கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில், ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி, இன்று (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் நிறைவு விழா மற்றும் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கேட்போர் கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று வெள்ளிக்கிழமை (22) புத்தளம் நகருக்கு விஜயம் செய்தார்.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனக் கோரி புத்தளத்தில் நீண்ட காலமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விடயத்தில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சர்வமத குழு மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பினருக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்தும், இன்றைய தினம் புத்தளத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சர்வமத குழு உள்ளிட்டோருக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறும் கோரியே இந்த கறுப்புக் கொடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
புத்தளம் பொலிஸ் நிலையத்துக்கு அருகில் , காலை 8.30 மணிக்கு ஒன்று௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள், குப்பைக்கு எதிரான பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு, குப்பைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.இதன்போது, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை புத்தளம் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி வருகை தரவிருந்த பிரதேச செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது, அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அங்கு பதற்ற நிலை காணப்பட்டது. விஷேட அதிரடிப்படை, கலகம் தடுக்கும் பொலிஸாரும், நீர்த் தாரை பீச்சும் கவச வாகனமும் தயார் நிலையில் இருந்தனர். அத்துடன்,புத்தளம் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.புத்தளம் பொலிஸார், இந்தப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, புத்தளம் நீதிமன்றத்தினால் பெற்றுக்கொண்ட தடையுத்தரவை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்தனர். எனினும், குறித்த போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதேச செயலகத்திற்கு செல்லவதை பொலிஸார் தடுத்து நிறுத்திய போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து களைந்து சென்று புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக திறந்து வைக்கப்படவிருந்த விளையாட்டு மைதானம் வரை நடந்து சென்றனர்.புத்தளம் நகர விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒன்று ௯டிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் குப்பைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்களையும் எழுப்பிக் கொண்டு கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கும் அமைதியின்மை ஏற்பட்டது. இதனால், குறித்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி கலந்துகொள்ள இருந்த போதிலும் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையால், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்டோர் குறித்த விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்தனர்.இதன்போது, குப்பை பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக சமயத் தலைவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றுக்கு சக்தி விளையாட்டு மைதானத்தில் வைத்து சந்திப்பதற்காக அனுமதி பெற்றுத் தருவதாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் வாக்குறுதி வழங்கிய போதிலும் இறுதி நேரத்தில் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை.
இதேவேளை, நாட்டுக்காக ஒன்றினைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் பிரதான நிகழ்வு புத்தளம் சக்தி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டுள்ளார் என்பதை அறிந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், கறுப்புக் கொடிகளை ஏந்திக்கொண்டு புத்தளம் பஸ் நிலையத்திலிருந்து சக்தி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக செல்ல முற்பட்டனர்.
சக்தி விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பலத்த பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்ததுடன், அந்த மைதானத்திற்கு செல்லும் சேர்விஸ் வீதியிலும் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.இதன்போது, சக்தி விளையாட்டு மைதானத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது, அவர்களை அங்கு செல்ல விடாது, பொலிஸாரும், கலகம் தடுக்கும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தினர். இதன்போது, அங்கும் அமைதியின்மை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மீது, பொலிஸார் தடியடி பிரயோகம் மேற்கொண்டனர்.இந்த தடியடிப் பிரயோகத்தினால் ஆண்கள், பெண்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இரண்டு இளைஞர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.