மண் அகழ்வில் ஈடுபடும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தடை விதித்து அனுமதிப்பத்திரம் வழங்குவதையும் தடை செய்ய வேண்டும் எனவும் உள்ளூர் மண் அகழ்வாளர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்க வேண்டும் எனவும் பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
அண்மையில் மண் அகழ்வுப் பணியில் கூலித் தொழிலாளர்களாக செயற்பட்டு வந்த கிண்ணியா சாவாறு பகுதியில் இரு அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் மண் கொள்ளைக்காரர்களும் அல்ல மண் முகவர்களும் அல்ல.
வெளி மாவட்டங்களை சேர்ந்தோர்களே அதிகமான பல கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான மண்களை ஏற்றிச் செல்கின்றனர். இவ்வாறாக பல முறை நடந்தேறி வருகிறது.
இதனை உரியவர்கள் உடன் நிறுத்த துரிதமாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தடை உத்தரவு பிறப்பிக்கவும் வேண்டும். கம்பரெலிய, கிராம சக்தி திட்டங்களுக்காக அதிகமான கிரவல் மண் தேவைப்படுகின்றன.
உள்ளூர் மண் அகழ்வாளர்களும், தொழிலாளிகளும் மாவட்டத்தில் நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்ற இத்திட்டத்திற்கு மண் வழங்க வேண்டும்.
கருமலையூற்று பள்ளிவாசல் காணிக்குள் மீண்டும் அத்துமீறி படையினர் வேலி அமைக்கப்பட்டிருக்கிறது. 127 பேர்ச் காணியினை இதில் ஜனாதிபதி விடுவிப்பதாக கூறினார்.
இது போன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள தேவையற்ற படை வசமுள்ள முகாம்களை அகற்றி மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட அவர்களுக்கான வழிகளை விட வேண்டும் உப்பாறு கோகண்ண, புல்மோட்டை போன்ற பிரதான முகாம்களை அகற்றச் சொல்லி நாங்கள் கேட்கவில்லை அது தவிர்ந்த தேவையற்றதை அகற்றினால் அப்பாவி மக்கள் சுதந்திரமாக தங்களது தொழில்களை செய்யவும், அவர்களுக்கான குடியிருப்புக்களையும் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.