தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவிற்குச் சென்று பிரச்சினைகள் காரணமாக நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் சிறந்த முறையில் நடத்தப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டுத்துறை அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்தார். குறித்த நிலையங்களில் அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென சில ஊடகங்கள் முன்வைத்த குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என சில ஊடகங்கள் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தன. அதுகுறித்து ஆராய்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இரு அதிகாரிகள் உள்ளடங்கலாக நானும் அண்மையில் சவூதி அரேபியா சென்று அந்த நிலையங்களை ஆராய்ந்தோம். இலங்கையிலிருந்து பணிப்பெண்களாகச் சென்று சில பிரச்சினைகள் காரணமாக தொழில் செய்த இடங்களிலிருந்து வெளியேறியவர்கள் பெண் நலன்புரி நிலையம் மற்றும் பாதுகாப்பு இல்லம் (Safe House) என்பவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த நிலையங்களில் அவர்களுக்குத் தேவையான சகல வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, தொழில் அமைச்சு, சுங்கத் திணைக்களம், மனித உரிமைகள் காரியாலயம் ஆகியவற்றின் கிளைகள் உட்பட பொலிஸ் நிலையமும் அந்த நிலையங்களில் இயங்கி வருகின்றன. இதற்காக சவூதி அரசாங்கம் பெருமளவு நிதியைச் செலவிடுகிறது.
எனவே, தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு பிரச்சினைகள் ஏதும் ஏற்படுமாயின் அந்தக் காரியாலயங்களில் முறையிடலாம். அத்துடன் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களை உளவியல் ரீதியில் ஒருமுகப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
சுற்றுலா விசா மூலம் சவூதி அரேபியாவிற்குச் சென்றவர்களே அதிகளவில் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர். மேலும் திருட்டுத்தனமான முகவர்களூடாக எவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்குச் செல்ல முற்படக்கூடாது.
இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்வோருக்கு வழங்கும் பயிற்சி நெறியில் சிறியளவில் திருத்தம் கொண்டு வருவதற்குத் தீர்மானித்துள்ளோம். அத்துடன் இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையில் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். இது குறித்து சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நட்புறவுச் சங்கத்தின் மூலம் சவூதி அரேபியாவை இலங்கையில் முதலீடு செய்யச் செய்து நாட்டில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். சுற்றுலாத்துறையையும் இதன் மூலம் அபிவிருத்தியடையச் செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.