முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லைப் பிரச்சினையும் அமைச்சர் ஹக்கீமின் கருத்துக்களும்
வை எல் எஸ் ஹமீட்
அண்மைய நிகழ்வு ஒன்றில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகின்றபோது சமகால முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை தொடர்பாக தெரிவித்த சில கூற்றுக்கள் இவ்விடயத்தில் அவர் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்ப முற்படுகிறார்; என்பதைத் தெளிவாக காட்டியது.
இது தொடர்பாக அங்கு அவர் தெரிவித்த முதலாவது கூற்று “ திருக்குர்ஆனில் எந்த இடத்திலும் பெண்களுக்கு திருமண வயதெல்லை குறிப்பிடப்படவில்லை. எனவே நாம் ஒரு திருமண வயதெல்லையைக் குறிப்பிடுவதில் தவறில்லை;” என்பதாகும்.
முதலாவது “இஸ்லாம் வயதெல்லை குறிப்பிடவில்லை” என்றால் நாம் எவ்வாறு ‘திருமண வயதெல்லை’ குறிப்பிடலாம்? இஸ்லாத்தை இறக்கிவைத்த இறைவனைவிட ரவூப் ஹக்கீம் புத்திசாலியா? அல்லாஹ் சிந்திக்காமல் அல்லது தவறுதலாக வயதெல்லை குறிப்பிடாமல் விட்டுவிட்டான்; எனவே மனிதன் குறிப்பிடலாம்; என்கின்றாரா?
படைத்தவன் குறிப்பிடாத ஒன்றைக் குறிப்பிடுவதற்கு நாம் யார்? அவன் அறியாதவற்றை நாம் அறிந்திருக்கிறோமா? எல்லாக்காலத்திற்கும் பொருத்தமானதாகத் தானே அல்லாஹ் குர்ஆனை இறக்கி வைத்திருக்கின்றான். பிற்காலத்தில் வயதெல்லை அவசியமென்றிருந்தால் அதனை அவனோ அவனது திருத்தூதர் (ஸல்) அவர்களோ குறிப்பிட்டிருக்க மாட்டார்களா?
ஹக்கீமின் உள்ளார்ந்த வாதம்
—————————————
இஸ்லாத்தில் தடைசெய்யப்படாத ஒன்று நமக்கு அனுமதியாகும். எனவே, இன்றைய காலசூழ்நிலை மாற்றங்களைக் கருத்தில்கொண்டு நாம் வயதெல்லை குறிப்பிடுவதை இஸ்லாம் தடுக்க இல்லை; என்பது அவரது உள்ளார்ந்த வாதம் என்பது அவரது பேச்சில் இருந்து புரிந்தது.
அவரது இந்த சிந்தனைதான் அவரது குழப்பத்தின் அடிப்படையாகும். தடைசெய்யாதது ஆகுமானதாகுமே தவிர, தடைசெய்யாயததை தடைசெய்வதல்ல, இஸ்லாம். இங்கு எழுகின்ற கேள்வி திருமணவயதெல்லை என்பதன் பொருள் “
இத்தனை வயதானதும் கட்டாயம் திருமணம் முடிக்க வேண்டும்; அதற்குமுன் முடிக்கலாம் அல்லது முடிக்காமல் இருக்கலாம்; என்பதா அல்லது இத்தனை வயது வரும்வரை திருமணமே முடிக்கக்கூடாது; என்பதா?
இஸ்லாத்தில் திருமணம் பர்ளு இல்லை. ஆனால் திருமணம் என்பது ஒரு மிகப்பெரும் சுன்னா? சுன்னா என்றால் அங்கு ‘கட்டாயம்’ என்கின்ற ஒன்று இல்லை. அதேநேரம் அல்லாஹ் ஹலாலாக்கிய, அவனது திருத்தூதரின் (ஸல்) மிகப்பெரும் சுன்னாவாகிய ஒரு விடயத்திற்கு கட்டுப்பாடு போடுவதற்கு, குறிப்பிட்ட வயதுவரை அதனை ஹறாமாக்குவதற்கு நீங்கள் யார்?
நீங்களும் உங்களைப்போன்று வாதிடுகின்றவர்களும் புரியத்தவறுகின்ற விடயம் பருவ வயதை அடைந்த ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ படைத்தவன், எல்லாம் அறிந்தவன் ஹலாலாக்கிய ஒன்றை குறிப்பிட்ட காலம்வரை ஹறமாக்க முனைகின்றீர்கள் ஆனால் அவ்வாறு ஹறாமாக்காமல் ஹலாலாக்குவதற்காகத்தான் அல்லாஹ் வயதெல்லை குறிப்பிடவில்லை; என்பதாகும்.
