மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில் நேற்று மேலும் ஐந்து சந்தேக நபர்கள் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையிலுள்ள பேப்பர்ச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் அந்நிறுவனத்தின் பணிப்பாளர் சபை தலைவருமான ஜெப்ரி ஜோஸப் அலோசியஸ், பணிப்பாளர் சபை உறுப்பினர்களான புஷ்பமித்ர குணவர்தன, சித்ர ரஞ்சன் ஹுலுகொல்ல, முத்துராஜா சுரேந்ரன் ஆகியோரும் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான பத்தினிகே சமரசிரியுமே இவ்வாறு நேற்று சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டனர். மற்றொரு சந்தேக நபரான ஹஜான் கால்லகே புஞ்சிஹேவா என்பவரை சி.ஐ.டி. நேற்று சந்தேக நபராக பெயரிட்டு கைது செய்யச் சென்றபோதும், அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் அவரை நேற்று கைதுசெய்ய முடியாமல் போயுள்ளது.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் சதி செய்தமை, உதவி ஒத்தாசைகளை புரிந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த சந்தேக நபர்கள் பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் 56 ஆம் அத்தியாயத்துக்கமைய கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐவரும் நேற்று மாலை கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். இதன்போது அங்கு சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் பிணை கோரினர். சி.ஐ.டி.யினரும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா தலமையிலான குழுவினரும் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க எந்த ஆட்சேபனையோ, மறுப்பையோ வெளியிடவில்லை. வழமையாக சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு தமது விசாரணை அறிக்கை ஊடாகக் கோரும் சி.ஐ.டி. நேற்றைய அறிக்கையில் அத்தகைய கோரிக்கைகளை விடுக்காது, சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பிணை வழங்க முடியுமான குற்றச்சாட்டுகள் என குறிப்பிட்டிருந்தனர்.
எனினும், பிணை சட்டத்தின் 14(1)ஆ பிரகாரம், பெருந்தொகை அரச பணம் மோசடி செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்படுமானால் அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துமென்ற காரணத்தை மையப்படுத்தி நீதிவான் லங்கா அஜயரத்ன சந்தேக நபர்களை எதிர்வரும் ஏபரல் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் முதல் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது சந்தேக நபராக பேப்பர்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அர்ஜுன் அலோசியஸும், மூன்றாவது சந்தேக நபராக பேப்பர்சுவல் ட்ரசரீஸ் நிறுவனமும், 4 ஆவது சந்தேக நபராக அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரியான கசுன் பலிசேனவும் பெயரிடப்பட்டு அதில் அர்ஜுன் அலோசியஸும், கசுன் பலிசேனவும் கைது செய்யப்பட்டு நீண்ட நாட்கள் விளக்கமறியலிலிருந்து வந்த நிலையில் அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையிலேயே இந்த விவகாரத்தின் ஐந்தாவது சந்தேக நபராக அர்ஜுன் அலோசியஸின் தந்தை ஜெப்ரி ஜோசப் அலோசியஸ் கைது செய்யப்பட்டார். நேற்று முற்பகல் சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் 8 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
அவரைக் கைதுசெய்ய முன்பதாகவே 6,7,8 ஆம் சந்தேக நபர்களான பேப்பர்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக இருந்த புஷ்பமித்ர குணவர்தன, சித்ர ரஞ்சன் ஹுலுகொல்ல, முத்துராஜா சுரேந்ரன் ஆகியோரின் வீடுகளுக்கு சி.ஐ.டி.யினர் நேற்று அதிகாலை வேளையிலேயே சென்று அவர்களை கைது செய்திருந்தனர். 9 ஆவது சந்தேக நபரான புஞ்சிஹேவா வெளிநாடு சென்றுள்ள நிலையில் 10 ஆவது சந்தேக நபரான மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர் பத்தினிகே சமரசிறியையும் அதிகாலை வேளையில் அவரது வீட்டில் வைத்து சி.ஐ.டி.யினர் கைது செய்திருந்தனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன மற்றும் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவின் மேற்பார்வையில் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் பியசேன அம்பாவல தலைமையில் நிதிசார்ந்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணை அறை பொறுப்பதிகாரி பெண் பொலிஸ் பரிசோதகர் தர்மலதா சஞ்ஜீவனி, பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா, பொலிஸ் பரிசோதகர் திலக் பண்டார, உப பொலிஸ் பரிசோதகர் விமல் ஜயவீர உள்ளிட்ட அதிகாரிகள் கொண்ட குழு இந்நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் நீண்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மாலை 4.00 மணியளவில் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர்கள் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது 5 ஆவது சந்தேக நபரான ஜெப்ரி ஜோசப் அலோசியஸ் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலகவும், 6 ஆவது சந்தேக நபரான புஷ்பமித்ர குணவர்தன சார்பில் சட்டத்தரணி அசேல ரணவகவும், 7 ஆவது சந்தேக நபர் சித்ர ரஞ்சன் ஹுலுகொல்ல சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரியவும், 8ஆவது சந்தேக நபரான முத்துராஜா சுரேந்ரன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சஞ்ஜய கமகேவும் ஆஜராகினர். 10 ஆவது சந்தேக நபரான பத்தினிகே சமரசிரி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி ஆஜரானார்.
