கிழக்கு மாகாண ஆசிரியர்கள் அனைவரும் கிழக்கு மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுக்கொள்ள விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அறிவித்துள்ளமை மிகவும் தவறானதெனவும் இதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஆளுநரின் இந்தச் செயற்பாடு, கல்வித்துறைக்குப் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்துமெனவும் ஏனைய மாகாணங்களில் இருந்து வருகை தந்து, வெவ்வேறு மாவட்டங்களில் ஆசிரியர்களாகத் தொழில்புரிகின்றவர்கள் அனைவரும் தாங்களும் தங்களுடைய மாகாணத்துக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்களேயானால் அதனை எவ்வாறு நடைமுறைபடுத்துவது எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.
இந்த விடயத்தில் பல நிர்வாக ரீதியிலான சிக்கல்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படுமெனவும் எனவே, இவ்விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர், திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.