சகல தரப்பினரினதும் உடன்பாட்டுனே ஹஜ் சட்டம் அறிமுகப்படுத்தப்படுமென தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்தார். உத்தேச சட்ட வரைவு தொடர்பில் முஸ்லிம் எம்.பிக்கள், முஸ்லிம் அமைப்புக்களிடையே குறிப்பிடத்தக்க அளவு இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாவும் அவர் குறிப்பிட்டார்.
முதன் முறையாக கொண்டுவரப்படவிருக்கும் ஹஜ் சட்டமூலம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஹஜ் கடமைக்கு யாத்திரிகர்களை அழைத்துச் செல்லும் செயற்பாடு புனிதமாக இடம்பெற வேண்டும்.ஆனால் இதனை முகவர்கள் வியாபாரமாக்கியுள்ளனர். இது தொடர்பில் கடந்த காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளையடுத்து உச்ச நீதிமன்றம் வழிகாட்டலொன்றை அறிமுகம் செய்தது.இதனடிப்படையில் தான் தற்பொழுது பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. புதிய சட்டம் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஹஜ் தொடர்பிலுள்ள குறைபாடுகளுக்கு தீர்வு ஏற்படும்.கூடுதல் கட்டணம் அறவிடுவது,முறைகேடுகள் இடம்பெறுவது பதிவு செய்தும் நீண்டகாலமாக ஹஜ்கடமை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காமை உட்பட அநேக பிரச்சினைகளுக்கு இதனூடாக தீர்வு ஏற்படும்
ஹஜ் சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் கூட்டமொன்று நடத்தப்பட்டது.இது தொடர்பான சட்ட நகல் எம்.பிகளுக்கு வழங்கப்பட்டு அவர்களின் கருத்துகள் பெறப்பட்டன.உலமா சபை அடங்கலான முஸ்லிம் அமைப்புகளின் கருத்துகளும் ஆலோசனைகளும் பெறப்பட்டன.சில யோசனைகள் தொடர்பில் மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன.பல விடயங்கள் தொடர்பில் உடன்பாடு காணப்படுகிறது.மாற்று யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.புதிய சட்ட மூலம் கொண்டுவரப்பட்ட பின்னர் அரசிற்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும்.ஹஜ் யாத்திரிகளை அனுப்புவதை அரசாங்கத்தினால் கூட முன்னெடுக்க முடியும்.
ஷம்ஸ் பாஹிம்