந்த இளம் பெண் றுகையா டேமிர் சாதனை படைத்துள்ளார்.
27 வயதான றுகையா டேமிர் தனது பட்டத்தினை காஸா பள்ளத்தாக்கிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் உளவியல் சமூக சுகாதாரப் பிரிவில் பூர்த்தி செய்தார்.
‘எனது ஆய்வுக் கட்டுரை – காஸாவில் ஆண்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தொழில்துறையில் பெண்களின் சுயவிழிப்புணர்வும் தந்திரோபாயங்களை கைக்கொள்ளுதலும்’ என்ற தலைப்பில் அமைந்திருந்தது என துருக்கிய ஊடகமொன்றுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின்போது தெரிவித்தார்.
தனது ஆய்வுக்கான மாதிரிகளாக பலஸ்தீனப் பெண் பொலிஸாரை தான் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் தெரிவித்தார். ஏனைய இடங்களில் அதே தொழிலைச் செய்கின்றவர்களைப் போலல்லாது பலஸ்தீனப் பெண் பொலிஸார் இஸ்ரேலின் தாக்குதல் என்ற மேலதிக ஆபத்தையும் தடையினையும் எதிர்நோக்கியுள்ளனர் எனவும் றுகையா தெரிவித்தார்.
காஸாவிலுள்ள பலஸ்தீனப் பெண் பொலிஸார் தமது பணியை ஈடுபாட்டோடு செய்ய விருப்பம் கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர் எனத் தெரிவித்த அவர் பலஸ்தீன அரசாங்கத்தால் அழைக்கப்படும் போது ஆண்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள களத்தில் பெண்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவதற்காக பணியாற்றுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
பலஸ்தீனம் முழுவதிலும் குறிப்பாக காஸாவில் உள்ள பெண்களுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் செலவீனங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தென்கிழக்கு துருக்கியின் டியாபாக்கிர் மாகாணத்தைச் சேர்ந்த றுகையா 2016 ஆம் ஆண்டு தனது முதுமானிப் பட்டத்தைப் பெறுவதற்காக காஸாவைச் சென்றடைந்தார்.
நான் பலஸ்தீனர் ஒருவரைத் திருமணம் செய்துகொண்டேன், தொடர்ந்து காஸா பள்ளத்தாக்கில் வசிப்பதற்கே விரும்புகின்றேன். காஸாவில் பணியாற்றுமாறு எனக்கு பல்வேறு அழைப்புக்கள் வந்தன. எனினும் காஸாவிலுள்ள மக்களுக்கு உளவளச் சேவையினை வழங்கும் சொந்தத் தொழிலொன்றை ஆரம்பிப்பதே எனது திட்டமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
படிப்படியாக அரபு மொழியை சரளமாகப் பேசக் கற்றுக்கொண்ட இளம் துருக்கிய பெண் நான் காஸாவில் இருப்பதிலேயே மகிழ்ச்சியடைகின்றேன் எனத் தெரிவித்தார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிலிருந்து ஜெரூசலம் விடுவிக்கப்படும் போது அங்குள்ள பல்கலைக்கழகமொன்றில் எனது கலாநிதிப் பட்டத்தைப் பெறுவதற்கு உத்தேசித்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.
1967 ஆம் ஆண்டு தொடக்கம் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜெரூசலம் மத்திய கிழக்கு முரண்பாட்டின் மூலக்கல்லாகக் காணப்படுகின்றது. கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திர பலஸ்தீன தேசம் என்பது பலஸ்தீன மக்களின் கனவாகும்