வெள்ளம் வருமுன் அணைகட்ட வேண்டும் என்பார்கள், கட்டுகின்ற அணைகளும் உடைக்கப்பட்டு வெள்ளம் தலைக்குமேல் வந்த பிறகு அணைகட்டுவதைப் பற்றிச் சிந்திப்பதைவிட வெள்ளத்திலிருந்து தப்புவது எவ்வாறு அல்லது வெள்ளப்பாதிப்புக்களைக் குறைப்பது, தவிர்ப்பதற்கான வழியென்ன என்று சிந்தித்துச் செயற்படுவதுவே முக்கியமாகும்.
இவ்வாறானதொரு நிலைமையைத்தான் தென்கிழக்கின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படும் கல்முனையில் காண முடிகிறது. கல்முனையின் தெற்கே சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை தேவையென்ற போராட்டம் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றவேளை கல்முனையின் வடக்கே தமிழ் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற அழுத்தம் தமிழ் தரப்புக்களிலிருந்து ஏககாலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
இந்நிலையில், இலங்கையில் எந்தவொரு பிரதேசத்திலும் இன ரீதியாக பிரதேச செயலகங்கள் பிரிக்கப்பட்டு செயற்படுவதில்லை. ஆனால், கல்முனையில் மாத்திரம் இவ்வாறு இனரீதியான செயலக பிரிவுகள் உருவாக்கப்பட்டு நிர்வாக நடவடிக்கைகள் இடம்பெறுவதைக் காணலாம். இந்நிலையில்தான், இவ்விரு விடயங்களும் இப்பிரதேசத்தின் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இவ்விடயங்கள் தேசிய அரசியலிலும் செல்வாக்கு செலுத்துவதையும் நோக்க முடிகிறது.
தனிச் சபையும் தனிச் செயலக நிர்வாக தரமுயர்வும்
4,726 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட தற்போதைய கல்முனைத் தொகுதியானது 106,780 மக்கள் தொகையையும் 74,946 வாக்காளர்களையும் கொண்டுள்ளது. கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவு, கல்முனை தமிழ் உபபிரதேச செயலகப் பிரிவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு ஆகிய நிர்வாக பிரிவுகளைக் கொண்டதாக கல்முனைத் தேர்தல் தொகுதி உள்ளது.
2012 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப்பிரிவின் 29 கிராம சேவகர் பிரிவுகளும் 10,459 குடும்பங்களையும் 29,094 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன், சிங்களவர்கள் 124 பேரையும் இலங்கைத் தமிழர்கள் 66 பேரையும் இந்தியத் தமிழர் 8பேரையும் இலங்கை முஸ்லிம்கள் 44,306 பேரையுமாக 44,509 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
கல்முனை தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவின் 29 கிராம சேவகர் பிரிவுகளும் 7,533 குடும்பங்களையும் 20,099 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன், 231 சிங்களவர்களையும் 26,564 இலங்கைத் தமிழர்களையும், 50 இந்தியத் தமிழர்களையும் 2376 இலங்கை முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக 29,713 மொத்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.
சாய்ந்தமருது பிரதேச செயலப்பிரிவின் 17 கிராம சேவகர் பிரிவுகளும் 6,081 குடும்பங்களையும் 16,936 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன் 25,389 முஸ்லிம்களை உள்ளடக்கிய 25,412 மக்கள் தொகையை கொண்டுள்ளது.
இந்நிலையில். 1993ஆம் ஆண்டு முதல் கல்முனை பிரதேச உப அலுவலகமாக இயங்கும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல்வாதிகள் முதல் சிவில் சமூக அமைப்புக்கள் உட்பட பலர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றன. அவ்வப்போது இவ்விடயம் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பேசப்பட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாக இவ்விடயம் வீரியம் பெற்றிருப்பதை வெளிவரும் அறிக்கைச் சமர்கள், பரஸ்பர குற்றச்சாட்டுக்கள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.
அறிக்கை சமர்களும் வரலாற்றுப் பின்னணியும்
“கல்முனையைத் துண்டாடி புதிய பிரதேச செயலகம் அமைக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. அது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துரையாடியுள்ளனர். கல்முனையில் புதிய பிரதேச செயலகம் தொடர்பாக ஏற்கனவே பேசப்பட்டபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமெனப் பிரதமர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்கால அரசின் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு கூட்டமைப்பு கல்முனையை துண்டாட முயற்சிக்கிறது.
