இன்றிரவு (29) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நடைபெறுகிறது. பொதுவான விடயங்களுக்கு மேலகதிகமாக வேறு பல விடயங்களும் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாய்ந்தமருதுக்கு உள்ளூராட்சி மன்றம் வழங்குவது தொடர்பில் இழுத்தடிப்புச் செய்யும் அல்லது வழங்கவே கூடாது என்ற திடமான நிலைப்பாட்டில் உள்ளவர் என பலராலும் குற்றஞ்சாட்டப்படும் ஒருவராக இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் காணப்படுகிறார்.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பில் கட்சியின் தலைவரான அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார் எனக் கூறப்படுகிறது.
அதாவது, சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை முதலில் வழங்குவதற்கும் ஏனைய விடயங்களைப் படிப்படியாக முன்னெடுப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கௌரவ இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் அறிவுறுத்தல்களை வழங்கலாம் எனக் கூறப்படுகிறது.
சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்ற விடயத்தில் அமைச்சர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்கள் தடையல்ல என்பதும் கௌரவ இராஜாங்க அமைச்சர ஹரீஸ் அவர்களே முழுமையான தடை என்பதும் இன்று தேசிய ரீதியில் பகிரங்கமாகிவிட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் சிலருடன் இன்று காலை நான் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது அவர்கள் கூட சாய்ந்தமருது விடயத்தில் தங்களது நெகிழ்வுப் போக்கையே வெளிக்காட்டினர்.
மேலும், இந்த விடயத்துக்கு தமிழ்த் தரப்போ, சிங்கள தரப்போ தடையல்ல என்பதும் நிரூபணமாகியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன் உறுப்பினர் கௌரவ விஜித ஹேரத் அவர்கள் நேற்று (28) சபையில் ஆற்றிய உரையில் இது தொடர்பில் தெளிவாக கூறியிருந்தார். இந்த விடயத்தில் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் அவர்கள் தனது கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களையே இன்று சிக்கலில் மாட்டி வைத்துள்ளார் என்ற கருத்துப்படவும் கூறியிருந்தார்.
இதனை விடவும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரே இந்த விடயத்தை அம்பலப்படுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான ஏ.ஸி. யஹியாகான் அவர்கள் கூட சாய்ந்தமருது விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் தடை அல்ல, ஹரீஸே தடை என்ற விடயத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். ‘பாம்பின் கால்களைப் பாம்மே அறியும்’ எனபதனை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
‘புலமிக் கவரைப் புலமை தெரிதல்
புலமிக் கவர்க்கே புலனாம் நலமிக்க
பூம்புனல் ஊர பொதுமக்கட்(கு) ஆகாதே
பாம்பறியும் பாம்பின் கால்’
-பழமொழி நானூறு
எனவே, இதனை விட இந்த விடயத்துக்கு வலு சேர்க்க வேறு எதனையும் துணைக்கு அழைக்கும் தேவை இல்லை.
சரி இன்றிரவு இந்த விடயம் பேசப்பட்டால் எவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படும் என்பது தொடர்பில் பொறுத்திருந்து பார்ப்போம். சில வேளை விழித்திருந்தாவது அறிந்து கொள்வோம்.
- ஏ.எச்.சித்தீக் காரியப்பர்