கண்டி, திகன பகுதிகளில் 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கான நஷ்டஈடுகளை துரிதமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கிணங்க விரைவில் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படும் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார். கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ள நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு இதுவரை நஷ்டஈடு வழங்கப்படாமை தொடர்பில் வினவியபோதே அமைச்சர் ஹலீம் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், 2018 ஆம் ஆண்டு கண்டி மற்றும் திகன பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வழங்கப்படவுள்ள நஷ்டஈடுகள் பற்றி கண்காணிப்பு (Observation) செய்வதற்காக விபரங்கள் நிதியமைச்சு உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அமைச்சுகளிடமிருந்து பதில்கள் கிடைத்ததும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் நஷ்டஈடுகள் வழங்கப்படும் என்றார்.
வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளில் 174 சொத்துகளுக்கே இதுவரை நஷ்டஈடு வழங்கப்படாதுள்ளது. 174 சொத்துகளுக்கும் 17 கோடி 5 இலட்சத்து 67 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது. இச்சொத்துகள் ஒவ்வொன்றும் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட இழப்பீடுகளைக் கொண்டுள்ளதால் அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றே வழங்கப்பட வேண்டும். தற்போது அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என புனர்வாழ்வு அதிகாரசபையின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு நஷ்டஈடு கோரி விண்ணப்பிக்கப்பட்டிருந்த விண்ணப்பங்களில் 546 சொத்துகளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு புனர்வாழ்வு அதிகாரசபை தேவையான நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்திருந்தது. இவற்றில் தலா ஒரு இலட்சத்துக்கு உட்பட்ட நஷ்டஈடுகள் 372 சொத்துகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இச்சொத்துகளுக்கு 19 கோடி 48 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது. தற்போது 174 சொத்துகளுக்கே நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டியுள்ளது. இதில் பள்ளிவாசல்களும் அடங்கியுள்ளன.
நஷ்டஈடு பெற்றுக் கொள்ள விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 16 விண்ணப்பங்கள் நிலுவையிலுள்ளன. அச்சொத்துகளின் நஷ்டங்களை மதிப்பீடு செய்ய முடியாது என மதிப்பீட்டு திணைக்களம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பொருட்களுக்கான ஆவணங்கள் இன்மையே இதற்கான காரணமாகும். இதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் சிபாரிசின்படி 16 சொத்துகளுக்கான நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.
கண்டி, திகன வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கு தாமதமில்லாமல் நஷ்டஈடுகளை வழங்குமாறு அமைச்சர்கள் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடிவெள்ளி