– றிசாத் ஏ காதர் –
“உதுமாலெப்பையின் வெளியியேற்றத்தால், கட்சிக்குள் இருந்த பதறுகளும் சேர்ந்து வெளியேறியுள்ளன. அதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்று, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.
தேசிய காங்கிரஸின் அமைப்பாளர் மற்றும், பிரதித் தலைவர் பதவிகளை வகித்த, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அந்தக் கட்சியிலிருந்து அண்மையில் ராஜிநாமா செய்திருந்தார்.
இதனையடுத்து, அந்தக் கட்சியில் முக்கிய பதவிகளை வகித்து வந்த அட்டாளைச்சேனை, பொத்துவில் மற்றும் மூதூர் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களும், கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனையில் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் வைத்து, உதுமாலெப்பை முன்னிலையில் கூட்டாக ராஜிநாமா செய்தனர்.
இதன் பின்னர், தேசிய காங்கிரஸின் அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் நேற்று புதன்கிழமை, ஆலங்குளத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொன்ட, அந்தக் கட்சியின் தலைவர் அதாஉல்லா அங்கு உரையாற்றினார்.
அதன்போதே, மேலுள்ளவற்றினை அவர் கூறினார்.
தேசிய காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், மேலதிக மக்கள் தொடர்பாடல் அதிகாரியுமான ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் ஏ.பீ.ஏ. கபூர் தலைமையில் நடைபெற்ற, மேற்படி நிகழ்வில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லா மேலும் தெரிவிக்கையில்;
“அட்டாளைச்சேனைப் பிரதேசம் அரசியல் அதிகாரத்தை எவ்வாறு கடந்த காலத்தில் பெற்றதோ, அதேபோன்றதொரு அதிகாரத்தை அட்டாளைச்சேனை மீண்டும் பெறும். அதற்குரிய தலைமைத்துவத்தை தேடி எடுங்கள். அட்டாளைச்சேனையில் தலைமை தாங்க கூடிய ஒருவரின் கையில் இந்த கட்சியினை ஒப்படைப்பீர்கள் என நம்புகின்றேன். மிக விரைவில் அது நடக்கும்.
பதவிகளைப் பெற்றோர் வெளியேறியுள்ளனர்
தேசிய காங்கிரஸ் கட்சியின் ஊடாக பதவிகளை பெற்ற அதிகம்பேர், இன்று கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர். அது அவர்களைப் பொறுத்தது. நாம் நியாயம் செய்தோமா, அன்பு செலுத்தினோமா, உண்மையாகவிருந்தோமா என்பதைத்தான் பார்க்கவேண்டும்.
யாரையும் கட்சியை விட்டும் விலக்குவதற்கோ, யாருக்கும் அநியாயம் செய்வதற்கோ, யாரையும் அழித்து விடுவதுக்கோ நாம் நினைக்கவில்லை.
நாம் கிச்சித்தேனும் எண்ணாதவற்றை நினைத்துக் கொண்டு சிலர் வேதனைப்படுகின்றார்கள். அப்படியென்றால் எங்கோ அவர்களுக்கு அடி விழுந்திருக்கின்றது. யாரோ அவர்களின் மனநிலையை மாற்றியிருக்கின்றார்கள் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல முடியாது.
எம்.எஸ். உதுமாலெவ்வை கட்சியை விட்டு விலகிய பிறகு, அட்டாளைச்சேனை மத்திய குழுவினர் வந்து என்னுடன் பேசினார்கள். உதுமாலெப்பையிடமும் பேசினோம். ஆனால் அது சரிவரவில்லை. எனவே, அதனை அலட்ட வேண்டிய அவசியமில்லை.
யாரும் செல்லவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது
கட்சி என்பது தனிமனிதனுடை சொத்து அல்ல. அட்டாளைச்சேனயைச் சேர்ந்த உதுமாலெவ்வை கட்சியை விட்டு போய்விட்டார் என ஊடகங்களில் காட்டப்படுகின்றது. ஆனால் அவரைத் தவிர இங்கு யாரும் தேசிய காங்கிரஸை விட்டுப் போகவில்லை என்பதை, கட்சியின் முக்கியஸ்தர்கள் எல்லோரும் – இப்போது இந்த ஒன்றுகூடல் மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்.
