தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமைப் பதவியை ஏற்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த தலைமை தொடர்பில் கட்சிக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை.
தலைமை மாற்றம் குறித்து கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியிலும் சிலர் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
ஒரு அரசியலமைப்புத் திருத்தம் மூலமாக நீண்டகாலமாக இருக்கின்ற தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டுமென்ற ஒரேயொரு நோக்கத்திற்காகவே தாம் அரசிலுக்கு வந்ததாகவும், அந்த நோக்கம் நிறைவேறுவதற்காகவே செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த சுமந்திரன், உரிய முறையில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியை விக்னேஸ்வரன் நடத்துவதாக தாம் அறியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதன் உறுப்பினர்கள் யார்? அதற்குள் ஐனநாயக முறையில் தெரிவுகள் இடம்பெற்றதாக, என்பது குறித்தும் தாம் அறியவில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் விமர்சித்துள்ளார்.