இது கல்முனையில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடாகும். “கல்முனைப் பிரதேச செயலகம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலில் எங்களுடன் கலந்துரையாட முன்வர வேண்டும். அவ்வாறில்லாமல் அரசியல் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க முற்பட்டால் நாங்களும் அழுத்தம் கொடுப்போம்” என இராஜாங் அமைச்சர் எச்.எம்.எம். ஹரிஸ் கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இராஜாங்க அமைச்சரின் இப்பேச்சு தமிழ் தரப்பிலிருந்து எதிர்ப்பலைகளை உருவாக்கியிருந்ததை ஊடக அறிக்கைகள் மூலம் காண முடிந்தது. “கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு பிரதமர் உறுதியளித்துள்ள நிலையில், அதனைத் தடுப்பதற்கு ஹரிஸ் எம்.பி யார்? கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் இதற்கான வாக்குறுதியைக் கொடுத்திருந்தார். எனினும், வடக்கு பிரதேச செயலகத்தை பிரிக்கக் கூடாது என ஹரிஸ் எம்.பி. தெரிவிந்திருந்தார். இது தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் மன வேதனைக்குரிய விடயமாகும” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர். கோடீஸ்வரன் வரவு செலவுத்திட்டத்தின் 3 ஆவது வாசிப்பின்போது குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்திற்கு வெளியிலும் இவ்விடயம் தொடர்பான அறிக்கைச் சமர்கள் இடம்பெற்றுவருவதை அவதானிக்க முடிகிறது. “கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை சகல அதிகாரங்களும் கொண்ட முழு நிறைவான பிரதேச செயலகமாக ஓரிரு தினங்களுக்குள் தற்போதைய அரசாங்கம் தரமுயர்த்தி தராத பட்சத்தில் அரசின் வரவு செலவுத்திட்டத்தை தோல்வியடைச் செய்யுங்கள் என அம்பாறை மாவட்ட சிவநெறி அறப்பணி மன்றம் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தியுள்ள நிலையில், “கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரம் உயர்வதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளே குறுக்கீடாகவுள்ளனர்” என ஈழ மக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் அமைப்பாளர் இராசையா குறிப்பிட்டிருக்கிறார்.
இச்சந்தர்ப்பத்தில், “ஒன்றாக வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களை பிரிப்பதற்கு சில தரப்பினர் வேண்டுமென்றே முனைகிறார்கள்” என தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறு இவ்விடயம் தொடர்பான அறிக்கை சமர்கள் இடம்பெற்று வருகின்ற வேளை “கல்முனை உப பிரதேச செயலகத்தை நிலத்தொடர்பற்ற ரீதியில் பிரதேச செயலகமாக தரமுயர்த்தாமல் இரு சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் எல்லை மீள்நிர்ணயம் செய்யப்பட்ட பின்னர் நிலத்தொடர்பு அடிப்படையில் மாத்திரமே தர முயர்த்தப்படும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள சூழ்நிலையில் “முஸ்லிம் –- தமிழ் மக்களிடையே முரண்பாடுகள் ஏற்படாத வகையில் கல்முனை பிரதேச செயலகம் குறித்த பிரச்சினைக்கு தீர்வை எட்ட முயற்சிக்கின்றோம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது.
இவ்வாறு அதிகாரத்திலுள்ள அரசியல் தரப்புக்களும், சிவில் அமைப்புக்களும் கல்முனைப் பிரதேசத்திற்கு வெளியிலிருந்து அறிக்கைச் சமர் செய்வதும் ஒரு தரப்பை மற்றைய தரப்பு குற்றம் குறையும் சொல்லி; வருகின்ற நிலையில் கல்முனையில் வாழும் இரு சமூகங்களையும் சார்ந்தவர்களின் பிரதிநிதிகள் இதய சுத்தியுடன் ஒரே மேசையில் அமர்ந்து பேசி இப்பிரச்சினையை எதிர்கால சமூகத்திடம் விட்டுவிடாது தீர்ப்பதற்கு ஏன் ஆரோக்கியமான முயற்சிகளை மேற்கொள்ள முடியாது. ஏனெனில் இப்பிரதேசத்தில் வாழப்போவது இரு சமூகங்களும்தான். அரசியல்வாதிகளும், சுயநல விரும்பிகளும் இப்பிரச்சினையை இதய சுத்தியுடன் தீர்த்து வைக்க விரும்பவில்லை என்பதையே இரு சமூகங்களையும் கவலையடையக் கூடிய விதமாக அறிக்கை விடுவதன் மூலம் காண முடிகிறது.
