Top News

மழையின் பின்னர் போட்டியின் திசை மாறிவிட்டது: லசித் மாலிங்க

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி டக்வர்த் லுவிஸ் முறைப்படி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 0-3 என இழந்துள்ளது. எனினும், இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டமை அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தியது என அணித்தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.


போட்டியின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட போதே, லசித் மாலிங்க குறித்த விடயத்தினை தெரிவித்தார்.

நேற்றைய (10) மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 332 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்திருந்தது. இதனை நோக்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்த போதிலும், குசல் மெண்டிஸ் மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோரின் இணைப்பாட்டத்தின் மூலம் சற்று வலுப்பெற்றது. எனினும், போட்டியில் மழை குறுக்கிட்டதால், இலங்கை அணிக்கு 8 ஓவர்களில் 118 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனால், இலங்கை அணி வேகமாக ஓட்டங்களை பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியை சந்திக்க நேரிட்டது. இந்த போட்டியின் முடிவு குறித்து இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க குறிப்பிடுகையில்,

“இந்த போட்டி உட்பட தொடர் முழுவதும், எமது பந்து வீச்சாளர்களால் அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை பெறமுடியவில்லை. அதனால், துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமல் போய்விட்டது. அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினால் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்புகளை தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் எமக்கு வழங்கிருக்கவில்லை. அவர்கள் ஒவ்வொரு பந்துக்கும் ஒரு ஓட்டம் எனப் பெற்றனர். அதுமாத்திரமின்றி தேவையான நேரத்தில் பௌண்டரிகளையும் பெற்றனர். இதனால், தென்னாபிரிக்க அணி இலகுவாக முன்னேறியது. 

>>Photos: Sri Lanka vs South Africa – 3rd ODI<<

இந்த காலக்கட்டத்தினை பார்க்கும் போது, ஒருநாள் போட்டிகளில் சாதாரணமாக ஒவ்வொரு அணிகளும் 280 தொடக்கம் 300 ஓட்டங்களுக்கும் அதிகமான ஓட்டங்களை குவிக்கின்றன. டேர்பன் மைதானத்தின் ஒருபக்க பௌண்டரி எல்லை குறுகியதாக இருந்தமையால், 300 அல்லது 310 ஓட்டங்களை எம்மால் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. எனினும், கடைசி நேரத்தில் இரண்டு பிடியெடுப்புகள் தவறவிடப்பட்டதால், எதிர்பார்த்ததை விடவும் 15 அல்லது 20 ஓட்டங்கள் எதிரணிக்கு அதிகமாக வழங்கியிருந்தோம்.

ஆனால், துடுப்பாட்டத்தை பொருத்தவரையில் நாம் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும் என துடுப்பாட்ட இன்னிங்ஸிற்கு முன் கலந்துரையாடினோம். அதன்படி, முதல் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட போதும், குசல் மெண்டிஸ் மற்றும் ஓசத பெர்னாண்டோ இணைந்து சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். ஆனால், மழை குறுக்கிட்டதால் போட்டியின் திசை மாறிவிட்டது.

எமக்க கொடுக்கப்பட்ட இலக்கு மிகப்பெரிய இலக்காக இருந்தது. அதனை எட்டுவதற்கு துடுப்பாட்ட வீரர்கள் அனைத்து பந்துகளுக்கும் அடித்து விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. துடுப்பாட்ட வீரர்கள் வாய்ப்பை எடுத்துக்கொள்ள முற்பட்டனர். எனினும், அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டதால், இலக்கை எட்டக்கூடிய வாய்ப்பு இல்லை என்பதை நாம் அறியக்கூடியதாக இருந்தது” என்றார்.


அதேநேரம் தென்னாபிரிக்க அணியின் செயற்பாடு குறித்து குறிப்பிடுகையில், “தென்னாபிரிக்க அணியில் மூன்று அனுபவ வீரர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் கடந்த மூன்று போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட்டு எமக்கு அழுத்தத்தை கொடுத்தனர்.

குறிப்பாக குயிண்டன் டி கொக் கடந்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக ஆடியதுடன், இந்த போட்டியில் சதம் அடித்தார். அவரை நாம் ஆரம்பத்தில் ஆட்டமிழக்கச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டோம். ஆனால், எம்மால் முடியவில்லை. அடுத்த இரண்டு போட்டிகளில் எமது திட்டங்களை சரியாக செயற்படுத்த முயற்சிப்போம்” என்றார்.

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள் நிறைவை எட்டியுள்ள நிலையில், நான்காவது போட்டி எதிர்வரும் 13ம் திகதி போர்ட் எலிசபெத்தில் நடைபெறவுள்ளது.
Previous Post Next Post