தேசிய காங்கிரஸ் கட்சியின் அட்டாளைச்சேனை முக்கியஸ்தர்கள் எல்லோரும் இங்கு பிரசன்னமாகியுள்ளீர்கள்; ஓரிருவர்தான் இல்லை. அவர்களுக்குப் பதிலாக கடந்த தேர்தல்களில் கட்சியை விட்டும் விலகிச் சென்றவர்கள் என அத்தனை பேரும் இங்கு வந்துள்ளீர்கள். உலமாக்கள் வந்து சொல்லிவிட்டு சென்றுள்ளனர். ஆகவே எனது பார்வையில் உதுமலெவ்லையும், அவருடைய தம்பி ஜௌபர் மற்றும் அன்சார் மாஸ்டர் ஆகியோரை தவிர, ஏனைய எல்லோரும் கட்சியில் இருக்கின்றனர்.
பதறுகள் வெளியேறியுள்ளன
கடந்த ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சிக்கு ‘மழை’பட்டது. அதனால் உண்மையாகவே கொஞ்சம் கஷ்டப்பட்டோம். நமது கட்சி ‘நனைந்தது’. பின்னர் ‘வெயில்’ அடித்தது. ‘நீர்’ வற்றியது அங்குள்ளவைகள் ‘உலர்ந்தன’. காற்றடித்தது. இதன்போது கட்சியில் இருந்த பொத்துவில் தொடக்கம் மூதூர் வரையான ‘கூளன்’கள் பறந்துள்ளன.
எம்.எஸ்.உதுமாலெவ்வையின் வெளியேற்றத்தால் கட்சிக்குள் இருந்த பதறுகளையும் சேர்த்து வெளியேற்றிய இறைவனுக்கு நன்றி செல்லுகின்றேன். இப்படியானவர்களை வைத்துக்கொண்டு எப்படி கட்சி வளரப்பது. இப்போது ‘தங்க பொலி’ கட்சிக்குள் மிஞ்சியுள்ளது. வருபவர்கள் வாருங்கள்.
அட்டாளைச்சேனையில் எல்லோரும் தேசிய காங்கிரஸ் கட்சியை விட்டு சென்றுவிட்டனர் என்று நான் நினைத்தேன். இனி என்ன நமக்கு அங்கு வேலை என்று எண்ணினேன். ஆனால் இங்கு யாரும் போகிவில்லை என்று தேசிய காங்கிரஸ் போராளிகளாகிய நீங்கள் சொன்னீர்கள் . கட்சியிலிருந்து மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் துரத்தப்பட்ட தோப்பூர், மூதுரைச் சேர்ந்தவர்களும், பொத்துவிலில் உள்ள ஒருவரும், அட்டாளைச்சேனையில் முக்கியஸ்தர்கள் என்று யாருமில்லாதவர்களும் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு ஊடகங்கங்களுக்கு பெரிதாக காட்டப்பட்டுள்ளது.
எந்தப் பிழையும் செய்யவில்லை
அவர்கள் போகுமளவுக்கு நான் எந்தப் பிழையும் செய்யவில்லை. இது சத்தியப்பாதை.
எம்.எஸ்.உதுமாலெவ்வைக்கு இம்மியளவும் அநியாயம் நினைக்காத தலைமைத்துவம் என்பதை இந்த இடத்தில் நின்று சொல்ல விரும்புகின்றேன். எங்களுக்கு அநியாயம் செய்து விட்டு செல்பவர்கள் நன்றாக இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படிதான், உதுமாலெப்பை தேசிய காங்கிரஸிலிருந்து விலகியிருக்கிறார். உதுமாலெவ்வை ராஜினாமா செய்கின்ற அளவுக்கு அவரை இந்தக் கட்சியில் நாம் நடத்தவில்லை.
எவ்வாறாயினும் உதுமாலெவ்வையின் மூலமாக, கட்சிக்குள் இருந்த சில கூளன்கள் கழன்று சென்றுள்ளன” என்றார்.
இந்நிகழ்வில் தேசிய காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் டொக்டர் உதுமாலெவ்வை, தேசிய அமைப்பாளர் டொக்டர் வை.எம். ஷியா, ஆகியோருடன் கட்சியின் மேலதிக கொள்கைபரப்பு, சட்ட ஆலோசகர் சட்டத்தரணி ஏ.எல். றிபாஸ் சிரேஷ்ட பிரதி தலைவர் வைத்திய கலாநிதி உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் வைத்தியர் முஹம்மத் சியா, சட்ட விவகார கொள்கை அமுலாக்கள் மேலதிக செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம். றிபாஸ், தேசிய கொள்கை பரப்பு செயலாளர் சட்டத்தரணி ஏ.எஸ்.எம். ரிம்ஸான், தேசிய கொள்கை பரப்பு இணைப்பு செயலாளர் அல்ஹாஜ் நூருள் ஹுதா உமர், மேலதிக கொள்கை பரப்பு செயலாளர் முஹம்மத் விஸ்ரின் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.