படகுகள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருள் கடத்துவதையும், ஆட்களை சட்ட விரோதமாகக் கடத்திச் செல்வதையும் இல்லாதொழிக்கும் வகையில், மீனவர்களின் மீன்பிடிப் படகுகளுக்கு சமிக்ஞை முறையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக, விவசாய மற்றும் கடற்றொழில் அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலுக்கும் மேலதிகமாக சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, மீன்பிடிப் படகுகளில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கொண்டுவருதல், ஆட்களை வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமாகக் கொண்டு செல்லும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்றவை இடம்பெற்று வருகின்றன.
நாம் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதுடன், கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இதற்கிணங்க, அனைத்து மீன்பிடிப்படகுகளுக்கும் சமிக்ஞை தொகுதிகளைப் பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2500 மீன் பிடிப் படகுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதில் பெரும்பாலானவை தொடர்பில் வழக்குகள் பதியப்பட்டும் உள்ளன. இந்த வகையில், முதற் கட்டமாக 1500 மீன் பிடிப் படகுகளுக்கு விசேட சமிக்ஞை தொகுதிகள் பொருத்தப்படவுள்ளன.
இவ்வாறு சமிக்ஞை தொகுதிகள் பொருத்தப்படும் போது, ஆழ்கடலின் எப்பகுதியில் குறித்த மீன்பிடிப் படகு உள்ளது எனவும், இவற்றின் நடவடிக்கைகள் தொடர்பிலும், அப்படகு எமது நாட்டின் எல்லையைக் கடந்து செல்கின்றதா ? என்றும், இதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.
இதற்கு, மீனவர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமானால், இந்தச் செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொண்டு, நாட்டிற்குள் போதைப் பொருட்களைக் கொண்டுவருவதையும், சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களைக் கொண்டு செல்வதையும் தடுக்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.