இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் விஞ்ஞான ரீதியிலான எந்த உண்மையும் இல்லை. அதுதொடர்பில் பொறுப்புடன் செயற்படுகின்றோம் என இறக்குமதி செய்யப்படும் உணவுகளை பரிசீலனை செய்யும் நிறுவனங்களின் பிரதானிகள் தெரிவித்தனர்.
இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் நாட்டில் எழுந்திருக்கும் சந்தேகங்களை தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு நேற்று அரசாங்க ஊடக திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டனர். இங்கு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் அனில் ஜயசிங்க கருத்து தெரிவிக்கையில், திரவப்பால் பாவிப்பதே உடல் சுகாதாரத்துக்கு மிகவும் ஏற்றது. ஆரம்ப காலப்பகுதியில் மக்கள் திரவப்பாலையே பாவித்து வந்தார்கள். என்றாலும் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. திரவப்பாலின் உற்பத்தி போதுமானதாக இல்லை. அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டே இறக்குமதி செய்யும் பால்மா பயன்படுத்தப்படுகின்றது. என்றாலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது. அதனை நிவர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு சுகாதார அமைச்சுக்கு இருக்கின்றது. அதனால் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் நாங்கள் விஞ்ஞான ரீதியில் ஆய்வுகளை மேற்கொண்டே அதனை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கின்றோம்.
உணவு பாதுகாப்பு பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக் ஷ்மன் கம்லத் தெரிவிக்கையில், பால்மா என்பது உலகம் பூராகவும் விநியோகிக்கப்படும் ஒன்றாகும். அதனால் அதற்கு சர்வதேச தரச்சான்று ஒன்று இருக்கின்றது. அதன் பிரகாரம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவுக்கு இலங்கையில் எஸ்.எல்.எஸ்.ஐ. 731 என்ற இலக்க தரநிர்ணயத்துக்கு உள்வாங்கப்பட்டிருக்கின்றது. அதனடிப்படையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா இந்த தர நிர்ணயத்துக்கு உள்ளடக்கப்படுகின்றதா என்பதை பரிசீலித்த பின்னரே நாங்கள் அதனை துறைமுகத்தில் இருந்து விடுவிக்கின்றோம்.
அத்துடன் எந்தவொரு பால்மாவையும் எமது நாட்டுக்கு இறக்குமதி செய்யும்போது அதன் உற்பத்திநாடு அதுதொடர்பாக எங்களுக்கு சுகாதார சான்றிதழ் ஒன்றை வழங்குவார்கள். அதில் குறித்த பால்மாவில் பால், கொழுப்பு தவிர்ந்த வேறு எந்த வகையான கொழுப்போ எண்ணெயோ அடங்கவில்லை என்றும் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அத்துடன் நாங்களும் அந்த பால்மாவின் மாதிரிகளை பெற்றுக்கொண்டு அதனை உறுதிப்படுத்த எமது இரசாயன ஆய்வுகளுக்கு அனுப்புகின்றோம்.
அத்துடன் நியூசிலாந்து பால்மா வேறு நாடுகளுக்கும் விநியோகிக்கப்படுகின்றன. ஆனால் அந்த நாடுகளில் இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக எங்களுக்கு இதுவரை எந்த தகவலும் கிடைத்ததில்லை. அதனால் இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் விஞ்ஞான ரீதியிலான எந்த உண்மையும் இல்லை.
இலங்கை இரசாயன பகுப்பாய்வுப் பிரிவு பிரதிப்பணிப்பாளர் குறிப்பிடுகையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் இருக்கும் பால்கொழுப்பு தொடர்பாக ஆராய முறைமையொன்று இருக்கின்றது. தரநிர்ணய நிறுவனத்தின் அறிக்கையின் பிரகாரம் எஸ்.எல்.எஸ்.ஐ. 731 இல் அடங்கவேண்டிய விடயங்கள் தொடர்பில் நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம். அவ்வாறு ஆராய்ந்து பார்க்கும்போது பால் கொழுப்பில் வேறு கொழுப்புகள் அடங்கி இருக்கின்றதா என்பது தொடர்பாக அவதானிப்போம். ஆனால் எமது ஆய்வில் இதுவரை மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் பால்கொழும்பு அல்லாமல் வேறு கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்படவில்லை.
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் தயானி யாப்பா தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் அனைத்துவகையான உணவுப்பொருட்களின் மாதிரியை பெற்றுக்கொண்டு எமது தரநிர்ணயத்துக்கு உட்டபட்டதா என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம். அந்தவகையில் 2007ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் பாரிய போலிப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதனைத் தொடர்ந்து நாங்கள் எமது தரநிர்ணயத்தை மேலும் புதுப்பித்துக்கொண்டு செயற்படத் தீர்மானித்தோம்.
என்றாலும் தற்போது இறக்குமதி செய்யப்படும் பால்மா தொடர்பில் வதந்தியே பிரசாரம் செய்யப்படுகின்றது என்பதை உறுதியாகத் தெரிவிக்க முடியும். ஏனெனில் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் தரத்துக்கு உட்பட்டதா என்பதை நாங்கள் பரிசீலித்த பின்னரே அதற்கு அனுமதி வழங்குகின்றோம் என்றார்.