புதிதாக அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்பு இதுவரைகாலம் புனர்வாழ்வு அதிகார சபைக்கு தலைவரும், பணிப்பாளர் சபையும் நியமிக்கப்படாததால் இன வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு வழங்கப்பட வேண்டிய நஷ்டஈடுகள் வழங்கப்படாது தேங்கிக் கிடப்பதாக புனர்வாழ்வு அதிகார சபையின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
அம்பாறை மற்றும் கண்டி, திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கும், பள்ளிவாசல்களுக்கும் வழங்கப்பட வேண்டிய நஷ்ட ஈடுகளுக்கான அமைச்சரவைப் பத்திரம் முன்னாள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனினால் ஏற்கனவே கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், தற்போது குறிப்பிட்ட அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட நஷ்ட ஈடுகளுக்குரிய 173 சொத்துகளுக்கு சுமார் 150 மில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியுள்ளதாகவும் புனர்வாழ்வு அதிகார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு அம்பாறையில் இடம்பெற்ற வன்செயல்களினால் பள்ளிவாசல் உட்பட 13 சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியுள்ளது. புனர்வாழ்வு அதிகார சபைக்கு தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் நியமிக்கப்படாததால் நஷ்டஈடு வழங்கப்படுவதில் தொடர்ந்தும் காலதாமதம் ஏற்படுகிறது.
புனர்வாழ்வு அதிகார சபைக்கான தலைவர் நியமனம் மற்றும் பணிப்பாளர்கள் நியமனம் தொடர்பில் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்ட குழுவினால் இதுவரை அதற்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமது நஷ்டஈடுகளை தாமதமின்றிப் பெற்றுக்கொள்வதற்கு முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கண்டி, திகன மற்றும் அம்பாறை வன் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமதமில்லாமல் நஷ்ட ஈடுகள் வழங்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தார். தற்போது புனர்வாழ்வு அதிகாரசபை பிரதமரின் கீழேயே செயற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விடிவெள்ளி