Top News

புலமைப்பரிசில் பரீட்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜனாதிபதி பச்சைக்கொடி

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எதிர்வரும் இரண்டு வாரங்களில் தேசிய நிதியமொன்றை தாபிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

சிறுவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக விசேட சமூக ஆய்வறிக்கைகளை பெற்று, சிறுவர்களுக்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் பலமாகவும் துரிதமாகவும் முன்னெடுப்பதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

(20) முற்பகல் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். 

இன்று ஏற்பட்டிருக்கும் பல்வேறு சமூக சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் பாதுகாப்பு குறித்து விரிவான சமூக கருத்தாய்வொன்று அவசியமாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்றைய சிறுவர் தலைமுறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்து அனைத்து துறைகளிலும் விரிவான கலந்துரையாடலுக்கு உட்படுத்துவது இதன் நோக்கமாகும் என்றும் குறிப்பிட்டார். 

சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுக்கின்ற போது பெற்றோர்களுக்கு அது பற்றி அறிவூட்ட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார். ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இதனை இரத்துச்செய்வது பற்றிய தீர்மானத்திற்கு தானும் உடன்படுவதாக தெரிவித்தார். 

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை சிறுவர்களின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான முக்கியமானதொரு தடை தாண்டல் அல்ல என்றும் இதன்போது பிள்ளைகளுக்கு ஏற்படும் உளவியல் அழுத்தங்கள் பற்றி அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 

ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் சமவாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் அர்ப்பணிப்புடன் உள்ள அதேநேரம், நாட்டின் சிறுவர் தலைமுறைக்கு அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுவதற்கு தான் பொறுப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். 

தேசத்தின் உயிர்நாடியான சிறுவர் தலைமுறையை பாதுகாப்பதற்காக அவர்களது உடல், உள அபிவிருத்திக்கு சிறந்ததோர் சூழலை கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்தின் முக்கிய திட்டமாக “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 

சமூகத்தில் இன்று பரவியுள்ள பல்வேறு சீரழிவுகளிலிருந்து சிறுவர் தலைமுறையை பாதுகாப்பதை முக்கிய தேவையாக கருதி துஷ்பிரயோகங்களை தவிர்த்தல், பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சுகாதார போசனை நலன்பேணல், ஆளுமை விருத்தி கல்வி, வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துதல் ஆகிய துறைகளில் இந்த நிகழ்ச்சித்திட்டம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன்கீழ் சுகாதாரம், கல்வி, உள வள ஆலோசனை, சட்ட ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறுவர்களுக்காக நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. 

சிறுவர்களின் ஆளுமை விருத்தி, சுகாதாரம் தொடர்பில் விசேட உரைகள் சிரேஷ்ட உள வள ஆலோசகர் வைத்தியர் சமிந்த வீரசிறிவர்த்தன மற்றும் விசேட வைத்திய நிபுணர் நவாஸ் ஜிப்ரி ஆகியோரினால் நிகழ்த்தப்பட்டன. மேல் மாகாணத்தில் அங்கவீனமுற்ற பிள்ளைகள் உள்ள பாடசாலைகளுக்கு நுழைவாயில்கள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை வழங்குவதற்கு நிதி ஏற்பாடுகளை வழங்குதல், சிறுவர் இல்லங்களை நவீன மயப்படுத்துவதற்காக நிதி ஏற்பாடுகளை வழங்குதல், 05 சிறுவர் பராமரிப்பு அபிவிருத்தி நிலையங்களுக்கு உபகரணங்களை வழங்குதல், பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குடிநீர் வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அந்த தேவைகளை நிறைவேற்றுவதற்காக நிதி ஏற்பாடுகளை வழங்குதல், “நமது பிரச்சினைகளை நாமே தீர்ப்போம்” பாடசாலை மத்தியஸ்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 14 மில்லியன் ரூபா நிதி ஏற்பாடுகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன. 

மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சர் சந்திராணி பண்டார, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, மேல் மாகாண முதலமைச்சர் இசுற தேவப்பிரிய, மாகாண அமைச்சர்களான காமினி திலகசிறி, ரஞ்சித் சோமவங்ச, லலித் வணிகரத்ன ஆகியோரும் கொழும்பு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post