ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் நாளையதினம் கண்டியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கும் பேரணியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சரியான தருணத்தில் மாத்திரமே தனது அரசியல் அரங்குப் பிரவேசம் நிகழும் என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட ஆரம்பித்திருப்பதை உணர்த்துவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற ஆர்வம் தனக்கு இருப்பதாக குறிப்பாகத் தெரிவித்த அவருக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான உறவுகள் நாளையதினம் கண்டியில் நடைபெறவிருக்கும் பேரணியில் கலந்துகொள்வதற்கு அவர் மறுப்புத் தெரிவித்த பிறகு சற்று கசப்படைந்திருப்பதாகவும் தெரியவருகிறது.
கண்டி பேரணியில் கோத்தபாய ராஜபக்ச கலந்துகொள்வார் என்று பொதுஜன பெரமுன ஏற்கெனவே அறிவித்திருந்தது.ஆனால் தனக்கு அதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தான் அதில் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
" அரசியலில் இப்போது பிரவேசிப்பது பொருத்தமில்லை.நேரம் வரும்போது நான் அரசியலுக்கு வருவேன்" என்று திங்கட்கிழமை கொழும்பில் இடம்பெற்ற புத்தகவெளியீட்டு வைபவத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் கோத்தபாய கூறினார்.தனது திட்டங்கள் குறித்து மேலதிக தகவல்களை அவர் தரவில்லை.
30 வருடகாலப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு தன்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தியையும் நினைவுபடுத்திய அவர் நாட்டில் மாற்றம் ஒன்றைக் கொண்டுவருவதற்கான ஆற்றல் தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.