நடைமுறைப் பிரச்சினை
———————————
சரி நடைமுறைப் பிரச்சினைக்கு வருவோம். சிறுவயதில் திருமணமுடித்துக் கொடுப்பதால் பல பிரச்சினைகள் எழுகின்றன; என்று சில NGO க்களின் கருத்தை நீங்களும் முன்வைக்கிறீர்கள். எத்தனை விகிதம் இளவயதுத் திருமணம் நடைபெறுகிறது; என்பதற்கு ஏதாவது புள்ளிவிபரம் உங்களிடமோ, இந்த NGO க்களிடமோ இருக்கின்றதா?
அது மிகச்சிறிய விகிதம் என்று நீங்களே குறிப்பிடுகின்றீர்கள். இலங்கையில் இளவயது திருமணம் என்பது விதிவிலக்காக எங்காவது நடைபெறுகின்றதே தவிர விதியாக அவ்வாறு நடைபெறுவதில்லை; என்பதுதானே அதன் பொருள்.
அவ்வாறு விதிவிலக்காக ஒரு சிறிய விகிதத்தில் அது இடம்பெறுகிறது; என்றால் அதற்கு ஏதாவது விசேட/ விதிவிலக்கான காரணம் இருக்கவேண்டும். நீங்கள் ஒரு சமூகத்தின் தலைவர், அதன் அமானிதத்தை சுமக்கின்ற ஒருவர், அதிகாரத்தில் இருக்கின்ற ஒருவர்- எப்பொழுதாவது இந்த விதிவிலக்கிற்கான விசேட காரணத்தை ஆராய்ந்திருக்கின்றீர்களா? சமூகத்தின் எந்தமட்டத்தில் இது நடைபெறுகின்றது; என்ற தகவல் உங்களிடம் இருக்கின்றதா?
காரணங்கள்
——————
இளவயது திருமணத்தால் பல பாதிப்புக்கள் ஏற்படுவதாகக் குறிப்பிட்டீர்கள். ஆம் இந்த NGO க்களும்தான் குறிப்பிடுகின்றார்கள். அதில் முக்கியமான ஒன்று, அவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது என்பதாகும்.
ஆம் கல்வி பாதிக்கப்படுகின்றது. மறுக்கவில்லை. இங்கு இளவயதில் திருமணமுடித்ததால் கல்வி பாதிக்கப்படுகிறதா? கல்வி பாதிக்கப்பட்டதால் இளவயதுத் திருமணம் நடைபெறுகிறதா? வசதியுள்ள எந்தவொரு தந்தையோ, தாயோ தன்பிள்ளையின் கல்வியை பாதியில் நிறுத்திவிட்டு திருமணமுடித்துக் கொடுக்கமாட்டார்கள்; அதைவிட வேறு முக்கிய காரணிகள் இருந்தாலேயொழிய.
எனவே, இங்கு கல்வி பாதிக்கப்படுவது இளவயதுத் திருமணத்திற்கு ஒரு காரணம் என்றால் அங்கு ஆராயவேண்டியது; ஏன் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது; என்பதாகும். எப்போதாவது ஆராய்ந்திருக்கிறீர்களா? நியாயம் பேசுகின்றீர்கள்.
அவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது; என்றால் அங்கு பெரும்பாலும் வறுமை தாண்டவமாடுகின்றது; என்பது பொருளாகும். பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பவும் முடியாது; வீட்டில் வைத்து பராமரிக்கவும் முடியாது; பெற்றோர் கூலித்தொழிலுக்காக வெளியே செல்லும்போது அப்பிள்ளையின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகின்றது. அந்நிலையில் அப்பிள்ளையை திருமணமுடித்துக் கொடுக்காவிட்டால் அப்பிள்ளையின் வாழ்வே வழிதவறிப்போகலாம். போனால் பதில் சொல்வீர்களா?
நமது திருமலை மாவட்டத்தில் ஓர் இளவயது சகோதரி வயதை கூடுதலாக குறிப்பிட்டு சவூதிக்கு தொழிலுக்கு சென்று தன் உயிரையே பலிகொடுத்த அந்த துயர சம்பவம் நினைவிருக்கின்றதா? நீங்கள் இளவயது திருமணத்தைப்பற்றிப் பேசுகிறீர்கள். ஆனால் இளவயதில் தொழில் தேடி அக்குழந்தை வெளிநாடு சென்றதே! ஏன்? வறுமை காரணமில்லையா?
