பாதாள உலகத்தலைவர் மாகந்துர மதூஷ் மற்றும் கஞ்சிபான இம்ரான் போன்றோருடன் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தொடர்பு வைத்திருப்பதாகக் குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் பதிவேற்றிய நபரை கைது செய்யுமாறு வலியுறுத்தி முஜிபுர் ரஹ்மான் எம்.பி. குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடொன்றை கையளித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பதிவின் மூலம் தனக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டு மெனக் கோரி சபாநாயகர் கருஜயசூரியவிடம் கடிதமொன்றையும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. சமர்ப்பித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இது விடயமாகக் கருத்து தெரிவித்த அவர்,
பாதாள உலகத்தலைவர் மாகந்துர மதூஷ் கைதின் பின்னர் அதனை பின்னணியாகக் கொண்டு பல்வேறுப்பட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. இதன் அடிப்படையில் கடந்த காலங்களில் பாதாள உலகத் தலைவர்களான மாகந்துர மதூஷ் மற்றும் இம்ரான் போன்றோருடன் எனக்குத் தொடர்புள்ளதாகவும் இம்ரான் என்பவர் எனது கட்டிடத்தில் வாடகைக்கு இருந்ததாகவும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவொன்று வைரலாகப் பரவியிருந்தது.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு எதிராக கடந்த காலங்களில் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு இருந்தமையை காரணமாகக்கொண்டு, மதூஷின் கைதை பின்னணியாக வைத்து எனக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாறான பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனூடாக எதிர்காலத்தில் எனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் அதிகம் காணப்படுகின்றன. அதன் காரணமாக குறித்த முகப்புத்தக பதிவுக்கமைய குறிப்பிடப்பட்டிருந்த அந்தக் கட்டிடத்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து கடந்த வாரம் கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவிடம் முறைப்பாடொன்றினையும் முன்வைத்திருந்தேன். இருப்பினும் அவமதிப்பு முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்கான அதிகாரம் எமக்கு கிடையாது என்று பொலிசார் குறிப்பிட்டனர்.
இதுபோன்ற முகப்புத்தக பதிவு எனது அரசியல் வாழ்க்கைக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பதை பொலிசாருக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். அதுமாத்திரமின்றி இந்த முகப்புத்தக பதிவு என்மீதான உயிர் அச்சுறுத்தலாகவே சோடிக்கப்பட்டதாகக் கருதுகிறேன்.
இந்த விடயங்கள் குறித்து குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு விளக்கமளித்துள்ளேன். எனவே இதுகுறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் இந்த விடயம் குறித்து விசாரணைகள் செய்து குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி சபாநாயகர் கருஜயசூரியவுக்கு கடிதத்தினூடாக அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் இது விடயமாக உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் போட்டியிடும்போது பாதாள குழுவினரை பயன்படுத்தி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ அச்சுறுத்தினார். அத்தோடு தேர்தல் பிரசாரங்கள் நடத்தமுடியாதபடி தடுத்தார். எனக்கு ஆதரவாக இருந்தவர்களின் வீடுகளுக்கு பாதாள உலக குழுவினரை அனுப்பி அச்சுறுத்தல் விடுத்தார். இப்போது எமக்கு பாதாள குழுவினருடன் தொடர்பிருப்பதாக சுய அரசியல் இலாபத்திற்காக இட்டுக்கட்டுகின்றனர் என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. தெரிவித்தார்.