Top News

ஹாபீஸ் நசிரின் பதவிக்கும், ஹக்கீமுக்கும் எந்த தொடர்புமில்லை!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான ஹாபிஸ் நசீர் அகமட், அண்மையில் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டாரல்லவா? இந்த நியமனத்துக்கும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் தெரியவருகிறது.

ஹாபிஸ் நசீருக்கு பதவியொன்றினை வழங்குவதற்கு, ஜனாதிபதி தரப்பு விரும்பியிருக்கிறது. இது தொடர்பில் தனது நெருக்கமானவர்களுடன் பேசிய ஹாபிஸ் நசீர்; அரசியலை கவனத்திற் கொண்டு, அதனைப் பெறுவதில்லையென முடிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரமவின் முயற்சியின் பலனாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கீழுள்ள தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் தலைவராக ஹாபிஸ் நசீர் நியமிக்கப்பட்டார். அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் ஹாபிஸ் நசீரும் நெருக்கமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கூட, ஹாபிஸ் நசீர் நெருக்கமானவர் என்பதும் அறிந்ததே.

ஏறாவூரை சொந்த இடமாகக் கொண்ட ஹாபிஸ் நசீரை, அரசியலில் பின்தள்ளி விட்டு, அதே ஊரைச் சேர்ந்த ராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானாவை, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் – அரசியலில் முன்கொண்டு செல்கிறார் என்கிற மனக்கசப்பு ஹாபிஸ் நசீருக்கு உள்ளது.

இந்த நிலையில், பொருத்தமானதொரு அரசியல் தருணத்தில் ரஊப் ஹக்கீமுக்கு ‘மருந்து கட்டுவதற்கு’ ஹாபிஸ் நசீர் சந்தர்ப்பம் பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகவும் பேசப்படுகிறது.
Previous Post Next Post