இவ்வாறு எத்தனையோ அபலை இளவயதுப் பெண்கள் வறுமையின் கொடுமையில் வாடிவதங்கி கல்வியிழந்து தவிக்கும்போது சிலருக்கு திருமணவாழ்வு எனும் அதிஷ்டம் அடிக்கின்றபோது உங்களைப்போன்ற மேட்டுக்குடியைச் சேர்ந்தவர்களும் மேற்கத்திய பணத்திற்காக பெண்ணியம் பேசுபவர்களும் அவர்களை சட்டத்தின் மூலம் தடுத்தால் சீரழியப்போவது அவர்கள் வாழ்க்கைதான்.
இன்னும்பல குடும்பங்களில் தந்தை இருக்க மாட்டான், அல்லது பொறுப்பற்றவனாக இருப்பான். தாய் வெளிநாடு சென்றிருப்பாள். குழந்தைகள் பாட்டியிடமோ உறவினர்களிடமோ வளரும். பிள்ளை வயதுக்கு வந்ததும் அதன் பாதுகாப்பு அவர்களுக்கோர் பாரதூரமான பிரச்சினையாக மாறும். அந்நிலையில் யாராவது புண்ணியவான் அப்பிள்ளையை திருமணம் முடிக்க கேட்கும்போது அதைவிட சிறந்த முடிவினை அவர்கள் எடுக்க முடியுமா? அம்முடிவை எடுக்காவிட்டால் அப்பிள்ளையின் கல்விமட்டுமல்ல, எதிர்காலமே அழிந்துபோகலாம்.
இவையெல்லாம் அறிந்தவன் படைத்தவன் என்பதால்தான் அவன் வயதெல்லைக் கட்டுப்பாட்டை வைக்கவில்லை. நீங்கள் அவனைவிட புத்திசாலியாக முயற்சிக்காதீர்கள். முடிந்தால் நீங்களும் உங்கள்மீது கருத்தியல் தாக்கம்செலுத்தும் NGOக்களும் முதலில் எங்கெல்லாம் இளவயதுத் திருமணம் நடைபெறுகின்றன? அவற்றின் பின்னணிகள் என்ன? என்பதை ஆராய்ந்து அவற்றை நீக்க வழிபாருங்கள். தானாக இன்று நடைபெறுகின்ற மிகச்சிறிய விகிதத்திலான இளவயதுத் திருமணமும் மறைந்துவிடும். மாறாக சட்டத்தை மாற்றி அவர்களின் வாழ்வை சாக்கடையாக்கிவிடாதீர்கள். அவர்களுக்கு உங்களால் உதவிசெய்ய முடியாவிட்டாலும் உபத்திரவம் செய்துவிடாதீர்கள்.
நீங்களும் இரண்டு பெண்பிள்ளைகளைப் பெற்றவன் என்ற முறையில் இந்த திருமண வயதெல்லையை உயர்த்தாமல் இருப்பதையிட்டு கவலையடைவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள்.
நீங்கள் இரண்டு பெண்பிள்ளையின் தந்தையென்ற முறையில் எவ்வாறு கவலைகொள்ள முடியும்? 12 வயதையடைந்ததும் கட்டாயம் திருமணமுடித்துக் கொடுக்கவேண்டும்; என்று சட்டம் உங்களை வற்புறுத்துகின்றதா? என்ன கவலை உங்களுக்கு.
மாறாக, இவ்வாறு இளவயதுத் திருமணம் நடக்கக்கூடிய பெண்பிள்ளைகளின் குடும்பங்களைப்பற்றி ஒரு மனிதனாக, ஒரு சமூகத்தலைவனாக கவலைப்படுங்கள். அவர்களது வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயற்சியெடுங்கள். அவர்களை இளவயதுத் திருமணத்திற்குள் தள்ளும் புறக்காரணிகளை அகற்றுவதற்கு என்ன செய்யமுடியும்; என்று யோசியுங்கள்.
முஸ்லிம் தனியார் சட்டம் சம்பந்தமாக இன்னும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றிற்கும் திருத்தங்கள் தேவை; என்று கூறினீர்கள். ஆம். உங்கள் சிந்தனைமீது செல்வாக்குச் செலுத்துகின்ற மேற்கத்திய சக்திகளும் அவர்களது உள்நாட்டு முகவர்களும் இஸ்லாம் அனுமதித்த பலதார திருமணத்தை தடைசெய்யச் சொல்கிறார்கள்.
நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு ‘ திருமணம்’ என்கின்றார்கள். நாம் இன்னுமொன்றை திருமணமென்கின்றோம். உதாரணமாக ஒரு தரப்பு பாகிஸ்தானிலுள்ள “ இஸ்லாமாபாத்தை” இஸ்லாமாபாத் என்னும்போது அடுத்த தரப்பு கல்முனையிலுள்ள இஸ்லாமாபாத்தை மனதில் வைத்துக்கொண்டு இஸ்லாமாபாத் என்பது போன்றதாகும். எனவே, முதலில் எந்த இஸ்லாமாபாத்தை யார் குறிப்பிடுகின்றார்; என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இஸ்லாத்தில் ஒரு ஆணுக்கு நான்கு திருமணமுடிக்க அனுமதி உண்டு. ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகளும் உண்டு. இஸ்லாம் அனுமதித்த கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதில் பிரச்சினை இல்லை. ஆனால் ஒரு பெண் இஸ்லாத்தில் சமகாலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணமுடிக்க முடியாது.
மேற்கத்தைய நாடுகளில் மட்டுமல்ல, மேற்கத்தைய சட்டத்தைப் பின்பற்றுகின்ற இலங்கை, இந்தியாபோன்ற நாடுகளிலும் ஒரு ஆண் எத்தனை பெண்ணை வேண்டுமானாலும் திருமணமுடிக்கலாம் ( polygamy). அதேபோல் ஒரு பெண் ஒரே சமயத்தில் எத்தனை ஆணை வேண்டுமானாலும் திருமணமுடிக்கலாம் ( polyandry). எதுவித சட்டப்பிரச்சினையுமில்லை; என்பதைப்பற்றி சிந்தித்திருக்கிறீர்களா? என்பது தெரியவில்லை.
ஒரேயொரு வித்தியாசம். அவர்கள் கடதாசியில் எழுதுவதை திருமணமென்கிறார்கள். நாம் ஒரு ஆணும் பெண்ணும் சேருவதற்கான அனுமதியை திருமணமென்கின்றோம். அவர்களைப் பொறுத்தவரை ஒரு ஆணும் பெண்ணும் சேருவது தனிமனித சுதந்திரம். குழந்தைகூட பெறலாம், தப்பேதுமில்லை. ஆனால் ஒருவருடான உறவை மட்டும்தான் கடதாசியில் ‘திருமணம்’ என்று எழுதலாம். ஒன்றுக்குமேல் எழுதினால் தண்டனைக்குரிய குற்றமாகும்.
இந்த அடிப்படையில்தான் உதாரணமாக தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர்கள் எம் ஜி ஆர், கருணாநிதி போன்றோர் ஒன்றுக்குமேற்பட்ட திருமணம் முடித்தார்கள்.அவை அனைத்தும் அவர்களின் சமய, கலாச்சாரப்படி முறையான திருமணங்களே! தவறேதுமில்லை. ஆனால் ஒன்றைத்தான் கடதாசியில் எழுதிவைத்துக்கொண்டார்கள். அதனால் அவர்களை சட்டம் கண்டுகொள்ளவில்லை. இரண்டையும் எழுதியிருந்தால் நிலைமையேவேறு.
நாம் ஹலாலாக, நம்மைப் படைத்தவன் சொல்முறையில் உரிய நிபந்தனைகளைப் பூர்த்திசெய்து அத்திபூர்த்தாப்போல் எங்காவது ஒன்றிரண்டு பல்தார திருமணம் நடந்தால் அது நியாயமற்றது; என்கிறார்கள், இந்த மேற்கத்தைய சக்திகள். நீங்களும் அதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
இதேபோன்றுதான் பெண்காதி நியமிக்கவேண்டும்; என்று கேட்கிறார்கள். அதுதொடர்பாக, ஏற்கனவே விரிவான கட்டுரை எழுதியிருக்கின்றேன்; வாசித்துப் பாருங்கள்.
எனவே, மக்களின் வாக்குகளைப்பெற்ற ஒரு சமூகத்தலைவன் என்றவகையில் அம்மக்களின் மார்க்க, சமூக, கலாச்சார பாரம்பரியங்களையும்
விழுமியங்களையும் பாதுகாப்பதும் அதைப்புரியாத மேற்கத்தைய முகவர்கள் செய்யும் விமர்சனங்களுக்கும் காத்திரமான பதில் கொடுப்பதும்தான் உங்கள் கடமையே தவிர அவர்கள் விமர்சிக்கிறார்கள்; வாருங்கள் சட்டத்தை மாற்றுவோம்; என்று கூறுவதல்ல.
ஒவ்வொருவரும் தம்பொறுப்புகளை, கடமைகளை தெரிந்துகொண்டு, புரிந்துகொண்டு இறைவனைப்பயந்து நடந்தால் சமூகம் எங்கேயோ போயிருக்கும்.