ஹலால் தரச் சான்றிதழினை வழங்கும் ஹலால் சான்றிதழ் பேரவை, இலங்கை கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சிடம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பால்மாக்களின் தரம் தொடர்பான தகவல்களைக் கோரியுள்ளது.
குறித்த கோரிக்கையை கைத்தொழில் மற்றும் வர்த்தக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பிரதி அமைச்சர் புத்திக்க பதிரன மற்றும் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக்க ஆகியோரிடம் ஹலால் சான்றிதழ் பேரவை முன்வைத்துள்ளது.
இது தொடர்பாக ஹலால் சான்றிதழ் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹலால் சான்றிதழ் பேரவை அமைப்பானது நூறு சதவீதம் இலங்கையர்களையே அங்கத்தவர்களாகக் கொண்டுள்ளது. அத்துடன் இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட ஹலால் சான்றிதழ் வழங்கும் இலங்கையிலுள்ள அமைப்பாகும். ஹலால் சான்றிதழ் பேரவை சட்டதிட்டங்களுக்கு அமைவாக இதுவரை ஹலால் சான்றிதழ்களை வழங்கி வந்துள்ளது. இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களில் பன்றிக் கொழுப்பு அடங்கியுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. ஹலால் சான்றிதழ் பேரவையினால் சான்றிதழ் வழங்கப்பட்ட பால்மாக்களிலும் பன்றிக்கொழுப்பு அடங்கியுள்ளதாக தகவல் வெளியானமையினால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன் ஹலால் சான்றிதழ் பேரவையினால் வழங்கப்படும் ஹலால் சான்றிதழின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகமும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட பால்மாப் பொருட்களுள் லக்ஸ்ப்ரே, ரெட்கவ், நெஸ்ப்ரே, ரத்தி, அங்கர், அன்லீன், டயமண்ட், மெலிபன் மில்க் மற்றும் மெல்கோ ஆகியவற்றுக்கு ஹலால் சான்றிதழ் பேரவை, ஹலால் சான்றிதழினை வழங்கியுள்ளது.
தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமை இருக்கின்றதென்பதன் அடிப்படையில் பின்வரும் தகவல்களை ஹலால் சான்றிதழ் பேரவை கோருகிறது.
இதுவரையில் பால்மா பொருட்களில் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர், பிரதி அமைச்சர் அல்லது அமைச்சுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள், இறக்குமதி செய்யப்பட்ட பால்மாக்களில் பன்றிக்கொழுப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டமை தொடர்பான விடயங்கள், பால்மாக்களின் தரத்தை பரிசோதிக்க பயன்படுத்தப்பட்ட இரசாயன பகுப்பாய்வு முறைகள், அது தொடர்பான நம்பத்தகுந்த அறிக்கைகள் என்பவற்றை எமக்கு தந்துதவுமாறு கோருகிறோம் மேலும் மேற்சொன்ன விடயங்கள் தொடர்பான ஒத்திசைவான தகவல்களையும் கடந்த ஆறு மாதங்கள், 3 வருடங்கள் மற்றும் அதற்கு முன்னரான காலப் பகுதிக்குரிய தகவல்களை வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.