அரசியல்வாதிகள் மற்றும் சுய நிகழ்ச்சி நிரலைக் கொண்டவர்களின் சுகபோகங்களுக்காக இரு சமூகங்களையும் சார்ந்த அப்பாவிகள் ஒற்றுமை இழந்து ஒருவரையொருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் சூழல் ஏன் உருவாக வேண்டும். ஏன் அப்பாவி சமூக அங்கத்தவர்கள் பலிக்கடாக்களாக வேண்டும் என கேட்க வேண்யுள்ளது.
இந்நிலையில்தான் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி அதிகார சபைக் கோரிக்கை தொடராக முன்வைக்கப்பட்டு வருகிறது. பண்டைய கல்முனையின் நிர்வாகத்தை நோக்குகின்றபோது கல்முனை மூன்று நிர்வாக கிராம சபைகளையும் ஒரு பட்டின சபையையும் கொண்டிருந்தது. கரவாகு வடக்கு, கரவாகு மேற்கு, கரவாகு தெற்கு மற்றும் கல்முனை பட்டின சபை என்பன அவையாகும். கரவாகு வடக்கு கிராம சபை கல்லாறு, துறைநீலாவணை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு கிராமங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது கல்லாறும் துறைநீலாவணையும் மட்டக்களப்பு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டன.
கரவாகு மேற்கு கிராம சபை நற்பிட்டிமுனை, மணற்சேனை, சேனக்குடியிருப்பு, துரவந்தியன்மேடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாகவும். கரவாகு தெற்கு சபை சாய்ந்தமருது கிராமத்தை உள்ளடக்கியதாகவும் இருந்ததுடன், கல்முனைப் பட்டின சபையின் எல்லையானது கல்முனை சனிட்டரி போட்டின் எல்லையாக அதாவது, தாளவட்டுவான் வீதி முதல் கல்முனை ஸாஹிறா வீதி வரையானது என கல்முனையின் வரலாற்றுப் பதிவுகள் சுட்டிக்காட்டுகிறது.
இந்நிலையில், 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சட்ட மூலத்தின் பிரகாரம், பட்டின சபை மற்றும் கிராம சபைகள் என்ற அதிகார சபைக்களுக்குப் பதிலாக பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. இதனடிப்படையில் கல்முனைக் கரைவாகுவின் 3 கிராம சபைகளும் ஒரு பட்டின சபையும் கல்முனைப் பிரதேச சபைக்குள் உள்வாங்கப்பட்டன.
நாடளாவிய ரீதியில் இவ்வாறு உருவாக்கப்பட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் 1991ஆம் ஆண்டு நடைபெற்றது. இருப்பினும், வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாக இத்தேர்தல் இவ்விரு மாகாணத்திலும் குறித்த காலங்களில் நடாத்தப்படவில்லை. கல்முனை பிரதேச சபைக்கான முதலாவது தேர்தல் 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இத்தேர்தலில் சாய்ந்தமருது மக்களும் தாங்கள் விரும்பும் கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் வாக்களித்திருந்தார்களே தவிர தங்களுக்கு ஒரு தனியான சபை வேண்டுமென்று அப்போது கேட்கவில்லை.
1994 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது சாய்ந்தமருது மக்களின் அதிகப்படியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸுக்குப் பெற்றுக்கொள்வதற்காக சாய்ந்தமருதுக்கான தனியான பிரதேச செயலகம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி மறைந்த தலைவர் அஷ்ரபினால் வழங்கப்பட்டு அவ்வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது.