இந்நிலையில் மேலதிக விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த சி.ஐ.டி. சார்பில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டவாதி சத்துரி விஜேசூரியவுடன் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர கருத்துக்களை முன்வைத்தார். சந்தேக நபர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இதற்கான சாட்சியங்களின் தொகுப்பையும், மன்றில் சமர்ப்பித்த மேலதிக விசாரணை அறிக்கையில் இணைத்துள்ளதாகக் கூறினார். அத்துடன் பிணைமுறி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள சாட்சியங்களும் சந்தேக நபர்களுக்கு எதிரான சாட்சியங்களாக சி.ஐ.டி.யினரால் அவதானிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இந்நிலையில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தனித்தனியாக வாதங்களை முன்வைத்தனர். அவர்கள், சந்தேக நபர்கள் விசாரணைக்கு அளித்த ஒத்துழைப்பு மற்றும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லாமை உள்ளிட்ட காரணிகளை மேற்கோள் காட்டி பிணை கோரினர். 10 ஆவது சந்தேக நபரின் சட்டத்தரணி, தனது சேவை பெறுநர் அரச ஊழியராக இருந்தவர் என்பதையும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள, ‘சதியை மத்திய வங்கியின் அப்போதைய ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் மட்டுமே அறிந்திருந்தார்’ எனும் விடயத்தையும் சுட்டிக்காட்டி பிணை கோரினார்.
இதேவேளை, 6 ஆவது சந்தேக நபரின் சட்டத்தரணியின் வாதத்தின்போது, சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க சி.ஐ.டி. தனது அறிக்கையில் கோரவில்லை எனவும் சட்டமா அதிபரும் அத்தகைய எந்தக் கோரிக்கையையும் வாய்மொழி மூலம் கூட விடுவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டி, பிணை வழங்கக முடியுமான குற்றச்சாட்டுகள் உள்ளதால் பிணை வழங்குமாறு கோரினார்.
மீளவும் சட்டமா அதிபர் தரப்பினரிடம் மன்றுக்கு ஏதும் கூற வேண்டுமா என கேட்ட நீதிவான், வேறு ஒன்றும் இல்லையென சட்டமா அதிபர் தரப்பில் பதிலளிக்கப்பட்டதையடுத்து தனது உத்தரவை அறிவித்தார்.
பதிவு செய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் சட்டத்தின் 56 ஆம் அத்தியாயத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது நீதிவானுக்கு பிணை அளிக்க முடியுமானதே. சந்தேக நபர்கள் விசாரணைக்களித்த ஒத்துழைப்பு, அவர்கள் நாட்டை விட்டு தப்பிச் செல்லாமை உட்பட்ட விடயங்களை முன்வைத்து பிணை கோரப்பட்டுள்ளது.
எனினும், குற்றத்தின் பாரதூரம் தொடர்பில் நான் ஆராய்கின்றேன். இது பெருந்தொகை அரச பணம் மோசடியுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுகளாகும். இந்நிலையில் சந்தேக நபர்களுக்கு பிணையளித்தால் அது பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். பிணை சட்டத்தின் 14(1)ஆ பிரிவின் கீழ் இவர்களுக்கு பிணை வழங்க மறுக்கின்றேன் என அறிவித்தார். இந்த அறிவிப்பின் போதே அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிப்பிரியா நீதிமன்றில் பிணை தொடர்பில் கருத்துக் கூற முற்பட்டபோதும், “நான் உத்தரவு விடுக்கின்றேன்…ஒன்றும் அவசியம் இல்லை” என நீதிவான் பதிலளித்து அதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.
இதனையடுத்து சந்தேக நபர்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.