Top News

இத்தாலியில் கடத்தப்பட்டு, கொளுத்தப்பட்ட பேருந்து - நடந்தது என்ன..?


இத்தாலியில் மிலன் நகர் அருகே 51 பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, அதன் ஓட்டுநரால் கடத்தப்பட்டது. பின்னர் அந்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார்.

பேருந்தில் உள்ள சில குழந்தைகள் அவர்களின் இருக்கையோடு கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்தின் பின்புறம் இருந்த கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அவர்கள் மீட்கப்பட்டனர்.

இத்தாலி குடியுரிமை பெற்ற 47 வயதான அந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் செனகலை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.

''யாரும் இதில் பிழைக்க வாய்ப்பில்லை'' என்று அந்த ஓட்டுநர் சொன்னதாக கூறப்படுகிறது.

''குழந்தைகள் அனைவரும் உயிர் தப்பியது ஒரு அதிசயம். இது ஒரு படுகொலையாக ஆகியிருக்கக்கூடும்'' என்று மிலன் தலைமை வழக்கறிஞர் பிரான்சுஸ்கோ கிரேகோ கூறியதாக மேற்கோள் காட்டப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இத்தாலியின் குடியேறிகள் தொடர்பான கொள்கை மற்றும் மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழும் குடியேறிகள் மரணம் தொடர்பாக தனது சினத்தை வெளிப்படுத்தியதாக இந்த பேருந்தில் பயணித்த ஒரு ஆசிரியர் கூறியுள்ளார்.

''கைது செய்யப்பட்ட நபர், 'மத்தியதரைக்கடல் பகுதியில் நிகழும் மரணங்களை தடுத்து நிறுத்துங்கள், நான் ஒரு படுகொலையை நிகழ்த்த போகிறேன் என்று குரல் எழுப்பினார்'' என போலீஸ்துறை செய்திதொடர்பாளரான மார்கோ பல்மெய்ரி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இத்தாலி போலீஸ்சார் அறிந்துள்ள நபர்தான் என்று தெரியவருகிறது. மிலன் நகர வழக்கறிஞர் அலுவலகத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவின் தலைவரான அல்பெர்டோ செய்தியாளர்கள் சந்திப்பில் இது பற்றி கூறுகையில், கைது செய்யப்பட்ட நபருக்கு முன்பொருமுறை மது அருந்திய நிலையில் வாகனம் ஒட்டியது மாற்றும் தாக்குதலில் ஈடுபட்டது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது என்று கூறினார்.

நடந்தது என்ன?

பதின்மவயது சிறுவர்கள் மற்றும் அவர்களின் மேற்பார்வையாளர்களை ஏற்றிச்சென்ற அந்த பேருந்து பள்ளியில் இருந்து உடற்பயிற்சிக்கூடம் செல்ல வேண்டிய நிலையில், ஓட்டுநர் பேருந்தை வேறொரு வழியில் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.

பேருந்தில் பயணித்தவர்களை சந்தேக நபர் ஒரு கத்தியை காட்டி மிரட்டியபோது, பேருந்தில் இருந்த ஒரு மாணவன் தனது பெற்றோருக்கு இது குறித்து மொபைலில் தகவல் கூறியுள்ளான்.

இந்த பேருந்தை இடைமறிக்க அதிகாரிகள் முயன்றபோது சுற்றிலும் இருந்த போலீஸ் வாகனங்கள் மீது மோதி பின்னர் பேருந்து நின்றுள்ளது.

பேருந்து நிறுத்தப்பட்டவுடன், உடனடியாக கீழே குதித்த ஓட்டுநர் பேருந்துக்கு தீ வைத்துள்ளார்.

பேருந்தின் உள்ளே இருந்தவர்களை காப்பாற்ற வாகனத்தின் பின்புறம் மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளை உடைத்து பயணித்தவர்களை போலீசார் மீட்டுள்ளனர்.

Previous Post Next Post