Top News

இலங்கையில் பாரிய போதைப்பொருள் பிடிபட்டது - முஸ்லிம் இருவர் கைது

கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில், 2,945 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவு மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை ஆகியன முன்னெடுத்த சுற்றிவளைப்பில், 294 கிலோ 490 கிராம் ஹெரொயின் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருள் தொகை இதுவாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள வர்த்தக கட்டடத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் நேற்று மாலை விற்பனைக்காக கொண்டுவரப்பட்டபோதே இவை கைப்பற்றப்பட்டதாக, அவர் கூறியுள்ளார்.

இரு வேன்களில் தலா 5 பாரிய பொதிகளில் வைக்கப்பட்டிருந்த 272 சிறு பொதிகளே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பாணந்துறை பகுதியை சேர்ந்த 43 வயதான மொஹமட் பஷீர் மொஹமட் அச்மிர் மற்றும் 32 வயதான மொஹமட் ரிலா அஹமட் ருஸ்னி ஆகியோரே இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவில் தடுத்துவைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை 7 நாட்களுக்கு தடுத்துவைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கோரப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்…

இன்று (24) நண்பகல் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள், இலங்கையில் இதுவரையில் கைப்பற்றப்பட்ட அதிகளவிலான போதைப்பொருட்களை கைப்பற்றிய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் பொலிஸ் அதிரடிப்படையின் அனைத்து அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.

அவர்களின் சேவையை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள், நாட்டின் எதிர்கால சந்ததியினருக்காக முன்னெடுக்கப்படும் இந்த உன்னத பணிக்கு தனது ஆசீர்வாதமும், ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு எனத் தெரிவித்தார்.


கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் தொகையை ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.

பொலிஸ் அதிரடிப்படையின் கட்டளை தளபதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் எம்.ஆர்.லதீப், பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி டீ.ஏ.சி.தனபால ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தை பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், கடந்த சுற்றி வளைப்புகள் தொடர்பிலான தகவல்களையும் கேட்டறிந்தார்.
Previous Post Next Post