இதன் பிரகாரம், 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி உப பிரதேச செயலகமாக உருவாக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேச செயலகம் 2001ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முதல் தனியான பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்பட்டு செயற்பட ஆரம்பித்தது. இதன் பின்னரே தனியான பிரதேச சபைக்கான கோஷமும் எழத்தொடங்கியது. இக்கோஷங்களுக்கு மத்தியில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான உயர்மட்டக் குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டிருக்கிறது. இவ்விடயம் தொடர்பில் புதிய குழு விரைவில் கலந்துரையாடவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபைக்கான கோஷம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இதிலுள்ள சாதக பாதகங்கள் குறித்து ஆரோக்கியமாகப் பேசப்பட்டு இதற்கான தீர்வு எட்டப்பட்டிருந்தால் தொப்புள்கொடி உறவாக விளங்கும் சாய்ந்தமருதூரிலும், கல்முனையிலும் அதிகாரப் பசிக்காக பழிசொல்லும் நிலை உருவாகியிருக்காது. தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்றிருக்காது. சாய்ந்தமருது இளைஞர்கள் பிழையாக வழிநடத்தப்படுவதன் ஊடாக வன்முறைக் கலாசாரம் உருவாகியிருப்பதாக பல்வேறு தளங்களில் பேசப்படுகின்றன.
பிழையான வழிகாட்டல்களும்; கல்முனைக்கான தீர்வும்
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீனின் வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இப்பிரதேச அப்பாவி இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை உணர்த்துகிறது.
“தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை எந்தவொரு அரசியல் செயற்பாடுகளும் தங்களது பிரதேசத்தில் மேற்கொள்ளக் கூடாது என்பது அரசியல் நீரோட்டத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. எந்தவொரு அரசியல்வாதியும் அரசியல் நடவடிக்கையை முன்னெடுக்கும்போதோ, அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்கொண்டு செல்லும்போதோ அவற்றை வன்முறைக் கலாசாரத்தைக் கொண்டு தடுக்க முடியாது.
அவர்களின் சொத்துக்களை, வாகனங்களைச் சேதப்படுத்தி வன்முறைகளைக் கொண்டு தமது கோரிக்கைகளை நிறைவேற்ற முனைவது அல்லது இளைஞர்களை அதற்காகத் தூண்டிவிடுவது அவர்களை வழிகெடுக்கும் செயற்பாடாகும்” என ஆரிப் சம்சுடீன் சுட்டிக்காட்டியிருப்பதோடு முஸ்லிம் சகோதரத்துவத்தை கட்டிக் காப்பதே எமது பணி. அப்பணியை செயற்படுத்துவது நமது கடமை. அவ்வாறே சகோதரத்துவத்துடன் வாழவும் நாம் ஏவப்பட்டுள்ளோம். சகோதரத்துவத்தை நிலைநாட்டுவதற்காக செயற்படும் எங்களை நோக்கி கற்களை வீசிக் காயப்படுத்தி, இரத்தத்தையோட்டி, முஸ்லிம் சகோதரத்துவத்தை அழிக்க முனையும் விஷமிகளிடமிருந்து அப்பாவி இளைஞர்கள் வழி தவறாது விலகி நடக்க வேண்டுமென” சாய்ந்தமருது பிரதேச இளைஞர்களிடம் அவர் கோரிக்கையும் விடுத்திருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் சாய்ந்தமருதில் முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதாக சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா குறிப்பிட்டிருக்கிறார்
இவ்வாறு கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படுதல் மற்றும் சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளூராட்சி சபை என்ற இவ்விரு விடயங்களும் தலைக்கு மேல் வெள்ளம் என்ற நிலையை உருவாக்கியிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளும், வேற்றுமைகளும் ஏற்படாமல் இருப்பதைத் தவிர்ப்பதற்கும் பிரதேசங்களுக்கிடையில் பிளவுகள் உருவாகாமல் பிரதேச ஒற்றுமையை காப்பாற்றுவதற்கும் தீர்வு எட்டப்படுவது அவசியமாகவுள்ளது.
அந்தவகையில், சாய்ந்தமருது பிரதேச செயலகம் தவிர்ந்த கல்முனையில் இயங்கும் நிர்வாக ரீதியான இரண்டு பிரதேச செயலகங்களும் சம அதிகாரங்களுடன் செயற்படுவதற்கும் பண்டைய நிர்வாக எல்லைகளைக் கொண்ட நான்கு உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கவும் விட்டுக்கொடுப்புடன் வழிவிடப்பட்டால் மாத்திரமே கல்முனையில் தலைக்குமேல் வெள்ளம் என்ற நிலையில் உருவாகியுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியும். இல்லையேல் இப்பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக தொடர்ந்து கல்முனையில் எரிந்து கொண்டிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
-Vidivelli, எம்.எம்.ஏ.ஸமட்