Top News

ரிஸ்கான் உள்ளிட்ட பலரை கொலை செய்தவர்கள் இவர்களே...!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதூஷை பழிதீர்க்கவே அவரது எதிரிகள் ரிஸ்கானைக் கொலைசெய்ததாக கஞ்சிபானை இம்ரான் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார். துபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு அந்நாட்டு அரசால் அண்மையில் நாடு கடத்தப்பட்ட கஞ்சிபானைன இம்ரான், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.

அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தியபோது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கஞ்சிபானை இம்ரானை மூன்று மாதங்கள் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.அதற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் புதுக்கடை ட்ரொப் மீ வாடகை வாகன சேவையை ஆரம்பித்த ரிஸ்கான் ஒரு அப்பாவி. அவரை வைத்து பணத்தை முதலிட்டு வர்த்தகமொன்றை ஆரம்பிக்க வேண்டாமென தான் மதூஷிடம் கூறியதாகவும் எனினும் அவர் அதை கேட்காமையினால் இறுதியில் மதூஷை பழிதீர்க்க அவரது எதிரிகள் ரிஸ்கானைக் கொன்றதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.‘கொத்த அசங்க’ என்பவரே ரிஸ்கானைக் கொன்றார் என்றும் அவருக்கு தங்களுடன் பிரச்சினை இருந்ததென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ரிஸ்கானைக் கொன்றவரை கழுத்தை வெட்டி மதூஷ் கொலை செய்யப்போவதாக கூறியதுடன் அவ்வாறே அவர் செய்தார் என்றும் கஞ்சிபானை இம்ரான் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் துபாய் நாட்டுக்கு மதூஷை தானே வரவழைத்ததாகவும் தெரிவித்த கஞ்சிபானை இம்ரான், துபாயில் இலங்கை நண்பர்களை அழைத்து விருந்தை நடத்த வேண்டாமென தான் எச்சரித்ததாகவும் கூறியுள்ளார்.

எனினும் தனது பேச்சை அவர் கேட்கவில்லை என்பதோடு, தன்னையும் கட்டாயப்படுத்தி விருந்திற்கு அழைத்ததாகவும் இதன் பின்னரே தான் கைது செய்யப்பட்டதாகவும் அவர் விசாரணைகளின்போது கூறியுள்ளார். துபாயிலிருந்து பொலிஸ் அதிகாரிகள் பலருடன் பேசியமை குறித்தும் வாக்குமூலம் அளித்துள்ள கஞ்சிபான இம்ரான், தமக்கு எதிரான பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புகளை வைத்து தமக்கு எதிராக செயற்பட்டு வந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை இதன்போது எச்சரித்ததாகவும் கஞ்சிபானை இம்ரான் விசாரணைகளின்போது கூறியுள்ளார்.

Previous Post Next Post