தொல் பொருட்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு விதிக்கப்படும் தண்டப் பணம் அதிகரிக்கப்படவுள்ளதாக, தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பி. மண்டாவல தெரிவித்துள்ளார்.
தொல் பொருட்களுக்கு ஏற்படும் சேதங்களைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் பிரகாரம், இதுவரை காலமும் 50 ஆயிரம் ரூபாவாக இருந்து வந்த தண்டப் பணம், ஐந்து இலட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.
இதேவேளை, தொல் பொருட்களுக்குச் சேதம் விளைவிப்பவர்களுக்கு வழங்கப்படும் சிறைத்தண்டனைக் காலமும் அதிகரிக்கப்படவுள்ளது. இரண்டு வருடங்கள் அமுலில் இருந்து வந்த இச்சிறைத்தண்டனை, 5 முதல் 15 வருடங்கள் வரை அதிகரிக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இது தொடர்பிலாக சமர்ப்பிக்கப்பட்ட பத்திரத்திற்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதை அடுத்தே, குறித்த தண்டப்பணங்களுக்கான திருத்தம் மேற்கொள்ளப் படவுள்ளதாகவும், தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
1940 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான தொல் பொருள் கட்டளைச் சட்டம், இறுதியாக 1998 ஆம் ஆண்டு திருத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் மாணவர்களுக்கு நடந்த அநீதியை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது